Friday, August 13, 2010

படியில் விழும் வெளிச்சம்


மூலையில் முடங்கியிருக்கும் என்னுடன்
கால்நீட்டியிருக்கிறது என் கைத்தடியும்
வெளியே வெளிச்சம் கண்கூசுகிறது
தினமும் அதுதான் கண்விழிக்கச் செய்கிறது
வாசற்படி வழியாக நீண்டு ஊர்ந்து விரிந்து 
உள்ளே தரையில் விழுந்து கிடக்கும் அது

கைத்தடியைத் தட்டி அதையருகில்
வரச்சொல்லிப் பார்த்திருக்கிறேன்
பதில்சொல்லாது கிடக்கும் வெளிச்சம்
காலம் கரையப் பின்வாங்கிச் சுருங்கி
கதவு நிலையில் நின்று வெளியேறிப்
போய்விடும்

சில நேரங்களில் தவிட்டுக் குருவிகள்
ஜன்னலில் நிழலாக அமர்ந்து 
காகங்களின் கரைதலுக்குச் 
சிறகு குலுக்கிப் பறந்து போகும்

வெளியுலகின் இயக்கங்கள் தொடர
நானும் என் கைத்தடியும் மூலையில்
என்றாவது வெளிச்சத்தின் கைப்பற்றக் 
காத்திருக்கிறோம்

***

1 comments:

மாதவராஜ் said...

அற்புதம் சுந்தர்.
சந்தோஷமாயிருக்கிறது ஒரு நல்ல கவிதையைப் படித்த திருப்தியுடன்.