Monday, May 20, 2019

வனாந்திரச் சிங்கங்கள்



இலையுதிர்கால வனத்தில்
இரு சிங்கங்கள்
அரி ஆண் பரி பெண்
வனம் அதிர விளையாடின
அவற்றின் கர்ஜனை
வனமெங்கும் எதிரொலித்தது
அவை ஒன்றையொன்று
சீண்டிக்கொண்டன
ஓடின துரத்தின
அரி அலகிலாக் காதலுடன்
பரியின் அரணாய் இருப்பதையே
பரியினருகில் இருப்பதையே
விரும்பியது
அமைதியாய் இருந்தது
பரியொரு குறும்புச் சிங்கம்
அரியை அவ்வப்போது
சீண்டிக்கொண்டேயிருந்தது
நகங்களால் கீறியது
குருதிக் கோடிட்டது
அவற்றை நாவால் நிரடியது
முண்டி உரசிச் சாய்த்தது
அரி எல்லாவற்றையும் விரும்பியது
அக்குறும்புகளும் சீண்டல்களும்
நகக் காயங்களும் நாவின் இதமும்
எல்லாமுமாய் தனதுலகாய்
அரி கருதியது
இமைப்பொழுதும் விலகாதிருந்தது
பிரியாதிருந்தது
வேட்டையாடச் செல்ல நேரிடும்
தற்காலிகப் பொழுதுகளிலும்கூட
இரையைவிட பரியின் நினைவே
மிகுந்திருந்தது
எப்போதும் அதன் அருகாமைக்குத்
தவித்திருந்தது
தொலைவிலிருந்ததொரு
இரவுப் பொழுதொன்றில்
பரியின் ஓலத்தை
அரி கேட்டது பதறியது
விசனம் கொண்டது
முட்கள் உடல் கிழிக்கக்
கானகத்தை ஊடுருவிப்
கடந்துப் பாய்ந்தோடி வந்தது
மூச்சிறைக்க நின்றது
பரி நலிவுற்றிருந்ததைக்
கண்டு துடித்தது
சுற்றிச் சுற்றி வந்தது
அதைச் சீண்டியது
நாவால் நிரடியது
முண்டிச் சாய்த்தது
நலிவு மறந்த பரி
கண்களை மூடியிருந்த
தருணத்தில்
அரி தன்னியல்பு விடுத்துப்
பரியை நகத்தால் கீறியது
கீறல் ஆழமானது
குருதி கொட்டியது
பரி துடித்தது
அன்பு மிகுதியில்
அத்துடிப்பைக் கவனிக்காத அரி
உன்னைப் போலவே உன்னிடம்
விளையாடுகிறேன் பார்த்தாயா
என்று சிரித்தது - அது
பரியின் மனதையும் கீறியது
குறும்புகளும் கீறல்களும்
இயல்பாய்ச் செய்த பரிக்கு
அரியின் இயல்பு அதுவல்ல
என்று புரியவில்லை
அளவிலா அன்பினால்
அரியின் இயல்பு விடுத்த செயலும்
புரியவில்லை
கடந்த காலக் கீறல்களை நினைத்துக்
குற்றவுணர்வு கொண்டது
எழுந்து விலக நினைத்தது
இனி
எவ்விளையாட்டுகளும் கூடாதென
நினைத்தது அழுதது
மின்னல் வெட்டிய நொடிப்பொழுதில்
பரியின் கண்களில் நீரையும்
வழிந்த குருதியையும் கண்ட
அரி பேரதிர்ச்சியுற்றது
தன்னுயிரெனக் கருதிய பரியிடம்
இயல்பற்ற விளையாட்டொன்றை
ஆடியதால் ஏற்பட்ட
பெருங்காயத்தினைக் கண்டு
தவித்துத் துடித்தது
இதயம் வெடிப்பதுபோலுணர்ந்தது
தன் மீதே சினங்கொண்டது
காடதிர கர்ஜனை செய்தது
மரங்களை அறைந்து வீழ்த்தியது
நகங்களை உடைத்துவிட யத்தனித்தது
கண்களைத் தாழ்த்தி
பேசா மடந்தையாய்
இருந்த பரியைப் பார்த்து
இறைஞ்சியது கெஞ்சியது
கார்மேகங்கள் சூழ்ந்து
பேரிருள் போர்த்திய
காடு அடைமழையில்
சிங்கங்கள் இரண்டும்
நனைந்து நின்றன
தலை தாழ்த்தி நின்றன
இயல்பற்ற நிலையில் நின்றன
கர்ஜனைகள் நின்றன
இரண்டின் குருதியும்
இரண்டின் கண்ணீரும்
மழை நீரில் கலந்து
வடிந்து ஓடின
மின்னல்கள் இடையறாது பளிச்சிட
தூரத்தே இடிமுழக்கங்கள் தொடர்ந்து அதிர
அச்சிங்கங்களும் வனாந்திரமும்
எப்போது விடியுமெனக் காத்திருந்தன

