Friday, November 05, 2010

இன்று மற்றுமொரு நாளே


சீறிப்பாயும் ராக்கெட்டுகள்
சரவெடிகள் அணுகுண்டு
லஷ்மி வெடி பூச்சட்டி
தரைச்சக்கரம் கம்பிமத்தாப்பு
எண்ணைக் குளியல்கள்
புத்துடைகள் இனிப்புகள் காரங்கள்
வாழையிலை நிரம்பிய விருந்து
தலைதீபாவளி கால்தீபாவளி
நகை நட்டு பட்டுச்சேலை
நாள்முழுவதும் ஊடகங்களில்
நாடாள்வோர் தலைமையில்
நடிக நடிகையர்களின்
களிப்பாட்டங்கள்
இவை எதுவமற்று
இன்று மற்றுமொரு நாளே
என இன்றைய கஞ்சிக்கும்
என்று போல் அல்லாடும்
எளிய மக்களுக்கு
ஒலியற்ற புகையற்ற
உள்ளத்தில் புகைச்சலற்ற
இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Thursday, September 30, 2010

வெறுமை


உறங்கிய பாட்டி
உறங்கிய பூனை
உட்கார்ந்தாடிய சொந்தங்கள்
சிந்தாது நின்ற நீர்க்குவளை
உந்தித் தள்ளி
பிடரியிலிடித்த குழந்தைகள்
இவை எதுவமற்று
வெறுமனே காற்றில் ஆடுகிறது
ஊஞ்சல்!

Saturday, August 14, 2010

உணர்வு


உலகத்தினுச்சியில் நிற்பதைப் போல்
மேகங்களின் மீது பறப்பதைப் போல்
முடிவிலாது விழுவதைப் போல்
முடிவே இதுதான் என்பதைப் போல்
புதுவாழ்வு துவங்குவதுபோல்
வாழ்வின் அர்த்தம் இதுவென்பதைப் போல்
எல்லாமும் பெற்றதைப்போல்
எல்லாவற்றையும் ஒருசேர
ஒரே முத்தத்தில் உணரவைத்தாயே
கண்ணம்மா!

Friday, August 13, 2010

இலையுதிர் காலம்


தீப்பிடித்தாற்போலிருக்கின்றன மரங்கள்
சரசரவென்று ஒலியெழுப்பும்
இலைச்சருகுகள் மீது நடக்கையில்
குளிர்ந்து வீசுகிறது காற்று
கழுத்துப்பட்டையை நிமிர்த்திக்
கைகளைச் சட்டைப்பைகளில் திணித்து
இதம் தேடி நடக்கின்றேன்

இலைகள் மொத்தமும் உதிர்ந்து
எலும்புக்கூட்டு மரங்கள்
அசைவற்ற கல்லறைகளாய்
மோன நிலையில் நிற்கின்றன

எப்போதாவது தலைகாட்டும் சூரியனின் கதிர்கள்
இலைகளற்ற மரக்கிளைகளினூடே பாய்ந்து
இன்னும் அதிகமாக வெளிச்சமாக்க
வந்தே வந்துவிடும் பனிக்காலம்

பருத்தி அறுவடைக்காலம்போல
பஞ்சுப் பொதிகளாய் விழும் பனி
மாசுக்களைத் துடைத்தெடுத்து
நிறங்களை மறைத்து எங்கெங்கும்
வெண்போர்வை போர்த்திவிடும் பனி
நீராவியாய் வெளிவரும் மூச்சுக் காற்று

கால்சராய்ப் பட்டிகளையும்
கனத்த காலணிகளையும்
ஏமாற்றி நுழையும் பனித்துளி
உடனுருகி உள்ளங்காலில் சில்லிக்கச்
சட்டென இயற்கைமேல் எழும் கோபம்
அப்பனித்துளி வாழ்ந்த கணமே வாழ்ந்து
இலையுதிர்வது போல மனதிலிருந்து உதிரும்

மனதின் கடந்த சில நினைவுகள் மட்டும்
இலைகள்போலல்லாது உதிர்வதேயில்லை

***

படியில் விழும் வெளிச்சம்


மூலையில் முடங்கியிருக்கும் என்னுடன்
கால்நீட்டியிருக்கிறது என் கைத்தடியும்
வெளியே வெளிச்சம் கண்கூசுகிறது
தினமும் அதுதான் கண்விழிக்கச் செய்கிறது
வாசற்படி வழியாக நீண்டு ஊர்ந்து விரிந்து 
உள்ளே தரையில் விழுந்து கிடக்கும் அது

கைத்தடியைத் தட்டி அதையருகில்
வரச்சொல்லிப் பார்த்திருக்கிறேன்
பதில்சொல்லாது கிடக்கும் வெளிச்சம்
காலம் கரையப் பின்வாங்கிச் சுருங்கி
கதவு நிலையில் நின்று வெளியேறிப்
போய்விடும்

