Saturday, December 17, 2005

* தட்டான் *



இறக்கைகளின் இயக்கத்தைப்
பார்க்க முடியாத வேகம்
ஊகிக்க முடியாமல்
சட்டென திரும்பி
மாறும் வழித்தடம்
ரகசியமாய்ப் பின்தொடர்ந்து
கரும்பச்சையில் நீண்டிருக்கும்
வால்பிடித்துத் தூக்குகையில்
விரலை வளைந்து
கவ்வும் சினம்
நூல்கட்டி காற்றில்லாமலும்
பறக்கும் தட்டான் பட்டம்

சிறகுகள் போல்
மென்மையான இவள்
ஊகிக்கமுடியாத தருணங்களில்
சட்டெனக் கண்சிமிட்டிப்
போகிறாள் நூல்போன்ற
என் காதலில் கட்டுண்டு
இச்சிறிய தட்டான் போல்

***

நன்றி. மரத்தடி.காம்

* என்னால் ஏன் அழ முடியவில்லை? *



தரைபார்த்து நீ நடந்த அன்று
எனைப் பார்த்துச் சிரித்தனவுன்
பாதங்கள்

பின்கழுத்துப் பூனைமயிர் வருட
பூச்சாரலில் மும்முடிச்சிட்ட
கணங்கள்

அக்னியை வலம்வந்து அன்றிரவில்
நம்முள் அக்னியால் எழுந்தடங்கிய
வியர்வை

அயர்வுடன் தூங்கிய பல இரவுகள்
அதைத் தொடர்ந்த பகல்
சொர்க்கங்கள்

உன் வயிற்றில் எழும்பித் தணிந்த
உயிரை மென்மையாக முத்தமிட்டதொரு
பொழுது

வலியென்று நீ சொன்ன போது
வாசலில் பதைபதைத்துக் காத்திருந்த
காலம்

'ங்கா'வெனக் காற்றிலலைந்து வந்து
ஆனந்தக் கண்ணீர் தந்த
மழலையொலி

உன்னுயிரைத் தந்து சென்றாய் நீ
எனக் கேட்டதும் மரித்த
என்னிதயம்

வாடிய மலர்க் கன்னத்தை உதடுகளின்
ஈரத்தால் உயிர்ப்பிக்கச் செய்த
முயற்சி

மறுபடியும் கண்திறவாதெனும் உண்மையை
நம்ப மறுத்துத் துடித்த
மனம்

நாவெழுந்து மேலண்ணத்திலொட்ட
செவிமடல்களில் உணர்ந்த
சூடு

தாடை கோணிக்கொள்ள உள்ளிழுத்த
தாங்கவொண்ணா உள்நாக்கின்
வலி

இன்னும் எதற்கு என்று விரக்தியுடன்
வேண்டாவெறுப்பாய் விடும்
மூச்சு

வாழ்க்கையின் விளிம்பில் நின்றுகொண்டு
வெறித்துச் சூனியத்திலுன்னைத்
தேடுகிறேன்

இன்னும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள்
என்னால் ஏன் அழ முடியவில்லை -
என்று.

***


நன்றி : மரத்தடி.காம்

Wednesday, December 07, 2005

* குளவி *



* குளவி *

காலையில்தான் கவனித்தேன்
வாசல் நிலைப்படியில் கூடு
ஒற்றை இருள் துளையில்
சலனங்களேதும் இல்லை

அந்திப்பொழுதில் திண்ணையில்
மங்கி எரிகிறது விளக்கு
புத்தகம் விரித்தமர்ந்ததும்
காதில் ஒலித்தது அதன் ரீங்காரம்

லேசான ஸ்பரிசத்தில் சிலிர்த்துத்
தலையுலுக்கிப் பார்க்கக் காற்றினில்
மிதந்தந்தக் குளவி

