Friday, August 30, 2019

பட்டுப் பூச்சி



மொழியிலடங்கா உணர்வுகளை
எனக்குள் எப்போதுமெழுப்புகிறாய்
தேவதையே
உன் குரல் கேட்கவும்
உனைக் காணவும்
என்னுயிர் துடிக்கும் 
கணங்களிலெல்லாம்
மனோ வேகத்தில் உனையடைந்து 
உன்னை அரவணைத்து
உன்முகம் தாங்கி
பட்டுப்பூச்சியின் சிறகைப் போல்
மென்மையாய் நெற்றியில் முத்தமிடுவேன்
நீர் பொசியும் உன்னிமைகளில்
இதமாய் இதழ்களால் ஒற்றி
உப்புக் கன்னங்களை
முத்தமிட்டுத் தேற்றுவேன்
உன் தேவதைப் புன்னகையைக்
காட்டக் கோருவேன்
இன்னும் கண்மூடிக்கொண்டு
இடவலமாய்த் தலையாட்டி
மறுப்பாய் நீ
மறுபடி கண்ணிமையில் முத்தமிட்டு
என்னைப் பாரடியென்பேன்
உன்னிதழோரம் மின்னும் சிறு
புன்னகைக் கீற்று
உறைந்த கணத்தின்
புகைப்படம்போல்
உறைந்த புன்னகையுடன்
இருக்குமுன் இதழ்களை
நினைவு கொள்வேன்
உன் புன்னகையில்
அவை அழகு கூடுவதையும்
நினைவுகூர்வேன்
கரங்களால் வளைத்துன்னை
என்னுடன் சேர்த்தணைக்க
உன் முகம் நாணத்தில் சிவந்து
புன்னகைக் கீற்று பெரிதாகும்
அப்புன்னகையைப் பற்றிக்கொண்டு
துவங்கும் முத்தங்களால்
தொடரும் நம்
ஆன்மாக்களின் உரையாடல்கள்
எனையாளும் என் தேவதையே
காலமும் தொலைவும் பிரித்தாலும்
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
அரூபமாய் யட்சனாய்
உன்னுடன் உனதானவனாய்
நானிருப்பேன்
No photo description available.

எதிரொலி

ஒட்டவே முடியாது என்பதற்காக
நீர்த்துளிகளை உதறிவிட்டுப் 
போவதில்லை தாமரையிலை
ஒட்டவே முடியாது என்றாலும்
விழாமலோ விலகியோ
போவதில்லை நீர்த்துளி
ஒட்டியிருப்பது மட்டும்
பந்தங்களில்லை
ஒட்டாதிருப்பவர்க்குப்
பகையென்றில்லை
காலமும் தொலைவும்
காதலைக் கரைத்துவிடுவதில்லை
முட்களும் பூக்களும் நிரம்பிய பாதை
வருடலாம் குருதி கொட்டச் செய்யலாம்
எவ்வலிகளையும்
எல்லாச் சந்தோஷங்களையும்
தாண்டி நிற்பது பரஸ்பரக் காதலே
அருகிலோ தொலைவிலோ
எங்கிருந்தாலும்
தேவதையை நினைத்துத்
துடிப்பொலி எழுப்பும்
என்னிதயம் தேடுவதெல்லாம்
ஒரு சிறிய
எதிரொலியையே


