Friday, November 21, 2008

இடம் காலம் மாற்றம்



மரத்தின் கடைசி இலையும் உதிர்ந்தாகிவிட்டது
இப்போது பறவைக்கூடுகளோடு மரம் பின் மறைந்திருந்த
வீடுகளும் வாகனங்களும் தெரிகின்றன
சோம்பேறிச் சூரியன் சீக்கிரமே ஓடிவிடுகிறான்
குளிர் ஊடுருவிக் குத்துகிறது விலாவை
ஏரி உறைந்திட வீட்டினுள் எண்ணையும் உறைந்தது
கலைந்த படுக்கையில் போர்வைக் குவியலை
விலக்க மனமில்லாது கண்மூடி விழித்திருக்க
துவங்கும் நாளை எதிர்நோக்கவேண்டிய கட்டாயத்தில்
உடலைத் எழத் தூண்டித் துரத்துகிறது மனம்

சாலையில் மந்தமாக வாகனங்கள் நகர
அடுக்கு உடைகளில் நீராவி மூச்சு விட்டு
சோம்பி நடக்கிறார்கள் ஜனங்கள்
காகங்கள் எதற்கோ கரைகின்றன - வாத்துகள்
ஏரியை நோக்கி எழும்பிப் பறக்கின்றன

மாற்றங்கள் சுழன்றடிக்கும் வெளியுலகிலிருந்து
சுடுங்காற்று உலவும் அலுவல அறைக்குள் புகுந்து
கம்பளியாடை துறந்து இருக்கையில் அமர
மாற்றமில்லா அலுவல்களைப் பற்றிப் பிடித்து
அன்றைய பொழுது நகரத் துவங்குகிறது
இன்றும் மற்றுமொரு நாளாக.

0 comments: