இயல்புக் கலைப்பு
அதிவிரைவாய் வந்த கருமேகக்கூட்டம்
கூடாரமாய் விரித்துச் சூழ
இருளடித்து ஓடி மறைந்தது சூரியன்
சடசடவென கண்ணாடியை அறையும்
மழைத்துளிகளைத் துடைத்தெறியும்
நீர்துடைப்பான்கள் படபடக்கச்
சாலைகளில் விரைகின்றன வாகனங்கள்
குடைகள் விரித்தும் கூரைதேடியும்
ஓடுகின்றது ஜனக்கூட்டம்
தூரத்து வானில் ஒளிக்கம்பியாய்
இறங்கித் தழுவிய மின்னலின்
முத்தச்சூடு தாங்காது பற்றியெரிகிறது
தென்னைமரம் - பின் நொடிகள்
தாமதித்துச் செவிகளில் மோதுகிறது
இடியின் ஆவேசம்
சிலகணங்களே நீடித்ததந்த
இயற்கையின் இயல்பு கலைப்பு
யாரோ கையசைத்தாற்போல
சட்டென எல்லாமும் நிற்க
கலைந்து கரைந்தன மேகங்கள்
அவசரமாய் வானவில்லொன்றுடன்
வெளிப்பட்டுச் சிரிக்கிறான் சூரியன்
எதுவும் நடவாதது போல் எல்லாம்
வழமையாகக் காட்சியளிக்க
ஏரிமேல் அலறிப் பறந்து போகின்றது
குழம்பிய வாத்துக் கூட்டமொன்று
சாலையில் மிச்சமிருக்கிறது
மழையின் ஈரம் மட்டும்!



0 comments:
Post a Comment