Tuesday, December 26, 2006

ரேடியோவும் கொடிக்காப்புளியும்

Image and video hosting by TinyPic

'ஒக்கிட்டாச்சா இதையும்?' என்றார் அப்பா
அலங்கோலமாக தரையில் கிடந்தது
ட்ரான்ஸிஸ்டர்
கரிக்கட்டையைப் பிடித்ததில்
கருமையான உள்ளங்கை
செத்த எவரெடி பேட்டரிக் கட்டைகள்
தரையில் உருண்டு அவர்
கால்களிடம் சென்றன

இலங்கை வானொலியில்
பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்
இந்நேரம் - இங்கிட்டு
சரோஜ் நாராயண்சுவாமி
செய்தி வாசித்துக்கொண்டிருப்பார்

பேட்டரியை எத்திவிட்டு
சுருட்டி வைத்திருந்த
செய்தித்தாளை எறிந்துவிட்டு
வெளியேறினார் அப்பா
பக்கத்து வீட்டில் செய்திகள்
ஒலித்துக் கொண்டிருந்தது

ட்வைன் நூலில் கட்டிய
முள்ளை இடதோரத்திற்கு நகர்த்த
புரியாத ஒலிகள்

அவ்வப்போது கிளம்பின
இன்னும் திருகி நூலை
அக்க வேண்டுமென்று
எழுந்த ஆவலை அடக்கினேன்

அப்பா இல்லையா என்று
வாசலில் நின்றார் சம்முவம் அண்ணாச்சி
பின்னால் கூடையுடன் தயிர்க்காரி
'போன மாசம் பாக்கீ' என்றாள் சன்னமாக
பலசரக்குக் கடையிலிருந்து
சாயங்காலம் ஆளனுப்புவார்கள்
பள்ளிக்கூட பீஸ் இன்னும் கட்டவில்லை
எதிரே ரஜினி போஸ்டரில் சிரிக்க
'இன்றே இப்படம் கடைசி' இளிக்க
அய்யோ அதுக்குள்ளயா என்று
பகீரென்றது

மறுபடியும் சுவிட்சைப் போட
செய்திகள் விட்டுவிட்டு வந்தது
பத்து மணிக்கு கரெண்ட் மாற்றுவார்கள்
விளக்கு போவதற்குள் ரேடியோவை
அலமாரியில் நிற்கவைக்க வேண்டும்
அப்படியே அசங்காது ரேடியோவை அள்ளி
அலமாரியில் வைத்துத் தலையில் தட்ட
செய்திகள் சீராக வாசிக்கப்பட்டன

அப்பா வந்தார் கையில் பையுடன்
ரேடியோவை எடுத்துக்கொண்டு வெளியேறினார்
மறுநாள் தயிர்க்காரி வரவில்லை
மறுநாளும் செய்திகள் வாசிக்கப்படவில்லை
எதிரே ரஜினி வேறுபடத்திற்காக
சிரித்துக் கொண்டிருந்தார்

நாளைக்கு பள்ளிக்கோடம் போம்போது
ராமகிருஷ்ண வாத்தியார்
முட்டி போடச் சொல்லி அடிப்பார்
செக்கூரிட்டியிடம் சொல்லி
கேட்டுக்கு வெளியே நிறுத்துவார்
காம்பவுண்டு அருகில்
செவப்புக் கொடிக்காப்புளி விற்பார்கள்


சாக்கை விரித்து பலகையைத் தலைக்கு
முட்டுக்கொடுத்துப் படுக்க
சராய் பையில் தாத்தா கொடுத்த
அஞ்சு பைசா உறுத்த
சந்தோஷமாக இருந்தது

கொடிக்காப்புளி நினைப்பில்
கடைவாயில் புளித்தது

***

5 comments:

வல்லிசிம்ஹன் said...

கொடிக்காய்ப் புளியா. இன்னும் இதெல்லாம் இருக்கா.

ஜி said...

அட்டகாசம்...

ரேடியோவ வித்து அப்பாதானே காசுக் கொடுத்திருக்க முடியும். எப்படி தாத்தா உள்ள வந்தார்.

எப்டியோ கொடுக்காபுளி வியாபாரிக்கு அஞ்சு பைசா வியாபாரம்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வல்லிசிம்ஹன்

//கொடிக்காய்ப் புளியா. இன்னும் இதெல்லாம் இருக்கா.//

நா படிச்சப்ப இருந்திச்சு. இப்பவும் கிராமத்துப் பள்ளிக்கோடங்கள்ல இருக்கும்னு நம்பறேன்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

ஜி.

//ரேடியோவ வித்து அப்பாதானே காசுக் கொடுத்திருக்க முடியும். எப்படி தாத்தா உள்ள வந்தார். //

ரேடியோவ ஒக்கிட்ட பயலுக்கெல்லாம் அப்பா காசு கொடுப்பார்னு நெனக்கீஹளா? சரியாப் போச்சு.

அவரு காசு கொடுத்திருந்தா.... ம்ஹீம்... கதயே வேற.

என்ன சேட்டை பண்ணினாலும் தாத்தாவுக்கு நாம்ள்ளால் செல்லப் பேரனுங்களாச்சே! பாக்கெட் மணில்லாம் அவருதான கொடுப்பாரு?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Anonymous said...

Nalla kavidhai.. Situation and the thigs which you describe may be a very new thing to most of the present guys.. Kodukkappuli, Mullulla Radio.. etc.. Andrum, Indrum Endrum maaramal iruppadhu namma nadigharkal Posteril sirippadhu mattum.. Jeyakumar Doha