ஜிலீரென்றது அடிவயிறு
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க
நிதானம் தவறியது மனது
குதித்தெழுந்து விலகிப்
புத்தகத்தை வீசியதும் சட்டென
விலகிப் பறந்து முகத்தருகே
ரீங்கரித்தது குளவி

வீழ்த்தச் செய்த முயற்சிகள்
தோல்வியில் முடிய
தலை குனிந்து விலகி
ஓடினேன் வீட்டினுள்
கதவருகே ஒழுங்கற்ற
காற்றுப் பாதையில் சிறகடித்து
ரீங்கரித்தது குளவி

கம்பியொன்றுடன் திரும்பிடக்
கதவருகில் காற்று மட்டும்
தயங்கி வீசியது
நிலைப்படியை நெருங்கிச்
சுரண்டியதில் தேய்ந்து
வீழ்ந்தது சலனங்களற்ற
அந்தக் கூடு

பிரச்சினை தீர்ந்ததென்றாலும்
மனதில் சலனங்கள்
தலைக்குப்பின் கைகோர்த்து
திண்ணையில் மல்லாந்திட
விளக்கிலிருந்து கசிந்து வழிந்த
மஞ்சள் ஒளி ஊசியாய்
என்னுள் ஊடுருவி
உள்மனதைக் குத்தியது

புத்தகம் முகம் மூடிட
நித்திரை என்னைத் தழுவ
முனைந்த நொடியில் காதில்
ஒலித்தது அந்த ரீங்காரம்



***

Monday, November 28, 2005

பட்டம்




சுட்டெரித்த வெயிலில்
பொருக்குத் தட்டிய
வேப்பமரப் பிசின்
இசைந்து வந்து
பட்டம் செய்திடப்
பசையாயிற்று

துப்புரவு முடித்து
மூலையில் உறங்கிய
துடைப்பத்தின் கூந்தலில்
இரண்டை
என்றோ படித்து மறந்த
தலைப்புச் செய்திக்
காகிதச் சதுரத்தில்
வில்லாக வளைத்து
நூல் நாணேற்றி
அம்பொன்று வைத்துக் கட்ட
உருப்பெற்றது பட்டம்
மாவட்டச் செய்திகள்
வாலாக நீண்டதும்
பறந்திடத் துடித்துப்
படபடத்தது பட்டம்

மூக்கணாங்கயிறிட்ட காளையாய்
நூற்கண்டில் அடக்கிக் கட்டி
மொட்டைமாடித் தரைச் சூட்டில்
புகைப்போக்கியருகே நின்று
கட்டுப்பாடுள்ள சுதந்திரத்துடன்
ஆகாயவெளியில் நடனமாட
நூல் விடுவித்து அனுமதித்ததும்
சந்தோஷமாகத் தலையாட்டிப்
பறந்தது பட்டம்

சற்றுமுன்புவரை அடங்காது
திரிந்த காற்று
நளினமாக எழுந்த
தேவதைகளைப் பார்த்ததும்
சீராக வீசி இன்னும்
உயர்த்துகிறது

இரட்டை வால்களுடன்
படமெடுத்த பாம்புகளாய்
சில பட்டங்கள் ஆங்காங்கே
ஆவேசமாய் தலையாட்டுகின்றன

இடிக்க வரும்
அவ்விடலைப் பட்டங்களிடமிருந்து
நாசூக்காய் விலகித்
தற்காத்துக் கொள்கிறது
என் பட்டம்

அந்தி சூழ பின்புலத்தில்
மறைகிறது செஞ்சூரியன்

தூரத்தில் வரிசையாக
ஒற்றையாக இரட்டையாக
கீதமிசைத்துக்கொண்டு
பறந்து செல்கின்றன
நூற்கண்டுகளில்லா
சுதந்திரப் பறவைகள்

பனிப்போர்வை கவியுமுன்
போதும் விளையாடியதென
நூலிழுத்துச் சுருட்டிக்
கைகளில் தாங்கிப் பார்க்கையில்
களைப்பற்ற கன்னங்களில்
பனியின் ஈரம் கண்ணீராய்

