Friday, January 29, 2010

கரட்டாண்டி


சுள்ளென்று கண்கூசும் மதிய வெயில்

இயக்கங்களை முடக்கி கானல்நீராய் ஓட
பட்ட மரக்கிளையொன்றில் அரைக்கண்
நித்திரையிலிருக்கிறது அந்தக் கரட்டாண்டி

கிளை இலைகளின் நிழல் நகர்ந்தபின்னும்
வெயில் உறைக்காது அசைவின்றி
இருக்கிறது கரட்டாண்டி

கரட்டாண்டியாய் பிறந்திருந்தால்
எப்படியிருக்கும் என
அசை போடுகிறது மனது
அவ்வளவாய் பசிக்காதோ?

நிழல் தேடி நகருமுன் சிறு
கல்லெறிந்து பார்த்தேன்
கரட்டாண்டி பயமின்றி இருந்தது

தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
சிங்கம்போல் பிடரி சிலிர்த்து
உறும வேண்டிய வேளைகளில் கூட
கரட்டாண்டியாய் அசைவற்றிருக்க
வேண்டியதாகிவிடுகிறது

முரண்களுடன் ஓடத் தேவையற்ற
கரட்டாண்டி அதிர்ஷ்டசாலிதான்!

***

5 comments:

Sangkavi said...

//தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
பிடரி சிலிர்த்து உறும வேண்டிய
வேளைகளில் கூடகரட்டாண்டியாய்
அசைவின்றி இருக்க வேண்டியதாகிறது//

அழகான, ஆழமான வரிகள்...

மாதவராஜ் said...

வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் செதுக்கியும், சுருக்கியும் இருந்தால் கவிதை ரொம்ப நல்லாயிருக்கும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

Sangkavi

நன்றி.

மாதவராஜ். நன்றி. ஆமாம். வடிவின்றிக் கரடுமுரடாகக் கரட்டாண்டிபோலத்தான் இருக்கிறது கவிதை :-)

முயற்சி செய்கிறேன் - தொடர்ந்து.

ஜெயக்குமார் said...

//தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
பிடரி சிலிர்த்து உறும வேண்டிய
வேளைகளில் கூடகரட்டாண்டியாய்
அசைவின்றி இருக்க வேண்டியதாகிறது//

நிஜத்தைச் சொல்லும் வரிகள்..ரசித்தேன்..

கவிதை தசாவதாரம் கமல் வசனம் போல இருக்கிறது.

கவிதை நல்லா இல்லைனு சொல்ல வரலை.. ஆனா இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம்னுதான் சொல்றேன்..

அடிக்க வராதீங்கப்பூ..

:-)

வற்றாயிருப்பு சுந்தர் said...

//கவிதை நல்லா இல்லைனு சொல்ல வரலை.. ஆனா இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம்னுதான் சொல்றேன்.//

அது சரி. நான் கவிதைன்னு எங்கங்கே சொன்னேன்? அகவிதைன்னுதானே சொல்றேன். நீங்களா கவிதை அது இதுன்னு கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்னங்க செய்ய முடியும்? ;-)