அதிகாலைக் கனவுகள்

இரவுகளின் நீண்ட கனவுகளைவிட
அதிகாலைக் கனவுகள் எப்போதும்
என்னை ஆச்சரியப்படுத்துபவை
அவற்றில்தான் நான் கற்பனைகளின்றி
வாழ்வதாகத் தோன்றும்
நனவாக உணரவைக்கும் கனவுகளவை
அவற்றில் நான்
திடீர் பணக்காரனாகிவிடுகிறேன்
பறவையைப் போலப் பறக்கிறேன்
விலையுயர்ந்த வாகனத்தில் பயணிக்கிறேன்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டுகிறேன்
காதலியைப் பொது இடத்தில் முத்தமிடுகிறேன்
நினைத்ததை அடுத்த கணமே பெறுகிறேன்
மரணமற்ற வாழ்வைப் பெறுகிறேன்
கடவுளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்
ஆனால் அவை சுகங்களை மட்டும்
எப்போதும் தந்துகொண்டிருப்பதில்லை
சில நேரங்களில் அவற்றில் நான்
அதல பாதாளத்தில் அலறி விழுந்திருக்கிறேன்
விபத்துக்குள்ளாகியிருக்கிறேன்
பேரிழப்புகளைச் சந்தித்திருக்கிறேன்
ரத்தசொந்தங்களின் மரணங்களையும் அதன்
வேதனைகளையும் அனுபவித்திருக்கிறேன்
இவ்வளவு ஏன்
நானே என் மரணத்தைப் பார்த்திருக்கிறேன்
இப்படிச் சுகதுக்கங்கள் மாறிமாறி வரும்
அதிகாலைக் கனவுகளில் உணர்வுகள் உந்தப்பட
தூக்கத்தில் சிரிப்பதும்
அழுது அரற்றுவதுமுண்டு
அப்போதெல்லாம் பயந்து எழுப்பும்
மனைவியைப் பார்க்க வெட்கமுற்று
தூங்குவது போல நடிப்பதுமுண்டு
கலைந்துவிட்ட கனவுகளை
நினைவுகளில் ஒன்றுசேர்க்கக்
கண்மூடி அசைபோடும் தருணங்களில்
ஒரு கவிதையைக்கூட எழுதிவிடுவதுண்டு
***


1 comments:
கனவுகளின் இயல்புகளை ( பொதுவான) சொல்ல முனைந்திருக்கிறீர்கள். அந்த விதத்தில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள்.
ஏன்யா, இதுக்கெல்லம் ஒரு கவிதையா என யாரும் கேட்கும் முன்னரே கடைசி வரியில் பதிலும்..
:-)
Post a Comment