Monday, September 09, 2019

அலகிலாக் காதல்



உன் என நினைக்குமுன்னே
உள்ளில் நிகழும் நெகிழ்வையும்
என் எனச் சொல்லுமுன்னே
என்னில் நீ நிறைவதையும்
எனக்கெல்லாம் நீயே என்பதை
எவ்வார்த்தையும் சிக்காதிருந்தும்
யாருஞ் சொல்லாச் சிற்பமாய்
வடித்திடத் துடிக்கிறதென் நெஞ்சு

வயிற்றிலெப்போதும் பறக்கும்
பேசாப் பட்டாம் பூச்சிகளின்
தவிப்பினைத் தூவும் இச்சிறு
வரிகளின் நிழலில்
ஆவேசமாயுன் வருகைக்காகக்
காத்திருக்கிறதென்
அலகிலாக் காதல்

Friday, August 30, 2019

பட்டுப் பூச்சி



மொழியிலடங்கா உணர்வுகளை
எனக்குள் எப்போதுமெழுப்புகிறாய்
தேவதையே
உன் குரல் கேட்கவும்
உனைக் காணவும்
என்னுயிர் துடிக்கும் 
கணங்களிலெல்லாம்
மனோ வேகத்தில் உனையடைந்து 
உன்னை அரவணைத்து
உன்முகம் தாங்கி
பட்டுப்பூச்சியின் சிறகைப் போல்
மென்மையாய் நெற்றியில் முத்தமிடுவேன்
நீர் பொசியும் உன்னிமைகளில்
இதமாய் இதழ்களால் ஒற்றி
உப்புக் கன்னங்களை
முத்தமிட்டுத் தேற்றுவேன்
உன் தேவதைப் புன்னகையைக்
காட்டக் கோருவேன்
இன்னும் கண்மூடிக்கொண்டு
இடவலமாய்த் தலையாட்டி
மறுப்பாய் நீ
மறுபடி கண்ணிமையில் முத்தமிட்டு
என்னைப் பாரடியென்பேன்
உன்னிதழோரம் மின்னும் சிறு
புன்னகைக் கீற்று
உறைந்த கணத்தின்
புகைப்படம்போல்
உறைந்த புன்னகையுடன்
இருக்குமுன் இதழ்களை
நினைவு கொள்வேன்
உன் புன்னகையில்
அவை அழகு கூடுவதையும்
நினைவுகூர்வேன்
கரங்களால் வளைத்துன்னை
என்னுடன் சேர்த்தணைக்க
உன் முகம் நாணத்தில் சிவந்து
புன்னகைக் கீற்று பெரிதாகும்
அப்புன்னகையைப் பற்றிக்கொண்டு
துவங்கும் முத்தங்களால்
தொடரும் நம்
ஆன்மாக்களின் உரையாடல்கள்
எனையாளும் என் தேவதையே
காலமும் தொலைவும் பிரித்தாலும்
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
அரூபமாய் யட்சனாய்
உன்னுடன் உனதானவனாய்
நானிருப்பேன்
No photo description available.

எதிரொலி

ஒட்டவே முடியாது என்பதற்காக
நீர்த்துளிகளை உதறிவிட்டுப் 
போவதில்லை தாமரையிலை
ஒட்டவே முடியாது என்றாலும்
விழாமலோ விலகியோ
போவதில்லை நீர்த்துளி
ஒட்டியிருப்பது மட்டும்
பந்தங்களில்லை
ஒட்டாதிருப்பவர்க்குப்
பகையென்றில்லை
காலமும் தொலைவும்
காதலைக் கரைத்துவிடுவதில்லை
முட்களும் பூக்களும் நிரம்பிய பாதை
வருடலாம் குருதி கொட்டச் செய்யலாம்
எவ்வலிகளையும்
எல்லாச் சந்தோஷங்களையும்
தாண்டி நிற்பது பரஸ்பரக் காதலே
அருகிலோ தொலைவிலோ
எங்கிருந்தாலும்
தேவதையை நினைத்துத்
துடிப்பொலி எழுப்பும்
என்னிதயம் தேடுவதெல்லாம்
ஒரு சிறிய
எதிரொலியையே