சிந்தனை மேலேற
படியிறங்கிப் போகையில்
விழியோரம் நிழலாக
வேப்ப மரக்கிளையில்
ஊசலாடியது அந்த
இரட்டைவால் பட்டம்



***

அக்கடிகாரம்



தேக்கின் பளபளப்பும் கம்பீரமும்
இன்னும் போகவில்லை
நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டு
ஓயாத பெண்டுல இயக்கத்துடனும்
சீராகச் சுற்றும் முட்களுடனும்
சுவரில் நிசப்தமாக வீற்றிருக்கிறது
அப்பெரிய கடிகாரம்
எத்தனை நிகழ்வுகள்!

சிறுவயதில் என்னுயரத்தையளக்க
அவ்வப்போது அதை நெருங்கி நின்று
கிழித்த கோடுகள் கால ரேகைகளாக
அப்படியே இருக்கின்றன

அது இருக்கும் பிரக்ஞையின்றி
மாச்சரியங்களுக்குள் உளைந்து
வளைய வந்து கொண்டிருந்தவர்களை
அமைதியாகக் கவனித்தது
இத்தனை காலமும்

முட்களையும் அவை காட்டிய
மணித்துளிகளையும் மட்டும்
உள்வாங்கிக்கொண்டு
அவசரமாகக் கடந்து செல்கையில்
ஒரு வினாடி நின்று - அதன்
பெண்டுலத்தில் தெரியும் என்
பிம்பத்தைப் பார்த்துவிட்டு
நகர்ந்திருக்கிறேன்

அசையும் பெண்டுலத்தில்
அசையாது தெரியும் பிம்பங்கள்

உறங்கும் உலகை இரவுகளிலும்
விழிப்புடன் கவனித்த
அக்கடிகாரம்
மன விகாரங்களையும்
உற்று நோக்குகிறதோவென்று
சந்தேகித்திருக்கிறேன்

நேற்றைய நள்ளிரவில்
வீணை நாதம் போன்று
அடிவயிற்றிலிருந்து
அது எழுப்பிய ஓசையை
இறுதியாக
நினைவிலிருந்து உறக்கத்தில் விழும்
அந்தக் கணங்களில் கேட்டேன்

காலையில் நான் விழிப்பது
அனிச்சையென நினைத்தாலும்
காற்றில் வந்து கண்ணிமைகளைத்
திறக்குமதன் மணிச்சத்தமும்
ஒரு காரணம் என்பதை
ஆழ்மனம் அறிந்தேயிருந்தது

களைத்த கரங்களைப் போல
ஆறரையில் முட்கள் துவள
பெண்டுலம் அமைதியாக நிற்கிறது
என் பிம்பத்தைப்
பிரதிபலித்துக் கொண்டு
கூடத்தில் கிடத்தியிருக்கும்
தாத்தாவின் சடலமும்
ஓரத்தில் தெரிகிறது

இரு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன
அக்கடிகாரம்
கவனியாததொரு கணத்தில்

***

Monday, October 31, 2005

யுத்தம்

யுத்தம்

அய்யோ போர் துவங்கிவிட்டது
நேற்றிரவு கதவருகில் நிற்கையில்
கண்கூசச் செய்யும் ஒளியுடன்
தெருவில் வெடித்தது முதல் குண்டு

இடிஇடித்தது போல் வெடிச்சத்தம்
எங்கெங்கும் வியாபித்திருக்கும் புகை
காற்றில் வெடிமருந்து நெடி
மூச்சை முட்டச் செய்கிறது

வெளியே தலைகாட்ட முடியாது
வெருண்டு நடுங்கி
கண்மூடிப் படுத்திருக்கிறேன்
ஒவ்வொரு வெடிச் சத்தத்திற்கும்
உடல் தூக்கிப் போடுகிறது

