Wednesday, September 17, 2008

வாய்விட்டழுது



வாய்விட்டழுது பல வருடங்களாகின்றன
அழுகையில் என்ன சுகம்? ஆனால்
அழாமலிருக்கும் வாழ்க்கை
சிலநேரங்களில் வேதனையாக இருக்கிறது

துக்கம் தொண்டையடைத்த தருணங்கள் உண்டு
கால்கள் நழுவிப்போன நிகழ்வுகள் உண்டு
சட்டென்று முகம் திருப்பி
விழிநீரைத் தேக்கியதும் உண்டு
அப்போதெல்லாமும் வாய்விட்டழுததில்லை

எது என்னைத் தடுக்கிறதென்று புரியவிடாமல்
எள்ளிநகையாடுகிறது மனக்குரங்கு
இப்போதைய துக்கத்திற்கு வாய்விட்டழவேண்டும்
ஆனால் இன்னும் அழ முடியவில்லை
உண்மையைச் சொன்னால் உறக்கம் வருகிறது

இரவுக் கனவுகள் பனியாய் இறங்குகையில்
இருட்டுப் போர்வையைப் போர்த்தி
அவற்றைத் துரத்துகிறேன்
விடியலில் கனவுகளின் மிச்சங்களிருப்பதில்லை
உறக்கம் கலைந்து விழித்திருந்த இரவுகளில்
உலகின் நிசப்தத்தில் ஆழ்ந்து லயித்திருக்கிறேன்

என்னிடம் ஒரு திட்டமுண்டு
தொலை தூரத்தில் தெரிகிறதே அக்குன்று
சிவந்து, கருத்து, ஒளிர்ந்து, இருண்டு
என்று உணர்வுகள் தளும்பக்
குவியலாக நிற்கிறது அது

ஞாயிறன்று ஞாயிறு எழுமுன்
அங்கு சென்றுவிடவேண்டும்
குன்றின் மீதேறி உச்சியடைந்ததும்
உலகத்தை அங்கிருந்து பார்க்கவேண்டும்
சிறுமதி படைத்த மனிதரெல்லாம்
சிறிதாகத் தெரிவதை ரசிக்கவேண்டும்
ஓங்கிக் குரலெடுத்து அழுதுகொண்டு
ஒற்றை வரிக் கவிதை போலச் செல்லும்
ஒய்யார ரயிலைப் பார்வையிலிருந்து
மறையும்வரைத் தொடரவேண்டும்
நாள் கரைந்து கூடு திரும்பும்
பறவைக்கூட்டத்தைப் பார்க்கவேண்டும்

அந்திப் போர்வை குன்றைத் தொடும்போது
தொலைந்த வெளிச்சத்தைத்
தேடிவரும் இருள்
உச்சியில் தனித்திருக்கும் பாறைமீதேறி
தனிமையில் தனியனாக
ஆரவாரங்கள் அடங்கக் காத்திருந்து
யாரும் பார்க்காத கேட்காத அவ்விடத்தில்
முன்பின் மறைப்புகளன்றி பரந்து விரிந்த
நிர்வாணப் பிரபஞ்சத்தைப் பார்த்துப் பின்
விண்ணோக்கி விழிகள் மூடி
வாழ்வில் சேர்ந்துவிட்ட துக்கங்களையெல்லாம்
அடிமனதிலிருந்து எக்கிக் கிளறி
நிலைகுத்திய காற்றை அசைக்கும்வண்ணம்
பெருங்குரலெடுத்து அழவேண்டும்
மூச்சு தீரும்வரை, துக்கம் வற்றும் வரை.

காற்றில் கரைந்துபோகட்டும் என்னழுகை
விடியலின் வேதனை வெளிச்சம்
வாழ்வில் பரவும் மற்றுமொருநாளை
நான் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது
பழைய நாட்களின் மரணம்
நினைவுக் கிணற்றில் படிமமாகிவிட்டது

இக்குன்று மட்டும் இல்லாதிருந்தால்
என்ன செய்வேன் என்று யோசித்ததில்
துக்கம் தொண்டையை அடைக்கிறது - ஆனால்
வாய்விட்டழத்தான் முடியவில்லை!

***

Tuesday, September 16, 2008

மணம்

தொடர்ந்து முழங்கும் குண்டுகளால்
அதிர்கின்றன நெஞ்சுக்கூடுகள்
பற்கள் அரைபட இறுகிய தாடை
இமைகளைப் பிரிக்கிறது நீர்க்கோடு
வெடித்துக் கிளம்பும் விம்மல்கள்
விழி வழியாய் வெள்ளமென உணர்வுகள்
வெடித்திடத் துடிக்கின்றன இதயங்கள்

சூன்யம் நிரம்பித் ததும்புகிறது வீடு
அந்தியிருள் சூழ்ந்து வர வெளிச்சமின்றி
இருண்டிருக்கின்றன உயிரற்ற விளக்குகள்

