Friday, August 13, 2010

இலையுதிர் காலம்


தீப்பிடித்தாற்போலிருக்கின்றன மரங்கள்
சரசரவென்று ஒலியெழுப்பும்
இலைச்சருகுகள் மீது நடக்கையில்
குளிர்ந்து வீசுகிறது காற்று
கழுத்துப்பட்டையை நிமிர்த்திக்
கைகளைச் சட்டைப்பைகளில் திணித்து
இதம் தேடி நடக்கின்றேன்

இலைகள் மொத்தமும் உதிர்ந்து
எலும்புக்கூட்டு மரங்கள்
அசைவற்ற கல்லறைகளாய்
மோன நிலையில் நிற்கின்றன

எப்போதாவது தலைகாட்டும் சூரியனின் கதிர்கள்
இலைகளற்ற மரக்கிளைகளினூடே பாய்ந்து
இன்னும் அதிகமாக வெளிச்சமாக்க
வந்தே வந்துவிடும் பனிக்காலம்

பருத்தி அறுவடைக்காலம்போல
பஞ்சுப் பொதிகளாய் விழும் பனி
மாசுக்களைத் துடைத்தெடுத்து
நிறங்களை மறைத்து எங்கெங்கும்
வெண்போர்வை போர்த்திவிடும் பனி
நீராவியாய் வெளிவரும் மூச்சுக் காற்று

கால்சராய்ப் பட்டிகளையும்
கனத்த காலணிகளையும்
ஏமாற்றி நுழையும் பனித்துளி
உடனுருகி உள்ளங்காலில் சில்லிக்கச்
சட்டென இயற்கைமேல் எழும் கோபம்
அப்பனித்துளி வாழ்ந்த கணமே வாழ்ந்து
இலையுதிர்வது போல மனதிலிருந்து உதிரும்

மனதின் கடந்த சில நினைவுகள் மட்டும்
இலைகள்போலல்லாது உதிர்வதேயில்லை

***

3 comments:

மாதவராஜ் said...

இதையும் ரசித்தேன்.
வரிகளோடு பயணம் செய்ய முடிகிறது.
வாழ்த்துக்கள்.

v said...

Yes , i go with what Mr. Mathavaraj has commented.very beautifull...Every Kavithai of yours leaves a good feel after reading it....
best wishes,
durga.v

Selvam Muniyandi said...

hey super boss. i really like this.

my blog. i have some kavithai.
http://alanselvam.blogspot.com/
http://alanselvampunchdialogues.blogspot.com

plz check and give your comments