இதுநாள் வரை புன்னகை பூத்தவர்கள்
எதிரிகளாகி விட்டார்கள்
தீச்சுவாலைகளுக்கிடையில்
எகத்தாளமிட்டுச் சிரிக்கிறார்கள்

என் நண்பர்கள் யாவரையும்
காண முடியவில்லை
யாருக்கும் எதுவும் நேர்ந்திராது
என்றெண்ணி ஆறுதல் படுகிறேன்

அதோ அனுபவமிக்க என் ஆசான்
தெருவில் ஓரமாக உயிரைக் காக்க
ஓடுகிறார் வெடிச்சிதறல்களுக்கிடையில்
துரத்துகிறது கூட்டம்
கடவுளே அவரைக் காப்பாற்று

எத்தனை இழப்பென்று தெரியவில்லை
இதோ பின்னிரவில் போர் ஓய்ந்தாலும்
ஆங்காங்கே இன்னும் கேட்கிறது
வெடிச் சத்தம்

தெருவில் மயான அமைதி
சண்டையிட்டுக் களைத்து
உண்டுவிட்டு உறங்குகிறார்கள் போலும்
இன்னும் விழித்திருக்க
என்னால் இயலவில்லை
கண்ணயர்ந்து போகிறேன்
நாளை நன்னாளாக விடியட்டும்


*

"அம்மா இங்க பாரு
தீவாளி முடிஞ்சி ரெண்டு நாளாச்சி
டைகர் வெளிலயே வரமாட்டேங்குது
அடம் பிடிக்குது
என்னன்னு கேளு..."


***

image courtesy : bbc.co.uk

Wednesday, October 26, 2005

முகம்



உன்னுள்
இருள் சூழ்ந்திருப்பினும்
எப்போதும் மற்றவர்க்கு - உன்
வெளிச்சப் பக்கத்தை
மட்டும் காட்டு

கற்றுக் கொள் -
நிலவைப் பார்த்தாவது.

Thursday, October 20, 2005

சலனமற்ற பயணம்



அரிதான சலனங்களுடன்
ஆங்காங்கே அமர்ந்திருக்கும்
மனிதர்கள்

மேகத்தின் மயிர்கற்றை போல்
மெல்லியதாயெழும்
புகைக் கோடு

வாய் மூடியிருக்கும் கைகளையும்
ஆடை நுனிகளையுமூடுருவி
அரைக் குரலில் பரிமாறும்
ஆதங்கங்கள்

கொதித்து வழியும் பாத்திரமாய்
சிவந்து தளும்புகின்ற கண்கள்
வெடித்திடத் துடிக்குமென் நெஞ்சம்
மனதுக்குள்ளே ஊழித்
தாண்டவமாடும் உன்னத
தருணங்கள்

கேட்டதையும் பார்ப்பதையும்
நம்ப மறுத்து
பிம்பங்களில் கரைந்து போகத்
துடிக்குமெந்தன் உள்ளம்

காலத்தைப் பின் தள்ளி அவனை
எழுப்பிட முடியாதாவென
ஏங்குமென் இதயம்

தரையில் அசைவின்றிக்
கண் மூடியவன் படுத்திருக்க
சுற்றிலும் புரியாத
அரவங்கள்

காற்றிலிருந்து உதித்ததைப்
போலவே அதில் திரும்பக்
கலந்து போகக் காத்திருக்கிறான்
என்னவன்

தூரத்தில் இருந்து நோக்கி
மகிழ்வுடன் தலையாட்டிக்
கொண்டிருக்கையில்
சட்டெனப் பறந்தோடியது
நூலறுந்த பட்டம்

ஆர்வத்துடன் அனைவரும்
விளையாடிக் கொண்டிருந்த
ஆட்டத்தை
முட்புதரில் தொலைந்து போய்
முடித்து வைத்தது அதுவரை
துள்ளிய பந்து

