Friday, October 07, 2011

இரவுப் பறவை



அலுமினியப் பறவையில் ஆகாசத்தில் பறக்கையில்
அடியில் கலைந்து கிடக்கின்றன மேகங்கள்
அழுது சிவந்திருக்கும் கீழ்வானத்தைத் தேற்றிவிட்டுத்
தொலைந்த சூரியனைத் தேடும் நட்சத்திரங்கள்
வெட்டியெறிந்த நகம்போல் ஓரமாய்த் தொங்கும் நிலா
விழுந்து சிதறிய வைரக்கற்கள் போன்று
கொத்துக் கொத்தாய் கடந்து போகின்றன ஊர்கள்
சலனமற்றதாய்த் தோன்றும் கடற்பரப்பில்
ஒளிப்பிம்பம் பரப்பி நகரும் கப்பல்கள்
அவசரமாய் கூடுதிரும்புகின்றன நிழற் பறவைகள்
மோனத்தில் நித்திரையில் பயணிகள்
சன்னலூடே விழிகள் வெறித்திருக்க
எண்ணங்களூடே விழித்திருக்கிறது மனம்

2 comments:

கானகம் said...

//மோனத்தில் நித்திரையில் பயணிகள்
சன்னலூடே விழிகள் வெறித்திருக்க
எண்ணங்களூடே விழித்திருக்கிறது மனம்//

இதுதான் இதர பயணிகளுக்கும், கவிஞனுக்கும் உள்ள வேறுபாடு...

விமானத்தில் பறக்கையில் பறவை தெரியுமா என்ற கேள்வி எனக்குண்டு.

வற்றாயிருப்பு சுந்தர் said...

//விமானத்தில் பறக்கையில் பறவை தெரியுமா என்ற கேள்வி எனக்குண்டு//

நியாயமான கேள்வி!

விமானம் எழும்பும்போதும் தரையிறங்கச் சில நிமிடங்கள் முன்பும் அந்திப் பொழுதில் பார்த்திருக்கிறேன்.