Friday, July 22, 2011

பசி



வைக்கோலடைத்த கன்று
காற்றிலாடும் வெற்றுத்தூளி
வலிக்கும் மார்புக்குள் வெளியேறாச் சீம்பால்
இரவு நிலா நிசப்தமாக அழ
பசுவுக்கும் மனைவி்க்கும் சொந்தக்காரன்
அவன் பசியில் மட்டும்
கண்ணாயிருக்கிறான்.

Thursday, July 21, 2011

மனத் தூரிகை




உயிரோவியம் நீ - உன்
விழிகளின் கண்ணீர் அழித்து - பின்
இதழ்களில் புன்னகை வரைந்திட
விழைகிறேன் மனத்தூரிகையால்!

Monday, July 11, 2011

மனம்!

ரொங்கும் பம்பரமும்
பறக்காது அந்தரத்தில் நிற்கும்
தட்டானும் தரும்
சலனமற்றக் காட்சிப்பிழைபோல்
காட்சி தருகிறதென்
மனம்!

Friday, July 08, 2011

இயல்புக் கலைப்பு


அதிவிரைவாய் வந்த கருமேகக்கூட்டம்
கூடாரமாய் விரித்துச் சூழ 
இருளடித்து ஓடி மறைந்தது சூரியன் 

சடசடவென கண்ணாடியை அறையும்
மழைத்துளிகளைத் துடைத்தெறியும்
நீர்துடைப்பான்கள் படபடக்கச் 
சாலைகளில் விரைகின்றன வாகனங்கள்
குடைகள் விரித்தும் கூரைதேடியும்
ஓடுகின்றது ஜனக்கூட்டம்
தூரத்து வானில் ஒளிக்கம்பியாய்
இறங்கித் தழுவிய மின்னலின்
முத்தச்சூடு தாங்காது பற்றியெரிகிறது
தென்னைமரம் - பின் நொடிகள்
தாமதித்துச் செவிகளில் மோதுகிறது 
இடியின் ஆவேசம்
சிலகணங்களே நீடித்ததந்த
இயற்கையின் இயல்பு கலைப்பு

யாரோ கையசைத்தாற்போல
சட்டென எல்லாமும் நிற்க
கலைந்து கரைந்தன மேகங்கள்
அவசரமாய் வானவில்லொன்றுடன்
வெளிப்பட்டுச் சிரிக்கிறான் சூரியன்
எதுவும் நடவாதது போல் எல்லாம்
வழமையாகக் காட்சியளிக்க
ஏரிமேல் அலறிப் பறந்து போகின்றது
குழம்பிய வாத்துக் கூட்டமொன்று 

சாலையில் மிச்சமிருக்கிறது 
மழையின் ஈரம் மட்டும்!

Thursday, July 07, 2011

மனத் தனியன்


இடப்புறம் ஒருக்களித்து இரவோடு 
படுத்திருக்கிறேன் தனிமையில் 
வலது விழியோரம் நீர் கசிந்து 
இடவிழி சேர்ந்து கனக்க 
இமை மீறிக் கண்ணீர் 
காதை நனைத்துக் கரைய 
மனதும் கரைந்தது - ஆனாலும் 
கரையாது கல்லாய்ச் சமைந்திருக்கின்றன
சில நினைவுகள் மட்டும் 
கண்களைக் கசித்துக்கொண்டு 
பிரிவென்னும் நரகத்திலுழல்வது 
மகாகவிக்கு மட்டும் நிகழ்வதில்லை 
எனக்கும் என் போன்ற சாமான்ய 
மனத் தனியர்களெல்லாருக்கும்

***

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...