சில நேரங்களில் தவிட்டுக் குருவிகள்
ஜன்னலில் நிழலாக அமர்ந்து 
காகங்களின் கரைதலுக்குச் 
சிறகு குலுக்கிப் பறந்து போகும்

வெளியுலகின் இயக்கங்கள் தொடர
நானும் என் கைத்தடியும் மூலையில்
என்றாவது வெளிச்சத்தின் கைப்பற்றக் 
காத்திருக்கிறோம்

***

Thursday, July 29, 2010

உயிர்


காகங்கள் வரிசையாய் கரைய
மின்கம்பிகளில் தொங்குகிறது
குரங்குக் குட்டியின் உடல்

***

Monday, April 05, 2010

சுமை


மண்டியிட்டுக் கிடக்கும் வண்டிமுன்
அவிழ்ந்த காளை
சாணக் காலணியோடு வாலாட்டி
ஈக்களை விரட்ட முயல்கிறது
விடுவதாய் இல்லை ஈக்கள்
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுகிறது
ஈக்கள் கடிக்குமிடத்தில்

கொம்புகளுக்கிடையே அமர்ந்து
கொத்துகிறது காகமொன்று
காலையில் தின்ற தீவனம் அசைந்து
நுரையாக வழிகிறது வாயோரம்
வண்டிக்காரன் சத்தத்தைக் காணோம்
சத்தம் வாங்கிவரச் சென்றிருப்பானோ

வெயில் வாட்டுகின்றதைப் பொருட்படுத்தாது
வறட்டி தட்டுகிறாள் கிழவி
வண்டி பின்னால் தொங்கி
ஊஞ்சலாடுகிறார்கள் சிறுவர்கள்
ஓரமாய் வண்டியேறக் காத்திருக்கும்
நெல் மூட்டைகளைப்
பளபளக்கும் கருவிழிகளால்
பார்த்துவிட்டு முடியாதென்பதுபோல்
தலையாட்டக் கலகலவென
ஒலிக்கின்றன கழுத்துமணிகள்

தலைப்பாகை கையில் குச்சி வாயில் புகை
மடித்துக்கட்டிய வேட்டியுடன்
வந்துவிட்டான் வண்டிக்காரன்
ஆட்கள் மூட்டைகளையேற்றத் துவங்க
இன்னும் தலையாட்டிக்கொண்டிக்கிறது
மாடு!

***

Saturday, April 03, 2010

துடிப்பு


பத்தாயத்தினுள் பாதி வடையும்
வெளியே பாதி வாலும்
ஆடிக்கொண்டிருக்கின்றன

Wednesday, March 03, 2010

பாலம்



நேற்றும் நல்ல மழை பெய்தபோதும்
கற்குவியலும் பாறைகளும்
முற்புதர்களும் நீர்த்தொட்டிகளும்
குழந்தைகளும் ஆண்களும் பெண்களும்
கொடிகளில் வண்ண ஆடைகளும்
கழுதைகளும் நாய்களும் பன்றிகளும்
ஓரிரு லாரிகளும் மாட்டுவண்டிகளும்
மனிதக் கழிவுகளும் குப்பைகளும்
நிரம்பியிருக்க
இடமில்லாமல் நரம்பு போல
சீரற்று கற்றையாய் ஓரமாய்
தங்கித் திணறி ஓடுகிறது
மழைநீர்

போனவருடம்வரை கூட
மணல் நிறைந்திருந்ததைப்
பார்த்த ஞாபகம்

பாலத்திருந்து பார்த்தால்
நதியின் அடையாளங்கள்
எதுவமற்று ஊர் போலவே
காட்சியளிக்கிறது
வைகையூர் என்று பலகை
மாட்டாதது மட்டும் பாக்கி

மேம்பாலத்திற்குக் கீழே
தரைப்பாலமொன்று

சுட்டெரிக்கிறது வெயில்
உச்சியிலும் உள்ளங்காலிலும்
சூடு தகிக்க நடக்கத் துவங்கினேன்
பாலங்களின் கேலிச் சிரிப்புகள்
முதுகில் தகிக்கத் துவங்கின

***

Monday, February 22, 2010

சாலை



சேவலுக்கு முன்பாக வந்து
தெருமுனையில் நிலைகொண்ட
கலவை இயந்திரத்தின் கூவலில்
விழித்துக்கொண்டது தெரு
வேலையாட்கள் மும்முரமாக
வேடிக்கை பார்த்தது தெரு
வெளியே நின்ற சிறு வாகனங்கள்
வீட்டுக்குள் அலறிப் புகுந்துகொள்ள
பெரிய ஊர்திகள் அடுத்த தெருவுக்குத்
இடம் பெயர்ந்தன
மனித வாகன நடமாட்டமின்றி
வெறிச்சோடியது தெரு

