அய்யோ போர் துவங்கிவிட்டது
நேற்றிரவு கதவருகில் நிற்கையில்
கண்கூசச் செய்யும் ஒளியுடன்
தெருவில் வெடித்தது முதல் குண்டு
இடிஇடித்தது போல் வெடிச்சத்தம்
எங்கெங்கும் வியாபித்திருக்கும் புகை
காற்றில் வெடிமருந்து நெடி
மூச்சை முட்டச் செய்கிறது
வெளியே தலைகாட்ட முடியாது
வெருண்டு நடுங்கி
கண்மூடிப் படுத்திருக்கிறேன்
ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கும்
உடல் தூக்கிப் போடுகிறது
இதுநாள் வரை புன்னகை பூத்தவர்கள்
எதிரிகளாகி விட்டார்கள்
தீச்சுவாலைகளுக்கிடையில்
எகத்தாளமிட்டுச் சிரிக்கிறார்கள்
என் நண்பர்கள் யாவரையும்
காண முடியவில்லை
யாருக்கும் எதுவும் நேர்ந்திராது
என்றெண்ணி ஆறுதல் படுகிறேன்
அதோ அனுபவமிக்க என் ஆசான்
தெருவில் ஓரமாக உயிரைக் காக்க
ஓடுகிறார் வெடிச்சிதறல்களுக்கிடையில்
துரத்துகிறது கூட்டம்
கடவுளே அவரைக் காப்பாற்று
எத்தனை இழப்பென்று தெரியவில்லை
இதோ பின்னிரவில் போர் ஓய்ந்தாலும்
ஆங்காங்கே இன்னும் கேட்கிறது
வெடிச் சத்தம்
தெருவில் மயான அமைதி
சண்டையிட்டுக் களைத்து
உண்டுவிட்டு உறங்குகிறார்கள் போலும்
இன்னும் விழித்திருக்க
என்னால் இயலவில்லை
கண்ணயர்ந்து போகிறேன்
நாளை நன்னாளாக விடியட்டும்

*
"அம்மா இங்க பாரு
தீவாளி முடிஞ்சி ரெண்டு நாளாச்சி
டைகர் வெளிலயே வரமாட்டேங்குது
அடம் பிடிக்குது
என்னன்னு கேளு..."
***
image courtesy : bbc.co.uk