இயக்கங்கள் நின்ற அத்தருணங்கள்
இதுவரை என்னில்
ஏமாற்றத்தைத் தான்
தந்திருக்கின்றன - ஆனால்
இவனியக்கம் நின்ற நொடியிலிருந்து
என் இயக்கத்தை வெறுத்து
நின்று போகத் துடிக்கிறேன்

மனவுலகிலிருந்து என்னைப்
புறவுலகிற்கு இழுக்கின்றன
காலம் புண்ணாற்றுமெனும்
ஆறுதல் வார்த்தைகள்

நானிருக்கிறேன் என்றவன்
பேசாது கிடக்க
நாங்களிருக்கிறோம் எனச்
சுற்றிப் பரவும் வாக்குறுதிகள்

வெவ்வெறு திசைகளிலிருந்து
பயணத்தைத் தொடங்கிய
நாங்கள்
கை கோர்த்த புள்ளி
பார்வையிலிருந்து மறையுமுன்
சேர்ந்து வரையத் தொடங்கிய
கோலம் முற்றுப் பெறவில்லை
தன் கையை விலக்கிக் கொண்டு
நின்றுவிட்டான்

தாயான ஆயாசம் நீங்குமுன்னே
குழந்தைக்குத் தந்தையாகவும்
இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்

நாளைய கேள்விகளும்
நிச்சயமற்ற எதிர்காலமும்
நடுக்கத்தைத் தருகின்றன

அழியாத நினைவுகளையும்
அன்பான நிகழ்வுகளையும்
ஆரத் தழுவித் தந்த அன்பினையும்
அதில் பூத்த இப்பூக்குட்டி
மழலையையும் நினைத்துக் கொண்டு

பழுதாகி நின்ற என்னுயிரை
விட்டுவிட்டுச்
செல்லுமிடம் தெரியாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வாழ்க்கை ஊர்திக்குள்
அமர்ந்து தொடருகிறேன்

சலனமற்ற இப்பயணத்தை.

***

Tuesday, April 26, 2005

ஒற்றை இறகு

Image hosted by TinyPic.com

ஆலமர நிழலின் சில்லிப்பில்
ஆனந்தமாய் கண்மூடிக்
கண்டதொரு கனவு

*
படபடத்துப் பறந்த காலங்கள்
மரக்குடில்களில்
கூட்டங் கூட்டமாய்
இரவிலும் கத்திக் கும்மாளமிட்ட
நாள்கள்

அதீத உணவு கிட்டிய மமதையில்
அரையரையாய்
கடித்து வைத்த பழங்கள்
மரப்பட்டைகளில் கூர்தீட்டிய
செவ்வலகின்
பளபளப்புப் பச்சை
முகத்தில் மின்னிய
கருமுத்து விழிகள்
*

விரல் சொடுக்கின் சத்தத்தில்
திடுக்கிட்டு விழித்ததும்
முகத்தில் அறையும்
நிஜம்

பிடிக்கப்பட்டு இறகொடிக்கப்பட்டு
இச்சிறு சிறையில்
படபடத்துப் பறக்கத் தவித்து
சிறுகுடுவையில் தண்ணீரும்
பிச்சையிட்ட எச்சில்பழமும்
தின்னும் பரிதாபம்
*

தற்காலிக விடுதலையில்
வெளிவந்து
முன் அடுக்கிய அட்டைக் குவியலில்
ஒன்றைக் கொத்திக்
கொடுத்ததும் கிடைக்கும்
தானியக் கூலி
*

மறுபடி கூடு திரும்பிப்
பெருமூச்சுடன்
சோகை விழிகளை மூடி யோசிக்கையில்
காலடியில் நிரடுகிறது
அதன்...

ஒற்றை இறகு!

