* என்னால் ஏன் அழ முடியவில்லை? *

தரைபார்த்து நீ நடந்த அன்று
எனைப் பார்த்துச் சிரித்தனவுன்
பாதங்கள்
பின்கழுத்துப் பூனைமயிர் வருட
பூச்சாரலில் மும்முடிச்சிட்ட
கணங்கள்
அக்னியை வலம்வந்து அன்றிரவில்
நம்முள் அக்னியால் எழுந்தடங்கிய
வியர்வை
அயர்வுடன் தூங்கிய பல இரவுகள்
அதைத் தொடர்ந்த பகல்
சொர்க்கங்கள்
உன் வயிற்றில் எழும்பித் தணிந்த
உயிரை மென்மையாக முத்தமிட்டதொரு
பொழுது
வலியென்று நீ சொன்ன போது
வாசலில் பதைபதைத்துக் காத்திருந்த
காலம்
'ங்கா'வெனக் காற்றிலலைந்து வந்து
ஆனந்தக் கண்ணீர் தந்த
மழலையொலி
உன்னுயிரைத் தந்து சென்றாய் நீ
எனக் கேட்டதும் மரித்த
என்னிதயம்
வாடிய மலர்க் கன்னத்தை உதடுகளின்
ஈரத்தால் உயிர்ப்பிக்கச் செய்த
முயற்சி
மறுபடியும் கண்திறவாதெனும் உண்மையை
நம்ப மறுத்துத் துடித்த
மனம்
நாவெழுந்து மேலண்ணத்திலொட்ட
செவிமடல்களில் உணர்ந்த
சூடு
தாடை கோணிக்கொள்ள உள்ளிழுத்த
தாங்கவொண்ணா உள்நாக்கின்
வலி
இன்னும் எதற்கு என்று விரக்தியுடன்
வேண்டாவெறுப்பாய் விடும்
மூச்சு
வாழ்க்கையின் விளிம்பில் நின்றுகொண்டு
வெறித்துச் சூனியத்திலுன்னைத்
தேடுகிறேன்
இன்னும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள்
என்னால் ஏன் அழ முடியவில்லை -
என்று.
***
நன்றி : மரத்தடி.காம்


5 comments:
mmmmmm .... sometimes silence can the best form of communication....
www.sethukal.blogspot.com
ரொம்ப நன்றாக இருக்கிறது.
நன்றி. வாழ்த்துக்கள்.
-ஞானசேகர்
நன்றி தெய்வா, ஞானசேகர்.
என்ன அருமையா எழுதி இருக்கிங்க சுந்தர்..
"என்னால் ஏன் அழ முடியவில்லை " - இந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
சில சமயங்களில் எனக்குள் தோன்றும் ஒரு கேள்விதான் இது. அளவுக்கதிகமான துக்கமோ.. அது என்ன உணர்வோ.. வரும்பொழுது.. அப்படியே செயல் இழந்து.. வெறுமனே வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் உள்ளுக்குள்ள எரிமலையோ.. சீரும் கடலோ.. அப்பப்பா சொல்ல முடியாது..
ஒன்று தான் கேள்வி.. "என்னால் ஏன் அழ முடியவில்லை ?"
அன்புடன்
கீதா
நன்றி கீதா.
//அளவுக்கதிகமான துக்கமோ.. அது என்ன உணர்வோ..//
ம்ம். வார்த்தைகள் தோற்கும் தருணங்கள் வாழ்வில் பல. இதற்கு மேல் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
Post a Comment