Thursday, December 28, 2006

கல்

Image and video hosting by TinyPic
கலகலப்பான படித்துறைகளில்
அறையப்படும் ஆடைகள்
நுரை தள்ளுகின்றன
கரங்கள் நீரை விளாவ
கண்களின் நோட்டம்

கலங்கியிருக்கிறது நீர்

ஆற்றின் நடுவே மேடுதட்டி
சூரியனிடம் பேசுகிறது மணல்
அவ்வப்போது கடந்துசெல்லும்
வெங்காயத் தாமரைக் கூட்டமும்
கிழிந்த ஆடைகளும்
அக்கரையில் மசமசப்பாக
மக்கள் கூட்டம்
கானல்நீரின் பின்புறம்
காட்சி நெளிகிறது

கால்களை முத்தமிடும்
மீன்கள்
மேலிருந்து சொருக்கடிக்கும்
பையன்கள்
துண்டை விரித்து மீன்பிடிக்கும்
சிறுமிகள்
கொக்குகள் போட்ட
மீன்கூடுகளைக் கொத்தும்
காகங்கள்
மணற் குழிகளில்
வெந்நீரில் தவிக்கும்
மீன்குஞ்சுகள்

எல்லா இயக்கங்களையும்
பார்த்துக்கொண்டு அமைதியாக
நீரைக்கிழித்து நிற்கிறது
துருத்திக்கொண்டிருக்கும்
அந்தக் கல்!

Image and video hosting by TinyPic

Tuesday, December 26, 2006

ரேடியோவும் கொடிக்காப்புளியும்

Image and video hosting by TinyPic

'ஒக்கிட்டாச்சா இதையும்?' என்றார் அப்பா
அலங்கோலமாக தரையில் கிடந்தது
ட்ரான்ஸிஸ்டர்
கரிக்கட்டையைப் பிடித்ததில்
கருமையான உள்ளங்கை
செத்த எவரெடி பேட்டரிக் கட்டைகள்
தரையில் உருண்டு அவர்
கால்களிடம் சென்றன

இலங்கை வானொலியில்
பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்
இந்நேரம் - இங்கிட்டு
சரோஜ் நாராயண்சுவாமி
செய்தி வாசித்துக்கொண்டிருப்பார்

பேட்டரியை எத்திவிட்டு
சுருட்டி வைத்திருந்த
செய்தித்தாளை எறிந்துவிட்டு
வெளியேறினார் அப்பா
பக்கத்து வீட்டில் செய்திகள்
ஒலித்துக் கொண்டிருந்தது

ட்வைன் நூலில் கட்டிய
முள்ளை இடதோரத்திற்கு நகர்த்த
புரியாத ஒலிகள்

அவ்வப்போது கிளம்பின
இன்னும் திருகி நூலை
அக்க வேண்டுமென்று
எழுந்த ஆவலை அடக்கினேன்

அப்பா இல்லையா என்று
வாசலில் நின்றார் சம்முவம் அண்ணாச்சி
பின்னால் கூடையுடன் தயிர்க்காரி
'போன மாசம் பாக்கீ' என்றாள் சன்னமாக
பலசரக்குக் கடையிலிருந்து
சாயங்காலம் ஆளனுப்புவார்கள்
பள்ளிக்கூட பீஸ் இன்னும் கட்டவில்லை
எதிரே ரஜினி போஸ்டரில் சிரிக்க
'இன்றே இப்படம் கடைசி' இளிக்க
அய்யோ அதுக்குள்ளயா என்று
பகீரென்றது

மறுபடியும் சுவிட்சைப் போட
செய்திகள் விட்டுவிட்டு வந்தது
பத்து மணிக்கு கரெண்ட் மாற்றுவார்கள்
விளக்கு போவதற்குள் ரேடியோவை
அலமாரியில் நிற்கவைக்க வேண்டும்
அப்படியே அசங்காது ரேடியோவை அள்ளி
அலமாரியில் வைத்துத் தலையில் தட்ட
செய்திகள் சீராக வாசிக்கப்பட்டன

அப்பா வந்தார் கையில் பையுடன்
ரேடியோவை எடுத்துக்கொண்டு வெளியேறினார்
மறுநாள் தயிர்க்காரி வரவில்லை
மறுநாளும் செய்திகள் வாசிக்கப்படவில்லை
எதிரே ரஜினி வேறுபடத்திற்காக
சிரித்துக் கொண்டிருந்தார்

நாளைக்கு பள்ளிக்கோடம் போம்போது
ராமகிருஷ்ண வாத்தியார்
முட்டி போடச் சொல்லி அடிப்பார்
செக்கூரிட்டியிடம் சொல்லி
கேட்டுக்கு வெளியே நிறுத்துவார்
காம்பவுண்டு அருகில்
செவப்புக் கொடிக்காப்புளி விற்பார்கள்


சாக்கை விரித்து பலகையைத் தலைக்கு
முட்டுக்கொடுத்துப் படுக்க
சராய் பையில் தாத்தா கொடுத்த
அஞ்சு பைசா உறுத்த
சந்தோஷமாக இருந்தது

கொடிக்காப்புளி நினைப்பில்
கடைவாயில் புளித்தது

***