***

ஒரு வழியாய்



மடிந்த ஈசல்களின் சிறகுக் குவியல்கள்
தெருநீரில் கவிழ்ந்த காகிதக் கப்பல்
குதூகலித்து நனையும் பையன்கள்
சந்தேகத்துடன் அலையும் ஒற்றைத் தட்டான்
கோபுரச் சிற்பஙகளிடையில் ஒடுங்கிய புறாக்கள்

லேசாய் சேலை தூக்கி
நீர் சிதறாது நடக்கும் பெண்கள்
மழையின் விசைக்கு மயங்கி
நாணத்துடன் தலைகவிழும் மலர்கள்


மரக்கிளையில் கிழிந்திருக்கும் பட்டம்
உடலைச் சிலிர்த்துதறும் நாய்
மினுக்கிக் கொண்டிருக்கும் தெருவிளக்கு
பறக்க யோசிக்கும் மின்கம்பிக் காகம்

தரைச்சக்கரமாய்ச் சுருண்ட ரயில்பூச்சி
கூரையிலிருந்து சோகையாய் நீர்க்கோடுகள்
வாசலில் மண்ணொட்டிய காலணிகள்
காற்றில் மல்லாந்திருக்கும் குடை

வீட்டினுள் சிக்காது பறக்கும் வெளவால்
கொல்லைப்புற உரலில் தேங்கிய நீர்
கொடியில் தொங்கும் ஈர ஆடைகள்
உள்ளங்கால்களில் புல்தரைச் சில்லிப்பு
நரைக்கத் தொடங்கிய கருமேகங்கள்

ஒரு வழியாய் மழை விட்டிருக்கிறது.




***

Thursday, April 21, 2005

'கீச்..கீச்..'

Image hosted by TinyPic.com

'டப்'-பென்ற சத்தத்தில் நித்திரை கலைந்தது
உப்புத்தூள் சிதறிய சமையலறைத் தரையில்
இரத்தத் துளிகளுடன் அசைந்து நின்றது வால்
மூடிய பத்தாயத்தினுள் பளபளக்கும் கண்களில்
மரணபயத்துடன் உடல் குறுக்கிய எலிகள்
கம்பியிலின்னும் ஆடுகிறது துண்டு வடை

இடைவெளியில் துருத்திய இளமூக்கு நுனிகளை
மெல்லத் தொடச் சட்டென உள்ளோடி மறைந்தன
சிறு எலிகளின் 'கீச் கீச்' இடைவிடாது கேட்க
தீர்ந்தது பிரச்சினை என்று மகிழ்ந்தது மனம்

பிடிதூக்கிப் பார்க்கவுள்ளே அலைபாய்ந்தன எலிகள்
சடுதியில் குரங்கானது மனம்-கவிழ்த்ததை உலுக்கியதில்
உருண்டு விழும் சத்தம் 'கீச் கீச்' என்ற கூக்குரல்கள்
பிடித்துச் சுற்றியது கைஎதிர் காற்றில் முட்டியது மூச்சு

வாய்க்காலில் முடியும் கொல்லைப்புற ஒற்றையடிப் பாதை
வழியெங்கும் அபயக்குரல் ஆவலுடன் உச்சிமரக் குரங்குகள்

ஆடையை முழங்கால் மேலேற்றிக் கட்டின கைகள்
நீரைப் பார்த்ததும் எலிகள் எழுப்பின 'கீச் கீச்' சத்தம்

கவனமாய் இறங்கும் பாதம் நீர்பட்டதும் சிலிர்க்குமயிர்க்கால்கள்
கலங்கி நீரோடத் தோப்பில் தென்னங்கீற்றின் சரசரப்புச் சத்தம்
எதிர்கரையில் நீந்தி மறையும் வெளிர்மஞ்சள் நீள்பாம்பு
ஒரு கணம் ஓடிச்சிதறிப் பின் காலடியில் கூடுமீன் கூட்டம்

ஓரடி நீரில் குனிந்தமிழ்த்த மெதுவாய் மூழ்கியது பத்தாயம்
அடிப்பரப்பை நீர் தொட்டதும் எழுந்தது ஆரவாரம்
பரபரப்புச் சத்தங்கள் தேய்ந்து முழுதும் மூழ்கியதும் அமைதி

கையைச் சுற்றியெழும்பிச் சிதறும் காற்றுக் குமிழிகள்
இறுகிய கைப்பிடியில் துடிக்கும் உயிர்களின் அதிர்வுகள்
லேசாய் மூச்சு முட்டச் சட்டெனத் தூக்கிப் பார்த்தேன்.

