Monday, April 05, 2010

சுமை


மண்டியிட்டுக் கிடக்கும் வண்டிமுன்
அவிழ்ந்த காளை
சாணக் காலணியோடு வாலாட்டி
ஈக்களை விரட்ட முயல்கிறது
விடுவதாய் இல்லை ஈக்கள்
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுகிறது
ஈக்கள் கடிக்குமிடத்தில்

கொம்புகளுக்கிடையே அமர்ந்து
கொத்துகிறது காகமொன்று
காலையில் தின்ற தீவனம் அசைந்து
நுரையாக வழிகிறது வாயோரம்
வண்டிக்காரன் சத்தத்தைக் காணோம்
சத்தம் வாங்கிவரச் சென்றிருப்பானோ

வெயில் வாட்டுகின்றதைப் பொருட்படுத்தாது
வறட்டி தட்டுகிறாள் கிழவி
வண்டி பின்னால் தொங்கி
ஊஞ்சலாடுகிறார்கள் சிறுவர்கள்
ஓரமாய் வண்டியேறக் காத்திருக்கும்
நெல் மூட்டைகளைப்
பளபளக்கும் கருவிழிகளால்
பார்த்துவிட்டு முடியாதென்பதுபோல்
தலையாட்டக் கலகலவென
ஒலிக்கின்றன கழுத்துமணிகள்

தலைப்பாகை கையில் குச்சி வாயில் புகை
மடித்துக்கட்டிய வேட்டியுடன்
வந்துவிட்டான் வண்டிக்காரன்
ஆட்கள் மூட்டைகளையேற்றத் துவங்க
இன்னும் தலையாட்டிக்கொண்டிக்கிறது
மாடு!

***

0 comments: