Monday, December 29, 2008

உயிர்மெய்



கருங்கூந்தல் அலையாய் இறங்க
கன்னக்கதுப்பு பளபளக்கிறது
மின்னும் கண்களில் சிரிப்பு
மிருதுவான நெற்றி மென்மையாய்
கேட்கிறது ஓர் ஈர முத்தத்தினை
தொடச் சிவக்கிறது காது மடல்கள்
கச்சிதமாய் மூக்கின் கீழ்
கவ்வச் சொல்லும் இதழ்கள்
கழுத்தில் துவங்கி இடையில்
முடியும் அபாய வளைவுகள்
*
என் வார்த்தைக் கையிருப்பு
இவ்வளவேயானாலும்
எனக்குத் தெரியும்.
மொழியின் எல்லைகள் தொட்ட
புலவர்கள் முயன்றாலும் கூட
கடலளவு வார்த்தைகளைத்
தொடுத்து வர்ணித்தாலும்
திருப்தியின்மையை மட்டும்
தரும் உன் அபார அழகு என
*
வார்த்தைகள் நேர விரயமென
விரைந்துனை நெருங்கியணைக்கிறேன்
ஓரணைப்பில் உலகம் மறக்கிறேன் - உன்
ஒரு முத்தத்தில் மொத்தமும் உணர்கிறேன்
முத்தமா அது?
ஆழ்கடலில் முத்தெடுக்கும் உத்வேகத்தில்
உடலெங்கும் மின்சாரம் ஓடச் செய்யும்
பரவச இழைப் பின்னல் அது
*
சர்ப்பங்களாய் இழைந்து இணைந்து
முயங்கும் அம்மணித்துளிகளில்
மெய்மறந்து அசையாதிருக்கிறது காலம்
கடிகாரம் நின்ற அவ்விடைவெளியில்
உயிர்மெய்யிரண்டும் கலக்கும்
இடைவெளியற்ற அவ்வியக்கத்தைத்
தொடரத் துடிக்கின்றன மனங்கள்

***

Wednesday, December 24, 2008

ஒற்றை நிலா


முழுநிலா ஒளிர இருளில் நிழலாகச்
சத்தமின்றிப் பறக்கின்றன வவ்வால்கள்
ஆடாதிருக்கின்றன மரங்கள்
வைரக் கண்களுடன் மாமரப் பொந்தில்
அமர்ந்திருக்கிறது ஆந்தை
மண்வெளிகள் சலனமற்றிருக்கப்
புதர்களுக்கிடையே ஓடுகிறது நரி
மெதுவாய் அடிவைத்துப் பாய்ந்து கவ்விய
எலியுடன் தாவி மறைகிறது கரும்பூனை
தாமதமாக கூடு திரும்பும் பறவைக் கூட்டம்
மயானத்திலிருந்து மெல்லியதாய்
உயர்ந்தெழும்புகிறது புகை
என் காலடியைப் பற்றிக்கொண்டு
கூட வருகிறது நிழல்

ஒற்றைகளாய் நானும் உயரே நிலாவும்
ஊருறங்கும் நடுநிசியில் திக்கற்று
நடக்கின்றோம் மௌனமாக

***