Wednesday, February 14, 2007

இது ஒரு பனி மாலைப் பொழுது

Image and video hosting by TinyPic
வெண்மணல் போலப் பொழிகிறது வெண்பனி
மின்கம்பி மீது உறக்க நிலையில் கருங்காகம்
அந்திப் பொழுதில் சிவந்த கீழ்வானம்
கண்சிமிட்டத் துவங்கின மின்விளக்குகள்
சாலைகளில் சேறுபோலப் பனி
மந்தமாய் நகரும் வாகனங்கள்
தொழிற்சாலைப் புகை சத்தமில்லாது எழ
எந்திரங்கள் இரைச்சலாய் இயங்கின உள்ளே
பிரமித்து உறைந்திருக்கும் ஏரியின் மீது
நடைபோடுகின்றன வாத்துகள்
கொக்குகள் கால் தூக்காது காத்திருந்தன
பனிக்கட்டியின் கீழ் நீந்தும் மீன்களுக்காக
உடல் முழுதும் உடை மூடி
தூண்டிலுடன் காத்திருக்கிறார் முதியவர்
மெதுவாய் காட்சிகளைக் கடந்து செல்கையில்
ஊரில் இந்நேரம் விடிந்திருக்குமாவென்றும்
மார்கழிக் குளிர் துவங்கியிருக்குமாவென்றும்
உள்ளே ஓடின யோசனைகள்
வீட்டை இருள் போர்வை சூழத்துவங்க
இலையற்ற மரங்களில் ஆரவாரம் அடங்கி
லேசாய் பயமுறுத்துகிறது நிசப்தம்
பனித்தொப்பி போட்டிருக்கிறது தபால்பெட்டி

இன்றும் கடிதம் வரவில்லை.

***