
நேற்றிரவு மழையில்
கூரை நனைந்து
வீடு முழுதும் வீசுகிறது
உயிர்க்கத் துடிக்கும்
தென்னையின் வாசம்
ஓட்டைகளூடே வீட்டினுள்
விழுந்த மழைநீரைச்
சேமித்த கலசங்களில்
நீர் நிரம்பியிருக்கிறது
கூரையின் நிறத்தில்
தெருவில் நின்று பார்க்க
பக்கத்து மச்சுவீட்டிலிருந்து
குதித்தோடுகிறது பூனை
அதுவரை அமர்ந்திருந்த
காகம் பறந்தோட
கூரையில் நழுவி
சிக்கி நிற்கிறது மீன் கூடு
தெருப்பையன்கள் அடித்த பந்து
மேலிருந்து உருண்டு வர
கைகளை ஏந்திப் பிடிக்கத்
தயாராய் நின்றவனை ஏமாற்றி
நடுவில் அமர்ந்துகொண்டது
பொல்லாத அந்தப் பந்து
சேலை காயப்போடும் கழிகொண்டு
கூரையை அடித்து மிரட்டி
பந்தைத் திரும்பப் பெற்றாகிவிட்டது
மழைவெயிலிலிருந்து கழிவரை
நிறையத் தாங்கிவிட்டது கூரை
முதுமையில் மக்கி இப்போதெல்லாம்
மழை பெய்தால் ஒழுகுகிறது
வீட்டினுள் வயதான ஓலைகளின்
இறுதி மூசசாய் மெல்ல
வீசுகிறது காற்று
அடுக்கடுக்காய் கிடுகுகள்
நிமிர்த்திப் பார்க்கையில்
நெளிகின்றன கரையான்கள்
நமத்துக் கிடக்கிறது
ஏதோவொரு தீபாவளி இரவில்
பறந்து விழுந்த பட்டாசொன்று
ஆட்களும் புத்தம்புது கிடுகுக் கட்டுகளும்
மாட்டுவண்டியில் வந்தாகிவிட்டன
அவர்கள் கூரையில் பரவி
கீற்று ஒவ்வொன்றையும்
பிரிக்கிறார்கள்
வலிதாளாதோ என்னவோ
மூங்கில் சட்டங்கள் முனகுகின்றன
மொத்தமும் பிரிக்கப்பட்டு
கூடு மட்டும் மிஞ்ச
வீட்டினுள் இவ்வளவு வெளிச்சத்தைப்
பார்த்ததேயில்லை!
மூலைகளின் ஒட்டடையில்
சிலந்திகள் பயந்து அலைகின்றன
மரப்பல்லியொன்று விரைந்தோடி ஒளிகிறது
தேய்ந்த மூங்கில்கள் உருவப்பட்டு
புதியவை கட்டப்பட்டன
புதுக் கிடுகுககட்டுகளைப் பிரித்துச்
சீராய் மேய்கிறார்கள்
இறுக்கமாய் முடிகிறார்கள்
வீட்டினுள் வெளிச்சம் குறைந்துவர
இறுதியில் மின்விளக்குகள்
எரியத் துவங்குகின்றன
எல்லாம் முடிந்து
தெருவில் இரைந்துகிடந்தன
கூரைச்சருகுகளும் உடைந்த
மூங்கில்களும்
மொத்தமும் அள்ளப்பட்டு
கொல்லைப்புறத்திற்குக்
கொண்டுபோகப்பட்டன
வெந்நீர் அடுப்புக்கு விறகாக்க
புது வாசனையுடன் கூரை
பளிச்சென இளமையாய்
நிழலளித்துக் கொண்டிருக்கிறது
திண்ணையிலிருக்கும் பெற்றவர்களுக்கும்
வளையவரும் புது மருமகளுக்கும்
***
பி.கு. கடைசிப் பாராவை வைத்துக்கொள்வதா எடுப்பதா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எடுத்துவிட்டால் எதை எடுத்தேன் என்று பின்னாளில் மறந்துபோகும். இருந்தாலாவது இதை எடுத்திருக்கலாம் என்று தோன்றும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆதலால் அதை அகவிதையின் அங்கமாகக் கருதுவதும் கருதாததும் உங்கள் விருப்பம். நன்றி.