திண்ணையில் சரவணன்
கிழித்த பக்கத்தில்
கிறக்கத்துடன்
'ஆமைபோல் நகரும்
கடிகாரம்
நீ வந்ததும்
முயல் போல் ஓடுவதேன்
கண்ணே' என
கோடிவீட்டு லட்சுமிமீது
எழுதி ஒளித்துவைத்த
புதுக்கவிதை
தமிழ் ஐயா தேனப்பன் கண்ணில்
சீட்டாட்டத்தின்போது பட்டுவிட
சீட்டுக்கட்டைத் எறிந்துவிட்டு
'வக்காலி' என்று வேட்டியை
மடித்துக்கட்டித் தேடினார்
சரவணனை-நல்ல வேளை
ஐயா கையில் சிக்கியிருந்தால்
வெண்பாவாயிருந்தவன்
திருக்குறளாகியிருப்பான்
தப்பித்தான் சரவணன்
தப்பித்தது புதுக்கவிதை
இன்னும் மிச்சமிருக்கின்றன
எழுத்ப்படாத கவிதைகளும்
கிழிக்கப்படாத பக்கங்களும்
சரவணனின் காதலும்!