Image may contain: plant, flower, outdoor and nature

பேசா மொழி

அலகிலாக் காதலை
மடையிட்டுத் தடுத்து
இயல்பாய் இருப்பதுபோல்
இயல்பற்று இருக்கும்
தருணங்கள் தருகின்றன
அளவிலா வலியை
உன் என் நம் வலி தீர்க்க
இதமாய்ச் சொல்ல விழையும்
அறிந்த மொழியின்
தெரிந்த வார்த்தைகள்
எவையும் உதவாமல்
தோற்கும்போதெல்லாம்
இறுதியில்
இப்பேசா மொழியில்
என் உரையாடலைத்
தொடங்குவேன்
நூலிழைக்கும் இடம்தராத
என் அரவணைப்பும்
உன் மென் முகத்தில்
இளஞ்சூடு பரவ
என் உயிரைக் குவித்துத்
தரும் ஆழ் முத்தங்களும்
உன் வலிகளையும்
கண்ணீரையும் துடைத்தெடுத்துப்
புன்னகையைத் தீட்டும்
இன்னும் கண் மூடியிருப்பாய்
உன்னிதழ்களிலிருந்து
விரியும் புன்னகை
கன்னங்களைச்
சிவக்கச் செய்து
மயிற்பீலி இமைகளையும்
புருவங்களையும்
வளைத்து விரிக்கும்
லேசாய்ச் சுருங்கும்
உன் நெற்றியின் மெல்லிய
கோடுகளை மறுபடியும்
என் இதழ்களால்
சமனப் படுத்துவேன்
முடிவற்ற வலியற்ற
இவ்வுரையாடல்
தொடர்வதற்காவது
அறிந்த மொழியும்
தெரிந்த வார்த்தைகளும்
அடிக்கடித் தோற்கட்டும்

வேண்டும்

தூரமும் காலமும் இல்லாதொரு
உலகம் வேண்டும்
உயிரென நினைக்கும் உறவினை 
ஒரு கணமும் பிரியாதிருக்கும் 
நிலை வேண்டும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணித்து
வேறு மானுடரில்லா அவ்வுலகைச்
சுற்றி வரவேண்டும்
ஆர்ப்பரிக்கும்
நீலப் பெருங்கடலின் நுனியில்
நுரைத்திட்ட அலைகள் முத்தமிட
கைகளைக் கோர்த்து
ஈர மணலில் தற்காலிகத்
தடங்களைப் புதைத்து
நடக்கவேண்டும்
புரவியின் பிடரிபோல் காற்றில்
அலையலையாய் விரியும்
அவள் கூந்தலில் முகம்
பொதித்துக் கொள்ளவேண்டும்
கடலின் எல்லையை முத்தமிட
விரையும் மாலைச் சூரியனின்
ரேகைகள் பட்டுத் தங்கமாய்
ஜொலிக்கும் முகத்தை ஏந்தி
ஆழ முத்தமிட்டுக்
கதிரவனைப் போட்டியில்
வெல்லவேண்டும்
கரும்பச்சைப் புல்வெளிப் படுக்கையைப்
பனித்துளிகள் நனைக்க
கைகளைத் தலையணையாக்கி
அவளுடன் இதமாய்க்
கருநீல வானின் நட்சத்திரங்களை
ரசிக்கவேண்டும்
தாமதமாய்க் கூடு திரும்பும்
நிழற் பறவைகளுக்குக்
கையசைக்க வேண்டும்
வெள்ளி நகம் போல் மின்னும்
பின்னிரவுப் பிறைநிலாவின்
விளிம்பின் கூர்மைபட்டுத்
தெறித்து விழும் நட்சத்திரத்தின்
ஒளித் தடத்தை விழிகள் விரியப்
பார்க்கவேண்டும்
அடர் வனத்தின் விசித்திர ஒலிகளும்
சில்வண்டுகளின் ரீங்காரமும்
ஓயாத அலைகளின் மூச்சும்
அசையாதிருக்கும் மரங்களும்
நிரம்பித் ததும்பும் அவ்விரவில்
ஆரத் தழுவியிருக்கும் இருவரையும்
அறியாததொரு பொழுதில் உறக்கம்
தழுவ வேண்டும்
இனிய கனவுகளில் இருவரும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
சீரான குளம்பொலியின்
தாளங்களுடன்
சிலுசிலுவென உராயும் காற்றுடன்
இதயங்களின் நடனத் துடிப்புடன்
தூரமும் காலமும் இல்லா
அவ்வுலகில்
ஒரு கணமும் பிரியாது
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணத்தைத்
தொடரவேண்டும்


