Saturday, December 17, 2005

* தட்டான் *



இறக்கைகளின் இயக்கத்தைப்
பார்க்க முடியாத வேகம்
ஊகிக்க முடியாமல்
சட்டென திரும்பி
மாறும் வழித்தடம்
ரகசியமாய்ப் பின்தொடர்ந்து
கரும்பச்சையில் நீண்டிருக்கும்
வால்பிடித்துத் தூக்குகையில்
விரலை வளைந்து
கவ்வும் சினம்
நூல்கட்டி காற்றில்லாமலும்
பறக்கும் தட்டான் பட்டம்

சிறகுகள் போல்
மென்மையான இவள்
ஊகிக்கமுடியாத தருணங்களில்
சட்டெனக் கண்சிமிட்டிப்
போகிறாள் நூல்போன்ற
என் காதலில் கட்டுண்டு
இச்சிறிய தட்டான் போல்

***

நன்றி. மரத்தடி.காம்

* என்னால் ஏன் அழ முடியவில்லை? *



தரைபார்த்து நீ நடந்த அன்று
எனைப் பார்த்துச் சிரித்தனவுன்
பாதங்கள்

பின்கழுத்துப் பூனைமயிர் வருட
பூச்சாரலில் மும்முடிச்சிட்ட
கணங்கள்

அக்னியை வலம்வந்து அன்றிரவில்
நம்முள் அக்னியால் எழுந்தடங்கிய
வியர்வை

அயர்வுடன் தூங்கிய பல இரவுகள்
அதைத் தொடர்ந்த பகல்
சொர்க்கங்கள்

உன் வயிற்றில் எழும்பித் தணிந்த
உயிரை மென்மையாக முத்தமிட்டதொரு
பொழுது

வலியென்று நீ சொன்ன போது
வாசலில் பதைபதைத்துக் காத்திருந்த
காலம்

'ங்கா'வெனக் காற்றிலலைந்து வந்து
ஆனந்தக் கண்ணீர் தந்த
மழலையொலி

உன்னுயிரைத் தந்து சென்றாய் நீ
எனக் கேட்டதும் மரித்த
என்னிதயம்

வாடிய மலர்க் கன்னத்தை உதடுகளின்
ஈரத்தால் உயிர்ப்பிக்கச் செய்த
முயற்சி

மறுபடியும் கண்திறவாதெனும் உண்மையை
நம்ப மறுத்துத் துடித்த
மனம்

நாவெழுந்து மேலண்ணத்திலொட்ட
செவிமடல்களில் உணர்ந்த
சூடு

தாடை கோணிக்கொள்ள உள்ளிழுத்த
தாங்கவொண்ணா உள்நாக்கின்
வலி

இன்னும் எதற்கு என்று விரக்தியுடன்
வேண்டாவெறுப்பாய் விடும்
மூச்சு

வாழ்க்கையின் விளிம்பில் நின்றுகொண்டு
வெறித்துச் சூனியத்திலுன்னைத்
தேடுகிறேன்

இன்னும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள்
என்னால் ஏன் அழ முடியவில்லை -
என்று.

***


நன்றி : மரத்தடி.காம்

Wednesday, December 07, 2005

* குளவி *



* குளவி *

காலையில்தான் கவனித்தேன்
வாசல் நிலைப்படியில் கூடு
ஒற்றை இருள் துளையில்
சலனங்களேதும் இல்லை

அந்திப்பொழுதில் திண்ணையில்
மங்கி எரிகிறது விளக்கு
புத்தகம் விரித்தமர்ந்ததும்
காதில் ஒலித்தது அதன் ரீங்காரம்

லேசான ஸ்பரிசத்தில் சிலிர்த்துத்
தலையுலுக்கிப் பார்க்கக் காற்றினில்
மிதந்தந்தக் குளவி

ஜிலீரென்றது அடிவயிறு
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க
நிதானம் தவறியது மனது
குதித்தெழுந்து விலகிப்
புத்தகத்தை வீசியதும் சட்டென
விலகிப் பறந்து முகத்தருகே
ரீங்கரித்தது குளவி

வீழ்த்தச் செய்த முயற்சிகள்
தோல்வியில் முடிய
தலை குனிந்து விலகி
ஓடினேன் வீட்டினுள்
கதவருகே ஒழுங்கற்ற
காற்றுப் பாதையில் சிறகடித்து
ரீங்கரித்தது குளவி

கம்பியொன்றுடன் திரும்பிடக்
கதவருகில் காற்று மட்டும்
தயங்கி வீசியது
நிலைப்படியை நெருங்கிச்
சுரண்டியதில் தேய்ந்து
வீழ்ந்தது சலனங்களற்ற
அந்தக் கூடு

பிரச்சினை தீர்ந்ததென்றாலும்
மனதில் சலனங்கள்
தலைக்குப்பின் கைகோர்த்து
திண்ணையில் மல்லாந்திட
விளக்கிலிருந்து கசிந்து வழிந்த
மஞ்சள் ஒளி ஊசியாய்
என்னுள் ஊடுருவி
உள்மனதைக் குத்தியது

புத்தகம் முகம் மூடிட
நித்திரை என்னைத் தழுவ
முனைந்த நொடியில் காதில்
ஒலித்தது அந்த ரீங்காரம்



***