Saturday, August 14, 2010
உணர்வு
உலகத்தினுச்சியில் நிற்பதைப் போல்
மேகங்களின் மீது பறப்பதைப் போல்
முடிவிலாது விழுவதைப் போல்
முடிவே இதுதான் என்பதைப் போல்
புதுவாழ்வு துவங்குவதுபோல்
வாழ்வின் அர்த்தம் இதுவென்பதைப் போல்
எல்லாமும் பெற்றதைப்போல்
எல்லாவற்றையும் ஒருசேர
ஒரே முத்தத்தில் உணரவைத்தாயே
கண்ணம்மா!
Friday, August 13, 2010
இலையுதிர் காலம்
தீப்பிடித்தாற்போலிருக்கின்றன மரங்கள்
சரசரவென்று ஒலியெழுப்பும்
இலைச்சருகுகள் மீது நடக்கையில்
குளிர்ந்து வீசுகிறது காற்று
கழுத்துப்பட்டையை நிமிர்த்திக்
கைகளைச் சட்டைப்பைகளில் திணித்து
இதம் தேடி நடக்கின்றேன்
இலைகள் மொத்தமும் உதிர்ந்து
எலும்புக்கூட்டு மரங்கள்
அசைவற்ற கல்லறைகளாய்
மோன நிலையில் நிற்கின்றன
எப்போதாவது தலைகாட்டும் சூரியனின் கதிர்கள்
இலைகளற்ற மரக்கிளைகளினூடே பாய்ந்து
இன்னும் அதிகமாக வெளிச்சமாக்க
வந்தே வந்துவிடும் பனிக்காலம்
பருத்தி அறுவடைக்காலம்போல
பஞ்சுப் பொதிகளாய் விழும் பனி
மாசுக்களைத் துடைத்தெடுத்து
நிறங்களை மறைத்து எங்கெங்கும்
வெண்போர்வை போர்த்திவிடும் பனி
நீராவியாய் வெளிவரும் மூச்சுக் காற்று
கால்சராய்ப் பட்டிகளையும்
கனத்த காலணிகளையும்
ஏமாற்றி நுழையும் பனித்துளி
உடனுருகி உள்ளங்காலில் சில்லிக்கச்
சட்டென இயற்கைமேல் எழும் கோபம்
அப்பனித்துளி வாழ்ந்த கணமே வாழ்ந்து
இலையுதிர்வது போல மனதிலிருந்து உதிரும்
மனதின் கடந்த சில நினைவுகள் மட்டும்
இலைகள்போலல்லாது உதிர்வதேயில்லை
***
படியில் விழும் வெளிச்சம்
மூலையில் முடங்கியிருக்கும் என்னுடன்
கால்நீட்டியிருக்கிறது என் கைத்தடியும்
வெளியே வெளிச்சம் கண்கூசுகிறது
தினமும் அதுதான் கண்விழிக்கச் செய்கிறது
வாசற்படி வழியாக நீண்டு ஊர்ந்து விரிந்து
உள்ளே தரையில் விழுந்து கிடக்கும் அது
கைத்தடியைத் தட்டி அதையருகில்
வரச்சொல்லிப் பார்த்திருக்கிறேன்
பதில்சொல்லாது கிடக்கும் வெளிச்சம்
காலம் கரையப் பின்வாங்கிச் சுருங்கி
கதவு நிலையில் நின்று வெளியேறிப்
போய்விடும்
போய்விடும்
சில நேரங்களில் தவிட்டுக் குருவிகள்
ஜன்னலில் நிழலாக அமர்ந்து
காகங்களின் கரைதலுக்குச்
சிறகு குலுக்கிப் பறந்து போகும்
வெளியுலகின் இயக்கங்கள் தொடர
நானும் என் கைத்தடியும் மூலையில்
என்றாவது வெளிச்சத்தின் கைப்பற்றக்
காத்திருக்கிறோம்
***
Subscribe to:
Posts (Atom)
அலகிலாக் காதல்
உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...
-
மொழியிலடங்கா உணர்வுகளை எனக்குள் எப்போதுமெழுப்புகிறாய் தேவதையே உன் குரல் கேட்க உனைக் காணத் துடிக்கிறதென் இதயம் காலமும் தொலைவும...
-
அடுக்கடுக்காய் மலைத்தொடர் அலைபோல் முகடுகளில் வழிந்து தவழும் மேகங்கள் மஞ்சள் புல்வெளிகளுக்கிடையே கரும்பச்சை மரக் கொத்துகள் பரமபதப் ப...


