படித்துறை
படித்துறைப் பெரும்படிகளும்
பிள்ளையாருக்குக் குடைபிடிக்கும்
ஆலமரமும்
அமைதியாய் நிற்கின்றன
இளமைக் காலத்தில்
நுரை ததும்பி ஓடியிருக்கிறது
அந்த ஆறு
வெங்காயத் தாமரைக்கூட்டம்
ஒய்யாரமாய் மிதந்து செல்ல
வெள்ளத்தில் வீழ்ந்த மரங்களில்
தொத்திச் செல்லும் குரங்குகள்
சித்திராப் பெளர்ணமியன்று
சோற்றுப் பொட்டலங்களுடன்
படித்துறையில் கூடும் ஊரைப்
பார்த்துப் பசியுடன் காயும்
நிலவு
இப்போதெல்லாம் ஊர்ப்பக்கம்
மேகங்கள் வருவதில்லை
மழையும்தான்
ஆற்றுமணல் வீட்டுச் சுவர்களாய்
உருமாறின
ஆறு உருட்டிவந்த பாறைகள்
தலை நீட்டிக்கொண்டிருக்க
வெட்டபட்ட மலைபோல்
கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது
ஆறு
கரைகளைக் குறுக்கி ஆற்றின்
கைகளை முறுக்குவதுபோல்
நெருக்கியடிக்கின்றன
வீடுகள்
படித்துறைப் படிகளின்
நீர்க்கறைகளைப் பார்த்துப்
பெருமூச்சு விட்டுக்கொண்டு
கிடக்கின்றன
வயதான ஆலும் அந்த
ஆறும்!



0 comments:
Post a Comment