கற்களையும் கருஞ்சாந்தையும் கலந்து
சரளைக் கற்களைப் பரப்பி ஊற்ற
கடமுடவென ஒலியெழுப்பிப்
புகை பரவ வீதியுலா சென்றது
கல்லுருளை வாகனம்

இரைச்சலும் சத்தங்களும் 
மாலையில் ஓய்ந்துவிட
வாசல்களை இணைத்து
தெரு நெடுக நீண்டது
அந்தக் கரிய சாலை

திண்ணைப் படியிலமர்ந்து
கற்கள் புதைந்து பளபளத்த
அச்சாலையைப் பார்த்தேன்
இத்தனை நாள் பழகிய
மண்சாலை போயிற்று
இனி
கட்டைவிரல் நகம்பெயராது
கண்ணாடிச் சில்லுகள் குத்தாது
சேறு படாது உடைகளில்
கோவில் தேரிழுப்பதும் சுலபம்
குண்டுகுழிகளற்ற சீரான சாலையில்
வேகமாகச் சைக்கிள் விடலாம்
கிராமம் சீக்கிரமே டவுனாகப் போகிறது
எனக் கற்பனைகள் பரவசமூட்டின

பாதம் குறுகுறுக்கப் பார்த்தால்
கூரையிலிருந்து வரிசையாய்
திண்ணை மூங்கில் தட்டியில்
இறங்கிய பிள்ளையார் எறும்புகள்
தார்ச்சாலை விளிம்பில்
வரிசை கலைந்து குழம்பி நின்றன
வழக்கமாகக் தெருவின் குறுக்காகத்
தாவியோடும் பக்கத்துவீட்டுப்
பூனை படியில் தயங்கியிருக்க
வண்டி பூட்ட இழுத்தால் வராமல்
சண்டித்தனம் செய்து தெருமுனையில்
நின்றது அந்தக் காங்கேயக் காளை

மண்சாலை காணாத மயக்கம் போலும்
நாளாக நாளாகப் பழகிவிடும் எனப்
புன்னகையுடன் எழுந்து திரும்ப
கண்ணில் பட்டது படியோரமாய்
புதைந்திருந்த அந்தக்
காகிதக் கப்பல்!

***



Thursday, February 18, 2010

மீன்



படித்துறையிலிறங்கி நீரில்
கால் மூழ்க நிற்கையில்
பாதம் சூழ்ந்து முத்தமிடும் மீன்கள்
அழுக்கெடுக்கின்றனவாம்

கண்ணாடித் தொட்டிக்குள்
தங்க மீன்களும் வெள்ளி மீன்களும்
வாய்திறந்து நீரைச் சுவாசித்தபடி
வளைய வருகின்றன
தொட்டி பளிச்சென இருக்கிறது
ஓய்வின்றி நீந்தி வரும் மீன்கள்
அழுக்கெடுக்கின்றனவாம்

குதூகலமாய்ச் சுற்றிவரும்
மீன்களிலொன்றை எடுத்து
மனதுக்குள் விட்டாலென்ன!
எனத் தோன்றிற்று!

***

Sunday, February 14, 2010

மாசு


களத்துமேட்டில் அறுவடை முடிய
குவித்த நெல் அம்பாரத்தின் விளிம்புகளில்
தங்கமாய் மின்னி விழுகிறான் கதிரவன்
ஒற்றை ஆலமரத்தடியின் கயிற்றுக் கட்டில்
முதுகுக்கு இதம்தர
லேசாய் வீசுகின்ற தென்றல்
கண்ணயர்த்துகிறது
காரிருள் போர்வை போர்த்த
கண்ணாடிச் சில்லுகளாய்
மின்னுகின்றன நட்சத்திரங்கள்
விரையும் மேகங்களிடையே
கண்சிமிட்டி எதிர்த்திசையில்
விரைகிறது நிலா
இரவுப் பறவைகளும் வௌவால்களும்
நிழல்களாய் கடக்க
ஊரடங்கி ஒலியடங்கி
இறுதியில் ஒளியடங்க
உடல்வலியடங்க இனிதாய் தூக்கம்

***
அசுரத்தனமாக விஞ்ஞான வேட்டையாடி
இயற்கையை வெல்லத்துடிக்கிறான் மனிதன்
இப்போதெல்லாம் இரவுகள் கண்கூசுகின்றன
மஞ்சள், வெள்ளை பல வண்ணங்களில்
ஊரெங்கும் ஒளிவெள்ளம் நிரம்பித் தளும்ப
களத்துமேடு வெறிச்சோடியிருக்கிறது
ஒளிர்கிறது ஊர்
ஆலமரமும் அதன் விழுதுகளும் என்றோ
வேரறுக்கப்பட்டு அவ்விடத்தில்
அமோக விளைச்சலாகக் கட்டிடங்கள்
மொட்டைமாடியில் இரவுப் படுக்கை
அண்ணாந்து பார்க்க ஆங்காங்கே
சோகையாய் சில நட்சத்திரங்கள்

