வாய்விட்டழுது

வாய்விட்டழுது பல வருடங்களாகின்றன
அழுகையில் என்ன சுகம்? ஆனால்
அழாமலிருக்கும் வாழ்க்கை
சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறது
துக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டு
கால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டு
சட்டென்று முகம் திருப்பி
விழிநீரைத் தேக்கியதும் உண்டு
அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லை
எது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்
எள்ளிநகையாடுகிறது மனக்குரங்கு
இப்போதைய துக்கத்திற்கு வாய்விட்டழவேண்டும்
ஆனால் இன்னும் அழ முடியவில்லை
உண்மையைச் சொன்னால் உறக்கம் வருகிறது
இரவுக் கனவுகள் பனியாய் இறங்குகையில்
இருட்டுப் போர்வையைப் போர்த்தி
அவற்றைத் துரத்துகிறேன்
விடியலில் கனவுகளின் மிச்சங்களிருப்பதில்லை
உறக்கம் கலைந்து விழித்திருந்த இரவுகளில்
உலகின் நிசப்தத்தில் ஆழ்ந்து லயித்திருக்கிறேன்
என்னிடம் ஒரு திட்டமுண்டு
தொலை தூரத்தில் தெரிகிறதே அக்குன்று
சிவந்து, கருத்து, ஒளிர்ந்து, இருண்டு
என்று உணர்வுகள் தளும்பக்
குவியலாக நிற்கிறது அது
ஞாயிறன்று ஞாயிறு எழுமுன்
அங்கு சென்றுவிடவேண்டும்
குன்றின் மீதேறி உச்சியடைந்ததும்
உலகத்தை அங்கிருந்து பார்க்கவேண்டும்
சிறுமதி படைத்த மனிதரெல்லாம்
சிறிதாகத் தெரிவதை ரசிக்கவேண்டும்
ஓங்கிக் குரலெடுத்து அழுதுகொண்டு
ஒற்றை வரிக் கவிதை போலச் செல்லும்
ஒய்யார ரயிலைப் பார்வையிலிருந்து
மறையும்வரைத் தொடரவேண்டும்
நாள் கரைந்து கூடு திரும்பும்
பறவைக்கூட்டத்தைப் பார்க்கவேண்டும்
அந்திப் போர்வை குன்றைத் தொடும்போது
தொலைந்த வெளிச்சத்தைத்
தேடிவரும் இருள்
உச்சியில் தனித்திருக்கும் பாறைமீதேறி
தனிமையில் தனியனாக
ஆரவாரங்கள் அடங்கக் காத்திருந்து
யாரும் பார்க்காத கேட்காத அவ்விடத்தில்
முன்பின் மறைப்புகளன்றி பரந்து விரிந்த
நிர்வாணப் பிரபஞ்சத்தைப் பார்த்துப் பின்
விண்ணோக்கி விழிகள் மூடி
வாழ்வில் சேர்ந்துவிட்ட துக்கங்களையெல்லாம்
அடிமனதிலிருந்து எக்கிக் கிளறி
நிலைகுத்திய காற்றை அசைக்கும்வண்ணம்
பெருங்குரலெடுத்து அழவேண்டும்
மூச்சு தீரும்வரை, துக்கம் வற்றும் வரை.
காற்றில் கரைந்துபோகட்டும் என்னழுகை
விடியலின் வேதனை வெளிச்சம்
வாழ்வில் பரவும் மற்றுமொருநாளை
நான் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது
பழைய நாட்களின் மரணம்
நினைவுக் கிணற்றில் படிமமாகிவிட்டது
இக்குன்று மட்டும் இல்லாதிருந்தால்
என்ன செய்வேன் என்று யோசித்ததில்
துக்கம் தொண்டையை அடைக்கிறது - ஆனால்
வாய்விட்டழத்தான் முடியவில்லை!
***


0 comments:
Post a Comment