ஒட்டடை போர்த்திய நடைவண்டி பரணில்
தூசி படிந்த அறையில் அசைவற்ற தூளி்
ஒலியெழுப்ப அஞ்சியுறங்கும் கொலுசு
ஓரமாய் கிடக்கும் விளையாட்டுச் சாமான்கள்
மழலையும் கொலுசுச் சத்தமும் ஓய்ந்து
மயானமாய் காட்சியளிக்கிறது வீடு

துணிசுருட்டித் தூக்கிய கரங்களிலிருந்து
எழும்பிப் பரவித் தொட்டுலுக்குகிறது உயிரை
அக்குழந்தையின் மணம் இன்னும்

****

Friday, September 12, 2008

என் காதலும் அதற்கான கவிதையும்



ஏய்! என்னது காதல் கவிதை எழுதணுமா?

எனக்குக் காதல் கவிதைன்னாலே புடிக்காது
ஒருவேளை எழுத வராதுங்கறதால
ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு
அப்படிச் சொல்றேனோ??

Well, உனக்கு நினைவிருக்கா?
First Meet பண்ணப்போ ரெண்டே second-ல
I fell in love with you!
But I'm still wondering
why I took the 2nd second!

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ உன்னிடம் இருக்கிறதுன்னு
பாலு பாட்டை எத்தனை தடவை
கேட்ருப்பேன்? பாடிருப்பேன்?

அது என்னன்னு இன்னிக்கு வரைக்கும் தெரிலைடி

என்னடீ மாயம் செஞ்சே!
அது உன்னோட smile-ஆ?
உன் husky voice-ஆ?
நவாப்பழக் கண்களா? இல்லே
கடிச்சிடலாம்னு தோண்ற உதடுகளா?
இல்ல கழுத்... ஏய்.. அடிக்காதே

Let me try this!

----

மழை பெய்த நாட்களில்
அரவமற்ற தெருக்களில்
விரைந்திட்ட வாகனத்தில்
செல்கையில் நீயென் கழுத்தில்
முத்தமிட்டென்னை மயிர்
கூச்செறியச் செய்த கணங்கள்
மனக் கோவிலின் கல்வெட்டுகளாய்
நிற்கின்றன இன்றும்

இடையணைத்த பயணத்தில் உயிரைக்
கதகதப்பாக்கினாய்
ஆடைமாற்றிடப் பொறுமை காத்துப் பின்
அருகில் நெருங்கினாய்
உடன் துவங்கிய முடிவிலா
முத்தங்களில்
உயிர்த் தேடலைத் தொடர,
கதவு தட்டத் தயங்கி வெளியில்
காத்திருந்தது இரவு - இரவு முழுவதும்.

எத்தனை இரவுகளை
நாம் காக்கச் செய்தோம்!

நரை படர்ந்த பின்னும் இளமையாகத்
தொடருகிறது நம் காதல்
நாமிருக்கும்வரை மட்டுமல்ல
நமக்குப் பின்னும் அது தொடரட்டும்

----

ஆச்சா... இதுக்கு மேல முடியாதுப்பா
என்னோட காதல் பத்தி இனிமே
கவிதையா எழுதச் சொல்லாதே
எனக்குத் தலைவர் கமல் சொன்னதுதான்
ரொம்பப் பிடிக்கும் - என்னவா?
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்!

செயல்லயே காட்டிடறேனே ப்ளீஸ்!
என் கிட்டக்க வாயேன்!

****

Wednesday, September 10, 2008

காணி நிலம்


ஒசந்து கெடந்த தென்னை, பனையைக் காங்கலை
மாமர, வாழைத் தோப்புகளையும் காங்கலை
கரும்பு, கம்பங் காடுகளையும் காங்கலை
ரெண்டு பக்கமும் பச்சைக்கம்பளமா விரிஞ்ச
நஞ்சை, புஞ்சைகளையும் காங்கலை
வரப்புகளைக் காங்கலை ஓடின
வாய்க்காலுங்களையும் காங்கலை
எல்லாமே 60 x 40 துண்டுகளா மாறிப் போச்சுது
நாலு மூலைல வெள்ளைக் கல்லுங்க - பூமித்
தாயோட கல்லறை மாதிரி தோணுதுங்க
மயானமாச்சுது பூமி
மாறிப் போச்சுது மண்ணு
அவ கண்ணீர் விட்டு அழுது அழுது
வத்திப் போச்சுது தண்ணியும்
பூமித் தாயைச் செரச்சுப் போட்டு
மூதியாக்குற மேதாவி ஜனங்க
நெல்லு வெளைஞ்ச பூமில
வீடுங்க வெளையுது இன்னிக்கு
இப்படியே போனா நாளை பசிக்குச்
செங்கலைத்தான் திங்கணும் போல
'காணி நிலம் வேண்டும்'னத ஒருவேளை
தப்பாப் புரிஞ்சிக்கிட்டோமோ?

***

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...