Thursday, December 28, 2006

கல்

Image and video hosting by TinyPic
கலகலப்பான படித்துறைகளில்
அறையப்படும் ஆடைகள்
நுரை தள்ளுகின்றன
கரங்கள் நீரை விளாவ
கண்களின் நோட்டம்

கலங்கியிருக்கிறது நீர்

ஆற்றின் நடுவே மேடுதட்டி
சூரியனிடம் பேசுகிறது மணல்
அவ்வப்போது கடந்துசெல்லும்
வெங்காயத் தாமரைக் கூட்டமும்
கிழிந்த ஆடைகளும்
அக்கரையில் மசமசப்பாக
மக்கள் கூட்டம்
கானல்நீரின் பின்புறம்
காட்சி நெளிகிறது

கால்களை முத்தமிடும்
மீன்கள்
மேலிருந்து சொருக்கடிக்கும்
பையன்கள்
துண்டை விரித்து மீன்பிடிக்கும்
சிறுமிகள்
கொக்குகள் போட்ட
மீன்கூடுகளைக் கொத்தும்
காகங்கள்
மணற் குழிகளில்
வெந்நீரில் தவிக்கும்
மீன்குஞ்சுகள்

எல்லா இயக்கங்களையும்
பார்த்துக்கொண்டு அமைதியாக
நீரைக்கிழித்து நிற்கிறது
துருத்திக்கொண்டிருக்கும்
அந்தக் கல்!

Image and video hosting by TinyPic

2 comments:

ஜி said...

கல்லுக்கும் உயிர் கொடுக்கும் கவிதை..

என்னோட சாம்பிள் பாக்குறீங்களா?

அந்தக் கல்
கருப்பு...

மிதந்து வருது
செருப்பு...

அங்க நிக்கிறான்
பருப்பு...

தாமரை மீது
வெறுப்பு...

தலைதொட நினைக்கும் தண்ணீருக்கு
மறுப்பு...

இதனைத்தையும் பார்ப்பதே - அதன்
சிறப்பு.

Sundar said...

ஜி.

நன்றி.

உங்க சாம்பிளும் சூப்பருங்கோ!

(கல்லால) அடிச்சுத் தாக்குங்க. :)