மாற்றம்

நாள்தோறும் சென்று வரும் அதேசாலைதான்
அவ்வப்போது செப்பனிடப்பட்டு விரிவாக்கப்பட்டு
அதன் தோற்றம் மாறிக்கொண்டேயிருக்கிறது
போக்குவரத்து விளக்குகள் நிறம் மாறுகின்றன
வாகனங்கள் நிற்கின்றன, நகர்கின்றன, விரைகின்றன
இரு சக்கர வாகனங்கள் ஊடறுத்துச் செல்கின்றன
எப்போதாவது சில மிதிவண்டிகளும்கூட
நடைபாதையில் பாதசாரிகள் விரைகிறார்கள்
கடைகளுள் நுழைந்து வெளிவருகிறார்கள்
வியாபாரம் நடக்கிறது, மந்தமாகிறது, பரபரப்படைகிறது
மழை, பனி, வெயில் என்று வானிலை
மாறிக்கொண்டேயிருக்கிறது தினமும்
மூலையில் மெதுவாக எழும்புகின்றது
புதிய கட்டிடமொன்று
காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன
கழுத்தில் அட்டையுடன் கையேந்தி
இருளடைந்த முகத்துடனிருக்கும் அந்த
உறையுளற்ற பெயரற்ற மனிதனைத் தவிர
***


1 comments:
இந்தப் படத்தில் இருப்பது உண்மையா?? இவ்வளவு மோசமா நிலைமை??? வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும்வரை அரசு காசு தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே.. இல்லையா??
வெட்கம் தாளாமல் முகத்தை மறைத்து யாசகம் கேட்கும் அவரைப் பார்க்க துக்கம் மேலிடுகிறது. அதிலும் அட்டையில் உள்ள வாசகம் பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்ற நமது மூதாதையரின் வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது. ஜெயக்குமார்
Post a Comment