Monday, February 22, 2010

சாலை



சேவலுக்கு முன்பாக வந்து
தெருமுனையில் நிலைகொண்ட
கலவை இயந்திரத்தின் கூவலில்
விழித்துக்கொண்டது தெரு
வேலையாட்கள் மும்முரமாக
வேடிக்கை பார்த்தது தெரு
வெளியே நின்ற சிறு வாகனங்கள்
வீட்டுக்குள் அலறிப் புகுந்துகொள்ள
பெரிய ஊர்திகள் அடுத்த தெருவுக்குத்
இடம் பெயர்ந்தன
மனித வாகன நடமாட்டமின்றி
வெறிச்சோடியது தெரு

கற்களையும் கருஞ்சாந்தையும் கலந்து
சரளைக் கற்களைப் பரப்பி ஊற்ற
கடமுடவென ஒலியெழுப்பிப்
புகை பரவ வீதியுலா சென்றது
கல்லுருளை வாகனம்

இரைச்சலும் சத்தங்களும் 
மாலையில் ஓய்ந்துவிட
வாசல்களை இணைத்து
தெரு நெடுக நீண்டது
அந்தக் கரிய சாலை

திண்ணைப் படியிலமர்ந்து
கற்கள் புதைந்து பளபளத்த
அச்சாலையைப் பார்த்தேன்
இத்தனை நாள் பழகிய
மண்சாலை போயிற்று
இனி
கட்டைவிரல் நகம்பெயராது
கண்ணாடிச் சில்லுகள் குத்தாது
சேறு படாது உடைகளில்
கோவில் தேரிழுப்பதும் சுலபம்
குண்டுகுழிகளற்ற சீரான சாலையில்
வேகமாகச் சைக்கிள் விடலாம்
கிராமம் சீக்கிரமே டவுனாகப் போகிறது
எனக் கற்பனைகள் பரவசமூட்டின

பாதம் குறுகுறுக்கப் பார்த்தால்
கூரையிலிருந்து வரிசையாய்
திண்ணை மூங்கில் தட்டியில்
இறங்கிய பிள்ளையார் எறும்புகள்
தார்ச்சாலை விளிம்பில்
வரிசை கலைந்து குழம்பி நின்றன
வழக்கமாகக் தெருவின் குறுக்காகத்
தாவியோடும் பக்கத்துவீட்டுப்
பூனை படியில் தயங்கியிருக்க
வண்டி பூட்ட இழுத்தால் வராமல்
சண்டித்தனம் செய்து தெருமுனையில்
நின்றது அந்தக் காங்கேயக் காளை

மண்சாலை காணாத மயக்கம் போலும்
நாளாக நாளாகப் பழகிவிடும் எனப்
புன்னகையுடன் எழுந்து திரும்ப
கண்ணில் பட்டது படியோரமாய்
புதைந்திருந்த அந்தக்
காகிதக் கப்பல்!

***



2 comments:

ஜெயக்குமார் said...

படிமம் நன்றாக வந்திருக்கிறது, சொல்லில் குற்றமில்லை, பொருளில்தான் குற்றமிருக்கிறது என்றெல்லாம் படம் போடமாட்டேன். சாலை போடுவதை ஒரு சிறு கவிதைக்குள் அடக்கி அதன் மூலம் வாயில்லாப் பிராணிகளின் தயக்கம் மற்றும் மண்சாலையிலிருந்து உயிர்ப்பு தொலைந்ந்து போனதை அழகாய் சொல்லிச் செல்கிறது கவிதை.. நன்று. ஜெயக்குமார்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in