Image may contain: one or more people, people standing, sky and outdoor

Monday, May 20, 2019

வனாந்திரச் சிங்கங்கள்



இலையுதிர்கால வனத்தில்
இரு சிங்கங்கள்
அரி ஆண் பரி பெண்
வனம் அதிர விளையாடின
அவற்றின் கர்ஜனை
வனமெங்கும் எதிரொலித்தது
அவை ஒன்றையொன்று
சீண்டிக்கொண்டன
ஓடின துரத்தின
அரி அலகிலாக் காதலுடன்
பரியின் அரணாய் இருப்பதையே
பரியினருகில் இருப்பதையே
விரும்பியது
அமைதியாய் இருந்தது
பரியொரு குறும்புச் சிங்கம்
அரியை அவ்வப்போது
சீண்டிக்கொண்டேயிருந்தது
நகங்களால் கீறியது
குருதிக் கோடிட்டது
அவற்றை நாவால் நிரடியது
முண்டி உரசிச் சாய்த்தது
அரி எல்லாவற்றையும் விரும்பியது
அக்குறும்புகளும் சீண்டல்களும்
நகக் காயங்களும் நாவின் இதமும்
எல்லாமுமாய் தனதுலகாய்
அரி கருதியது
இமைப்பொழுதும் விலகாதிருந்தது
பிரியாதிருந்தது
வேட்டையாடச் செல்ல நேரிடும்
தற்காலிகப் பொழுதுகளிலும்கூட
இரையைவிட பரியின் நினைவே
மிகுந்திருந்தது
எப்போதும் அதன் அருகாமைக்குத்
தவித்திருந்தது
தொலைவிலிருந்ததொரு
இரவுப் பொழுதொன்றில்
பரியின் ஓலத்தை
அரி கேட்டது பதறியது
விசனம் கொண்டது
முட்கள் உடல் கிழிக்கக்
கானகத்தை ஊடுருவிப்
கடந்துப் பாய்ந்தோடி வந்தது
மூச்சிறைக்க நின்றது
பரி நலிவுற்றிருந்ததைக்
கண்டு துடித்தது
சுற்றிச் சுற்றி வந்தது
அதைச் சீண்டியது
நாவால் நிரடியது
முண்டிச் சாய்த்தது
நலிவு மறந்த பரி
கண்களை மூடியிருந்த
தருணத்தில்
அரி தன்னியல்பு விடுத்துப்
பரியை நகத்தால் கீறியது
கீறல் ஆழமானது
குருதி கொட்டியது
பரி துடித்தது
அன்பு மிகுதியில்
அத்துடிப்பைக் கவனிக்காத அரி
உன்னைப் போலவே உன்னிடம்
விளையாடுகிறேன் பார்த்தாயா
என்று சிரித்தது - அது
பரியின் மனதையும் கீறியது
குறும்புகளும் கீறல்களும்
இயல்பாய்ச் செய்த பரிக்கு
அரியின் இயல்பு அதுவல்ல
என்று புரியவில்லை
அளவிலா அன்பினால்
அரியின் இயல்பு விடுத்த செயலும்
புரியவில்லை
கடந்த காலக் கீறல்களை நினைத்துக்
குற்றவுணர்வு கொண்டது
எழுந்து விலக நினைத்தது
இனி
எவ்விளையாட்டுகளும் கூடாதென
நினைத்தது அழுதது
மின்னல் வெட்டிய நொடிப்பொழுதில்
பரியின் கண்களில் நீரையும்
வழிந்த குருதியையும் கண்ட
அரி பேரதிர்ச்சியுற்றது
தன்னுயிரெனக் கருதிய பரியிடம்
இயல்பற்ற விளையாட்டொன்றை
ஆடியதால் ஏற்பட்ட
பெருங்காயத்தினைக் கண்டு
தவித்துத் துடித்தது
இதயம் வெடிப்பதுபோலுணர்ந்தது
தன் மீதே சினங்கொண்டது
காடதிர கர்ஜனை செய்தது
மரங்களை அறைந்து வீழ்த்தியது
நகங்களை உடைத்துவிட யத்தனித்தது
கண்களைத் தாழ்த்தி
பேசா மடந்தையாய்
இருந்த பரியைப் பார்த்து
இறைஞ்சியது கெஞ்சியது
கார்மேகங்கள் சூழ்ந்து
பேரிருள் போர்த்திய
காடு அடைமழையில்
சிங்கங்கள் இரண்டும்
நனைந்து நின்றன
தலை தாழ்த்தி நின்றன
இயல்பற்ற நிலையில் நின்றன
கர்ஜனைகள் நின்றன
இரண்டின் குருதியும்
இரண்டின் கண்ணீரும்
மழை நீரில் கலந்து
வடிந்து ஓடின
மின்னல்கள் இடையறாது பளிச்சிட
தூரத்தே இடிமுழக்கங்கள் தொடர்ந்து அதிர
அச்சிங்கங்களும் வனாந்திரமும்
எப்போது விடியுமெனக் காத்திருந்தன