***
பகலில் ஒலி மாசு இரவில் ஒளி மாசு
எப்போதும் காற்று மாசு என
மனம் முழுதும் மாசுடன்
வேட்டையைத் தொடருகிறான் மனிதன்

***
ஒளியிழந்த வானத்தில்
வழிதவறிவிடும் என பயந்து
மேகங்கள் இப்போதெல்லாம்
ஊர்ப்பக்கம் வருவேதேயில்லை

***

Thursday, February 11, 2010

பட்டியல்



அ-ம்மாவின் அழுகை
ஆ-சை தீர்ந்தபின் எழும் உணர்வு
இ-ருமனம் தரும் மயக்கம்
ஈ-னத் தனங்கள்
உ-ணவின்றி வாடும் வறுமை
ஊ-சிபோல் குத்தும் சொற்கள்
எ-லும்பற்ற புழு அரசுகள்
ஏ-மாற்றும் தலைவர்கள்
ஐ-யம் தரும் சினேகம்
ஒ-ழுக்கம் பற்றிய (மாறும்) விதிமுறைகள்
ஓ-டாத நதிகள்
ஔ-டதங்களில் ஜீவிக்கும் உயிர்
ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!

***

Friday, January 29, 2010

கரட்டாண்டி


சுள்ளென்று கண்கூசும் மதிய வெயில்
இயக்கங்களை முடக்கி கானல்நீராய் ஓட
பட்ட மரக்கிளையொன்றில் அரைக்கண்
நித்திரையிலிருக்கிறது அந்தக் கரட்டாண்டி

கிளை இலைகளின் நிழல் நகர்ந்தபின்னும்
வெயில் உறைக்காது அசைவின்றி
இருக்கிறது கரட்டாண்டி

கரட்டாண்டியாய் பிறந்திருந்தால்
எப்படியிருக்கும் என
அசை போடுகிறது மனது
அவ்வளவாய் பசிக்காதோ?

நிழல் தேடி நகருமுன் சிறு
கல்லெறிந்து பார்த்தேன்
கரட்டாண்டி பயமின்றி இருந்தது

தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
சிங்கம்போல் பிடரி சிலிர்த்து
உறும வேண்டிய வேளைகளில் கூட
கரட்டாண்டியாய் அசைவற்றிருக்க
வேண்டியதாகிவிடுகிறது

முரண்களுடன் ஓடத் தேவையற்ற
கரட்டாண்டி அதிர்ஷ்டசாலிதான்!

***

Wednesday, January 27, 2010

விலகுதல்


விலகுதல்களில்லா நாட்களில்லை
முயக்கம் முடிந்ததும் விலகும் இணைகள்
மலை முகடுதொட்டு விலகும் மேகங்கள்
மண்டியிட்டுத் தென்னம்பிள்ளையை
நிலத்திலூன்றி எழுந்து பின்
மண்தட்டி விலகி நின்றது
கைபிடித்து வந்த பிள்ளையை முதல் நாள்
வகுப்பறைக்குள் அனுப்பிவிட்டு விலகி
வாசலில் நிச்சயமற்றுத் தவிப்புடன் காத்திருந்தது
பால்குடிக்கத் துவங்கும்முன்பே இழுபட்டு
காம்புகளிலிருந்து விலக்கப்பட்ட கன்று
காயம் பட்டுச் சாலையில் விழுந்த மனிதனைக்
காணாதது போல விலகிச் செல்லும் மாக்கள்
கழுத்தைப் புண்ணாக்கிய நுகத்தடியிலிருந்து
விடுவிக்கப்பட்டதும் விலகி நிற்கும் காளை
காலத்தேயுதவி செய்யாது விலகிய தோழன்
தோளுக்கு வளர்ந்த பிள்ளைகள் விலகிச் சென்ற நாள்
கால்களையணைத்த குழந்தை மேல்
சினம் காட்டி விலக்கித் தள்ளிய தருணங்கள்
காரணஞ்சொல்லாமலே விலகிய காதலி


மகிழ்வித்த விலகல்களும்
மனமொடித்த விலகல்களுமென
விலகுதல்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்
அபாரமானவை
புற விலகுதல்கள் பழகிவிட்டது
புறம் விலக்க அகம் பழகிவிட்டது

ஆனாலும்
சிலநேரங்களில் சில நெருக்கங்கள்
நினைவில் கிளர்ந்து நெஞ்சை எரிக்கையில்
விலகுதல்களில்லா வாழ்க்கைக்கு
மனம் ஏங்கிவிடுகிறது சில கணங்கள்!

***

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...