Tuesday, May 07, 2019

எதிரொலியின் மெளனம்


திக்கு தெரியாத காட்டினிலே
மலைகளூடே அலைந்து திரிந்த
தனியனொருவனின்
மனக் குரலுக்குப் பதிலளித்துத்
தென்றலாய் வருடிக் 
கூடவே நடந்து வந்து
இசைந்தொலித்த எதிரொலியொன்று
சட்டெனச் சொல்லாமல் கொள்ளாமல்
அடங்கி மெளனமாகிவிட்டது
கயிறு அவிழ்த்ததும்
துள்ளிக் குதித்துத்
தாயின் மடி தேடியோடும்
கன்றுக் குட்டியொன்று
தாயை அடையுமுன்
மறுபடியும்
பின்னிழுக்கப் பட்டதைப் போல்
மெளனக் கயிறு மனக் கன்றைப்
பின்னிழுத்துவிட்டது
இம்மெளனம் தற்காலிகமா
நிரந்தரமா என்று புரியாமல்
தவித்துத் துடிக்கும்
மனத்தின் குரல்
அழுகையாய் ஓலமாய்
ஆற்றாமையாய்
வடிகால்களின்றிக்
கொந்தளிக்கும் கடலாய்
ஆழிப் பேரலையாய்ச்
சீறுகின்றது இறைஞ்சுகிறது
அறைகூவுகிறது
அலைகள் எவ்வளவு
முறையிட்டாலும்
அசைந்து கொடுக்காத
பாறை போல்
மெளனம் அசையாதிருக்கிறது
காரணம் சொல்லாமல்
பெருகும் மெளனம்
கூர்வாளைப் போன்று
துளைத்தறுத்ததில்
குருதி வழிந்தோடும்
இதயத்தின் வலியைப்
பிரதிபலிக்கவியலாமல்
தனியாய்த் தவிக்கிறதோர்
(எதிரொலியின்) ஆன்மா(வும்)

Sunday, May 05, 2019

நிழல்


முடிவிலியாய் நெளிந்து நீள்கிறது பாதை
சூரியன் உச்சியில் தகிக்கும்
மதிய வெயில் நேரம்
நிழல்களும் ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டிருக்கின்றன
மணலும் தரையும் கொதித்திருக்க
பொசுங்கிய பாதங்களுடன்
இனி ஓரடியும் வைக்கவியலாது

அவ்வொற்றைச் சுவரின் கீழ்
ஓரங்குலமே எட்டிப் பார்த்தது
நிழற் கோடொன்று
மெல்ல அணுகி அனுமதியின்றி
அதன் மீது நுனிக்காலில் நின்று
சுவரில் சாய்ந்துகொண்டேன்
சுவர் முதுகைச் சுட்டது

கால் விரல்கள் சிவந்தன
பாரமும் வெம்மையும் பொறுத்தன
நிழல் இன்னும் சற்று நீண்டது
பாதத்தை அணைத்துக்கொண்டது
வெம்மை தணிந்தது

கொடும் வெயிலில் நெடுநேரம்
கழித்துக் கிடைத்த அந்நிழலுடன்
இருந்துவிடலாம் போலிருந்தது
நிழலை என்னுடன் கூட்டிச்செல்ல
விரும்பினேன்
வா என்று அழைத்தேன்
நிழல் மெளனமாக இருந்தது
சுவரைவிட்டு வரமுடியாதென்றது
நிற்கும்வரை நின்றுகொள் என்றது

நெற்றி வியர்வை பார்வையை மறைக்க
செல்லவேண்டிய பாதையை நினைத்துப்
பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு
வெயிலில் நுழைந்தேன்
பாதங்கள் மரத்திருந்தன
தரைச் சூடு உறைக்கவில்லை

சற்று தூரம் சென்றதும்
திரும்பிப் பார்த்தேன்
நிழல் ஊர்ந்து பரந்து
நீண்டுகொண்டிருந்தது
அதற்கென விதிக்கப்பட்டிருக்கும்
எல்லை மீறாமல்
சுவரை விட்டு விலகாமல்

Thursday, May 02, 2019

கரையும்


மின்சாரக் கம்பி மேல்
எதற்கோ
கரைந்துகொண்டேயிருக்கும்
ஒற்றைக் காகத்தை
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை
கரையும் மனத்தையும்

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...