பகல்களும் இரவுகளும் இடையறாது
நகர்ந்துகொண்டேயிருக்கின்றன
இரவுகளில் தழுவும் உறக்கத்தைப்
பகல் தட்டியெழுப்பிக்கொண்டேயிருக்கிறது
வழக்கமாக உற்சாகத்தை எழுப்பும் உதயம்
விழித்திருந்த பின்னிரவுகளில்
தாங்கவொண்ணாத் துயரமெழுப்புகிறது
இரவு எப்போது முடியுமெனச்
சில இரவுகள்
முடிவற்று நீளாதாவெனத் தோன்றும்
சில இரவுகள்
உறக்கமற்றிருக்கும் பின்னிரவுகளில்
மூடிய கண்களுக்குள்
பழங்காட்சிகள் விரிய
கரையாத நினைவுகளுடனான
மனதின் இவ்வுரையாடலை
நானும் இரவும் மட்டும்
அவதானித்துக்கொண்டிருப்பது
விநோதமாகத் தோன்றுகிறது
இறுதியில் களைத்துப் போய்
உடலை எழுப்பிவிட்டு பகலில்
உறங்கிவிடுகிறது மனம்
ஒரு முடிவுறாச் சுழற்சியாகத்
தொடர்கிறது இவ்வியக்கம்!