Monday, February 09, 2009

சுதந்திரச் சிறை



கழுத்துச் சங்கிலியிலிருந்து விடுபட்டதும்
ஜிம்மிக்குத் தலைகால் புரியவில்லை
தாவிக் குதித்து வீடு முழுதும் ஓடியது
உடல் வளைத்துக் கால்களையுரசி
வாலைச் சுழற்றிச் சுற்றி வந்தது - என்
காலணியைக் கவ்வி எம்பிக் குதித்தது

இப்போது அதன் எல்லை திண்ணையோடு
நிற்காமல் வீடு முழுதும் பரந்து விரிந்துவிட்டது
வாசற் கதவில் எழும்பிக் கால்களை வைத்து
வீதியில் போவோர் வருவாரைப் பார்த்துப்
பெருமையாகக் குரைத்தது ஜிம்மி
நான் புன்னகைத்துவிட்டு சாய்வு நாற்காலியிலமர்ந்து
விட்ட இடத்திலிருந்து செய்தித்தாளைத் தொடர்ந்தேன்
சுதந்திரம்தான் ஒரு ஜீவனுக்கு எத்தகைய
உற்சாகத்தைத் தந்துவிடுகிறது!

கழுத்துச் சலங்கைகள் கலகலக்க
கடந்து போனது மாட்டு வண்டியொன்று
பின்னே குழந்தைகள் நிரம்பிய
ரிக்‌ஷாவும் ஒரு ஆட்டோவும் தொடர
கதவில் கட்டிய பையில் பால்காரன்
பாக்கெட்டுகளைப் போட்டுவிட்டுப் போனான்
ஜிம்மியின் வாலாட்டமும் குரைப்பும் நிற்கவேயில்லை

எதிர்வீட்டு முன் விளக்குக் கம்பத்தில் தோன்றியது
அந்தக் கரிய தெருநாய்
கழுத்துப்பட்டை எதுவுமில்லா முகவரியற்ற
நாய் அது
காலைத் தூக்கிக் கம்பத்தில் சிறுநீர் கழித்தது
ஓரமாய்க் கிடந்த வாழையிலையைப் பிரித்து
முகர்ந்து லேசாக நக்கியது - பின்பு
விறுவிறுவென்று என் வீட்டை நோக்கி வந்தது

ஜிம்மியைக் கண்டதும் ஒருமுறை திடுக்கிட்டது அது
ஜிம்மியும் அதுவும் முகர்ந்துகொண்டன - பின்பு
அது பின்னகர்ந்து எங்கோ ஓடிப் போனது

சமீபத்திய கொண்டாட்டத்தை நிறுத்தி
ஜிம்மி மெதுவாக உள்ளே நடந்துவந்தது
என் காலடியில் நின்றது - ஒருமுறை
தன்னைச் சுற்றிவிட்டு அமர்ந்து
முன்னங்கால்களின் மீது தலையைச்
சாய்த்துக்கொண்டது
வீட்டினுள் மௌனம் நிரம்பியிருக்க
என் விழிகள் வாசிப்பைத் தொடர்ந்தன

***

0 comments: