Wednesday, March 03, 2010

பாலம்



நேற்றும் நல்ல மழை பெய்தபோதும்
கற்குவியலும் பாறைகளும்
முற்புதர்களும் நீர்த்தொட்டிகளும்
குழந்தைகளும் ஆண்களும் பெண்களும்
கொடிகளில் வண்ண ஆடைகளும்
கழுதைகளும் நாய்களும் பன்றிகளும்
ஓரிரு லாரிகளும் மாட்டுவண்டிகளும்
மனிதக் கழிவுகளும் குப்பைகளும்
நிரம்பியிருக்க
இடமில்லாமல் நரம்பு போல
சீரற்று கற்றையாய் ஓரமாய்
தங்கித் திணறி ஓடுகிறது
மழைநீர்

போனவருடம்வரை கூட
மணல் நிறைந்திருந்ததைப்
பார்த்த ஞாபகம்

பாலத்திருந்து பார்த்தால்
நதியின் அடையாளங்கள்
எதுவமற்று ஊர் போலவே
காட்சியளிக்கிறது
வைகையூர் என்று பலகை
மாட்டாதது மட்டும் பாக்கி

மேம்பாலத்திற்குக் கீழே
தரைப்பாலமொன்று

சுட்டெரிக்கிறது வெயில்
உச்சியிலும் உள்ளங்காலிலும்
சூடு தகிக்க நடக்கத் துவங்கினேன்
பாலங்களின் கேலிச் சிரிப்புகள்
முதுகில் தகிக்கத் துவங்கின

***

0 comments: