ஓங்கரித்து அழுததில்லை எதற்கும் -
இன்றுவரை
இறந்த கால மரணங்களுக்கும்
விலகிக் கரைந்த காதலுக்கும்
உயிர்த் தோழனின் துரோகம்
தந்த வலிக்கும்
வயதாகாது நிற்காது ஓடியென்னை
வயதாக்கிப் பின்தள்ளும் காலத்திற்கும்
நெஞ்சினுள் பந்து போல் கண்களில்
நீர் உறைபனியாய் நின்றதோடு சரி
எதிர்பாரா தருணங்களில் எனைச்சுற்றி
இலையுதிர்கால மரங்களைப் போல
விழுந்துகொண்டேயிருக்கின்றன சோகங்கள்
அப்போதும் வாய் பேசாது நிற்கையில்
மரமாகிப் போனேனோவென நினைத்ததுண்டு
மரங்களின் சுரணையற்ற தோல் போலத்
தடித்து மரத்துப் போனதோ மனமெனக்
குழம்பியதுண்டு
எதிர்பாராமல்தான் விடிகின்றன
ஒவ்வொரு பகலும்
இலைகளிழந்து நிர்வாணமாய்
நிற்கின்றன மரங்கள்
குளிர்காலக் கொடும்பனிப்பொழிவுகள்
நித்தமும் தொடர்கின்றன
இயற்கை செயற்கை எல்லாவற்றையும்
வஞ்ச(க)மில்லாது மூடிவிடுகிறது பனி
அது மனிதர் மனவழுக்குகளையும்
மூடிவிட்டால் எவ்வளவு நன்றாகவிருக்கும்?
கைத்தடி துணைவர காலை நடத்தலைத்
துவக்கித் தெருக் கோடியில் திரும்புகையில்
சாலையோர வெண்பனியில் துருத்தியிருந்தது அது
அருகில் நெருங்கிப் பார்த்தால்
அசைவற்றுத் தென்பட்டன மென்பாதம்
மண்டியிட்டு நடுங்கும் விரல்களால்
பனிவிலக்கிப் பார்க்க கண்மூடிப்
புன்சிரித்து மல்லாந்திருந்தது
எதிர்வீட்டின் முகவரியோடு
என் வீட்டில் எப்போதுமிருக்கும்
அந்தச் சாம்பல்நிறப் பூனை
கடைசிச் சிநேகிதமும் போயிற்று
அத்தருணத்தில் அச்சாலை விளிம்பு
வாழ்க்கையின் விளிம்பாகத் தோன்றியது
வழமையான இரவு உலாவில்
வேட்டையாடப்பட்டுப் போயிருக்கிறது
பூனையின் உயிர்
வேட்டையாளன் யாரெனத் தெரியவில்லை
ஒன்றுமட்டும் நிச்சயம் அவன்
ஓங்கரித்து அழுதிருக்கமாட்டான் எதற்கும் -
இன்றுவரை
ஒருவேளை
நானும் வேட்டையாளனோ?
***