Image may contain: plant, flower, outdoor and nature

பேசா மொழி

அலகிலாக் காதலை
மடையிட்டுத் தடுத்து
இயல்பாய் இருப்பதுபோல்
இயல்பற்று இருக்கும்
தருணங்கள் தருகின்றன
அளவிலா வலியை
உன் என் நம் வலி தீர்க்க
இதமாய்ச் சொல்ல விழையும்
அறிந்த மொழியின்
தெரிந்த வார்த்தைகள்
எவையும் உதவாமல்
தோற்கும்போதெல்லாம்
இறுதியில்
இப்பேசா மொழியில்
என் உரையாடலைத்
தொடங்குவேன்
நூலிழைக்கும் இடம்தராத
என் அரவணைப்பும்
உன் மென் முகத்தில்
இளஞ்சூடு பரவ
என் உயிரைக் குவித்துத்
தரும் ஆழ் முத்தங்களும்
உன் வலிகளையும்
கண்ணீரையும் துடைத்தெடுத்துப்
புன்னகையைத் தீட்டும்
இன்னும் கண் மூடியிருப்பாய்
உன்னிதழ்களிலிருந்து
விரியும் புன்னகை
கன்னங்களைச்
சிவக்கச் செய்து
மயிற்பீலி இமைகளையும்
புருவங்களையும்
வளைத்து விரிக்கும்
லேசாய்ச் சுருங்கும்
உன் நெற்றியின் மெல்லிய
கோடுகளை மறுபடியும்
என் இதழ்களால்
சமனப் படுத்துவேன்
முடிவற்ற வலியற்ற
இவ்வுரையாடல்
தொடர்வதற்காவது
அறிந்த மொழியும்
தெரிந்த வார்த்தைகளும்
அடிக்கடித் தோற்கட்டும்

வேண்டும்

தூரமும் காலமும் இல்லாதொரு
உலகம் வேண்டும்
உயிரென நினைக்கும் உறவினை 
ஒரு கணமும் பிரியாதிருக்கும் 
நிலை வேண்டும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணித்து
வேறு மானுடரில்லா அவ்வுலகைச்
சுற்றி வரவேண்டும்
ஆர்ப்பரிக்கும்
நீலப் பெருங்கடலின் நுனியில்
நுரைத்திட்ட அலைகள் முத்தமிட
கைகளைக் கோர்த்து
ஈர மணலில் தற்காலிகத்
தடங்களைப் புதைத்து
நடக்கவேண்டும்
புரவியின் பிடரிபோல் காற்றில்
அலையலையாய் விரியும்
அவள் கூந்தலில் முகம்
பொதித்துக் கொள்ளவேண்டும்
கடலின் எல்லையை முத்தமிட
விரையும் மாலைச் சூரியனின்
ரேகைகள் பட்டுத் தங்கமாய்
ஜொலிக்கும் முகத்தை ஏந்தி
ஆழ முத்தமிட்டுக்
கதிரவனைப் போட்டியில்
வெல்லவேண்டும்
கரும்பச்சைப் புல்வெளிப் படுக்கையைப்
பனித்துளிகள் நனைக்க
கைகளைத் தலையணையாக்கி
அவளுடன் இதமாய்க்
கருநீல வானின் நட்சத்திரங்களை
ரசிக்கவேண்டும்
தாமதமாய்க் கூடு திரும்பும்
நிழற் பறவைகளுக்குக்
கையசைக்க வேண்டும்
வெள்ளி நகம் போல் மின்னும்
பின்னிரவுப் பிறைநிலாவின்
விளிம்பின் கூர்மைபட்டுத்
தெறித்து விழும் நட்சத்திரத்தின்
ஒளித் தடத்தை விழிகள் விரியப்
பார்க்கவேண்டும்
அடர் வனத்தின் விசித்திர ஒலிகளும்
சில்வண்டுகளின் ரீங்காரமும்
ஓயாத அலைகளின் மூச்சும்
அசையாதிருக்கும் மரங்களும்
நிரம்பித் ததும்பும் அவ்விரவில்
ஆரத் தழுவியிருக்கும் இருவரையும்
அறியாததொரு பொழுதில் உறக்கம்
தழுவ வேண்டும்
இனிய கனவுகளில் இருவரும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
சீரான குளம்பொலியின்
தாளங்களுடன்
சிலுசிலுவென உராயும் காற்றுடன்
இதயங்களின் நடனத் துடிப்புடன்
தூரமும் காலமும் இல்லா
அவ்வுலகில்
ஒரு கணமும் பிரியாது
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணத்தைத்
தொடரவேண்டும்


Image may contain: one or more people, people standing, sky and outdoor

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...