Tuesday, May 07, 2019

எதிரொலியின் மெளனம்


திக்கு தெரியாத காட்டினிலே
மலைகளூடே அலைந்து திரிந்த
தனியனொருவனின்
மனக் குரலுக்குப் பதிலளித்துத்
தென்றலாய் வருடிக் 
கூடவே நடந்து வந்து
இசைந்தொலித்த எதிரொலியொன்று
சட்டெனச் சொல்லாமல் கொள்ளாமல்
அடங்கி மெளனமாகிவிட்டது
கயிறு அவிழ்த்ததும்
துள்ளிக் குதித்துத்
தாயின் மடி தேடியோடும்
கன்றுக் குட்டியொன்று
தாயை அடையுமுன்
மறுபடியும்
பின்னிழுக்கப் பட்டதைப் போல்
மெளனக் கயிறு மனக் கன்றைப்
பின்னிழுத்துவிட்டது
இம்மெளனம் தற்காலிகமா
நிரந்தரமா என்று புரியாமல்
தவித்துத் துடிக்கும்
மனத்தின் குரல்
அழுகையாய் ஓலமாய்
ஆற்றாமையாய்
வடிகால்களின்றிக்
கொந்தளிக்கும் கடலாய்
ஆழிப் பேரலையாய்ச்
சீறுகின்றது இறைஞ்சுகிறது
அறைகூவுகிறது
அலைகள் எவ்வளவு
முறையிட்டாலும்
அசைந்து கொடுக்காத
பாறை போல்
மெளனம் அசையாதிருக்கிறது
காரணம் சொல்லாமல்
பெருகும் மெளனம்
கூர்வாளைப் போன்று
துளைத்தறுத்ததில்
குருதி வழிந்தோடும்
இதயத்தின் வலியைப்
பிரதிபலிக்கவியலாமல்
தனியாய்த் தவிக்கிறதோர்
(எதிரொலியின்) ஆன்மா(வும்)

Sunday, May 05, 2019

நிழல்


முடிவிலியாய் நெளிந்து நீள்கிறது பாதை
சூரியன் உச்சியில் தகிக்கும்
மதிய வெயில் நேரம்
நிழல்களும் ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டிருக்கின்றன
மணலும் தரையும் கொதித்திருக்க
பொசுங்கிய பாதங்களுடன்
இனி ஓரடியும் வைக்கவியலாது

அவ்வொற்றைச் சுவரின் கீழ்
ஓரங்குலமே எட்டிப் பார்த்தது
நிழற் கோடொன்று
மெல்ல அணுகி அனுமதியின்றி
அதன் மீது நுனிக்காலில் நின்று
சுவரில் சாய்ந்துகொண்டேன்
சுவர் முதுகைச் சுட்டது

கால் விரல்கள் சிவந்தன
பாரமும் வெம்மையும் பொறுத்தன
நிழல் இன்னும் சற்று நீண்டது
பாதத்தை அணைத்துக்கொண்டது
வெம்மை தணிந்தது

கொடும் வெயிலில் நெடுநேரம்
கழித்துக் கிடைத்த அந்நிழலுடன்
இருந்துவிடலாம் போலிருந்தது
நிழலை என்னுடன் கூட்டிச்செல்ல
விரும்பினேன்
வா என்று அழைத்தேன்
நிழல் மெளனமாக இருந்தது
சுவரைவிட்டு வரமுடியாதென்றது
நிற்கும்வரை நின்றுகொள் என்றது

நெற்றி வியர்வை பார்வையை மறைக்க
செல்லவேண்டிய பாதையை நினைத்துப்
பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு
வெயிலில் நுழைந்தேன்
பாதங்கள் மரத்திருந்தன
தரைச் சூடு உறைக்கவில்லை

சற்று தூரம் சென்றதும்
திரும்பிப் பார்த்தேன்
நிழல் ஊர்ந்து பரந்து
நீண்டுகொண்டிருந்தது
அதற்கென விதிக்கப்பட்டிருக்கும்
எல்லை மீறாமல்
சுவரை விட்டு விலகாமல்

Thursday, May 02, 2019

கரையும்


மின்சாரக் கம்பி மேல்
எதற்கோ
கரைந்துகொண்டேயிருக்கும்
ஒற்றைக் காகத்தை
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை
கரையும் மனத்தையும்

