ஒற்றை நிலா

முழுநிலா ஒளிர இருளில் நிழலாகச்
சத்தமின்றிப் பறக்கின்றன வவ்வால்கள்
ஆடாதிருக்கின்றன மரங்கள்
வைரக் கண்களுடன் மாமரப் பொந்தில்
அமர்ந்திருக்கிறது ஆந்தை
மண்வெளிகள் சலனமற்றிருக்கப்
புதர்களுக்கிடையே ஓடுகிறது நரி
மெதுவாய் அடிவைத்துப் பாய்ந்து கவ்விய
எலியுடன் தாவி மறைகிறது கரும்பூனை
தாமதமாக கூடு திரும்பும் பறவைக் கூட்டம்
மயானத்திலிருந்து மெல்லியதாய்
உயர்ந்தெழும்புகிறது புகை
என் காலடியைப் பற்றிக்கொண்டு
கூட வருகிறது நிழல்
ஒற்றைகளாய் நானும் உயரே நிலாவும்
ஊருறங்கும் நடுநிசியில் திக்கற்று
நடக்கின்றோம் மௌனமாக
***


0 comments:
Post a Comment