Tuesday, April 30, 2019

ஆத்மாநாமின் வண்ணாத்திப் பூச்சிகள்


[எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின்பற்றாது
வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன…..
-ஆத்மாநாம்]
எந்தக் குறிப்பிட்ட காரணமும்
இல்லாமல்
எந்நொடியில் துவங்கியதெனத்
தெரியாமல்
இதனாலென அதனாலென
எதனாலெனவும் புரியாமல்
நான் அறியாததொரு
பொழுதிலிருந்து
பட்டாம் பூச்சிகள் வயிற்றில்
பறக்கத் துவங்கிவிடுகின்றன
கண்சிமிட்டும் நொடிகளிலும்
விழித்திருந்தாலும் உறக்கத்திலிருந்தாலும்
அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதுமென
முப்பொழுதுமென் சிந்தனையில்
வியாபித்திருக்கிறது
அம்முகமும் அதிலவள் புன்னகையும்
அவளருகாமையிலில்லாது
தூரத்தேயிருப்பது என்னை
அளவிலாத் துயரத்திலாழ்த்துகிறது
ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும்
விடைபெறும் வார்த்தைகள்
சொல்ல நேரிடும் போதெல்லாம்
இதயத்தை யாரோ
பிடுங்கியெடுத்தெறிவதுபோல்
வலிக்கிறது
நினைவுச் சலனங்களில்
உலாவுமவள் என்
கண்களில் ஏக்கத்தையும்
முகத்திலொரு புன்னகையையும்
நிரந்தரமாகப் பூசிவிட்டிருக்கிறாள்
இலக்கின்றியந்தப்
பட்டாம்பூச்சிகள் போல்
பல வண்ணங்களின் சுமையோடு
நகர்கிறது நடக்கிறது பறக்கிறதென்
அலகிலாக் காதல்
***

Thursday, April 11, 2019

பிரியாசகி

Related image

உனக்கெல்லாமாகவும்
இருந்ததையும் இருந்தவரையும்
விடுத்துச் சகியென
எனைச் சகித்தென்
கரம்பற்றிய பிரியசகியே
என்னைப் பிரியாசகியாகவும்
என்றுமிருப்பாயா?

Thursday, January 10, 2019

புலிக்குட்டி



ஆறுமாதமேயான அழகுப் புலிக்குட்டி
ஆசையுடன் அள்ளியெடுத்துக்கொண்டேன்


புலிக்குட்டி துள்ளியது விளையாடியது
மெந்நகத்தால் கைகளில் கீறியது
அதன் சேட்டைகளை மனம் விரும்பிற்று
இருபத்துநான்கு மணி நேரம் போதாதிருந்தது
இப்படியே பல வருடங்கள் உருண்டோடிற்று
புலி கம்பீரமாய் எழுந்து நின்றது
அதன் வன எல்லை விரிவடந்தது
புலி ஆனந்தமாய் வேட்டையாடிற்று
வளர்ந்ததும் அதை எட்ட நின்று
பார்த்து மகிழ்ந்து பெருமிதமடைந்தாலும்
அந்நியோன்யம் குறைந்தாலும்
என் மனதில் அன்பு குறையாதிருந்தது

எதிர்பாரா சில தருணங்களில்
புலி கோபமடைந்து உறுமிற்று
காடு நடுங்கியது
நான் அமைதியாக அவற்றைக் கடந்தேன்
எதிர்பாரா சில தருணங்களில்
புலி முதுகில் அறைந்து தள்ளியது
என் கண்களை நோக்காதிருந்தது
வலித்தாலும் விலகவில்லை

திடீரென்று ஒருநாள் அதற்கு
இரையாகிவிடுவோமெனத் தோன்றிற்று
அதன் வாலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்
புலி உறுமியது தாவியது ஓடியது
வாலை விட பயமாகவிருந்தது
இன்னும் சில வருடங்களோடின
பிடி லேசாகத் தளர்வதை உணர்ந்தேன்
புலியும் உணர்ந்ததை
நானும் உணர்ந்தேன்
புலி அசைவை நிறுத்திய அந்தக் கணத்தில்
பிடியை விட்டு விலகினேன்
திரும்பிப் பார்க்காது ஓடினேன்
வனம் தாண்டினேன்
தூரத்தில் புலி உறுமுவது கேட்டது

புல்வெளியூடே தொடர்ந்த நடை
சோர்வடைந்து நின்றபோது
கால்களிடயே பஞ்சுப்பொதியொன்று
வருடியதுபோலிருக்கப் பார்த்தால்
ஆறுமாதமேயான அழகுப் புலிக்குட்டி
ஆசையுடன் அள்ளியெடுத்துக்கொண்டேன்

***

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...