வழிந்தோடும் நீரில் நனைந்து வாய்திறந்து வாழும் ஆசையில்
அவசர மூச்சிழுத்து நடுங்கி இறைஞ்சும் அவற்றின் விழிகள்

அரிசிப் பானைக் குடித்தனமும் நடுநிசியில் பாத்திரமுருட்டியதும் பத்திரப்படுத்திய பட்சணங்களைப் பாதி தின்று வைத்ததும்
திறந்திருந்த பால் குடுவையில் வாய் வைத்தோடிப் போனதும்
எங்கும் புழுக்கையிட்டு அலங்கோலப்படுத்தியதும் நினைவிலாட

சிலவினாடிகள் தயக்கத்திற்குப்பின் சட்டென்று இறங்கியது கை
கண்களும் மனமும் அழுந்த மூட ஆட்டங்களடங்கக் காத்தது கை

எங்கோ மட்டை விழும் சத்தம் எருதொன்று அம்மாவென அலற
கொலைச் செயலைக் கரைந்தறிவிக்கும் சிறகு துடிக்கும் காகம்

வயிறூதிக் கண்திறந்து தூங்கும் எலிகளின் பார்வையைத் தவிர்த்துக் கரையேறிப் புதரில் உதறி ஈரக் காலடிகளுடன் இல்லமடைந்து
அரை வடை மாட்டிப் பத்தாயத்தை மறுபடியும் இருத்திப் போகத் திரும்புகையில் கேட்கிறது மெலிதாய் அரையிருட்டில் 'கீச் கீச்'.

விளக்கு வெளிச்சத்தில் கண்தேட மூலையில்
கண்மூடி மெதுவாய் தவழ்கின்றன
ரோஜா நிற எலிக்குட்டிகள்
கண்மணிகள் கருப்புப் பொட்டாய்
திரும்புகையில் பார்த்துக்கொண்டேன்
கிண்ணத்திலூற்றிய பாலையும்
ரோஜா நிற எலிக்குட்டிகளையும்.

'டப்'-பென்ற சத்தத்தில் நித்திரை கலைந்தது
உப்புத்தூள் சிதறிய சமையலறைத் தரையில்
மூடியிருக்கும் பத்தாயத்தில் அசைவு
மெதுவாய்த் திறந்துவிட விடுதலையை நம்பாமல்
அரைவினாடி தாமதித்து ஆர்ப்பரித்து ஓடின

வடையகற்றிக் கொக்கி விடுத்து வெற்றுப் பத்தாயத்தைச் சேந்தியிலெறிந்தேன் திரும்புகையில் பார்த்துக்கொண்டேன் கிண்ணத்திலூற்றிய பாலையும்
ரோஜா நிறக் குட்டிகளையும்.

'கீச்..கீச்..'

***

நன்றி : மரத்தடி.காம்

Wednesday, April 20, 2005

*** கிணறு ***

Image hosted by TinyPic.com

வேம்புச் சுள்ளிகளும் இலைகளும்
ஊறிக் கசந்த கிணற்று நீர்
பாதாளக் கரண்டியிட்டு
முத்தெடுத்த பாத்திரங்கள்

ஈரக்கயிற்றின் மறுமுனையில்
தளும்பிச் சிதறிய வாளி
தாய்க் காவலை மீறி
தவறி விழுந்த காக்கைக்குஞ்சு

இடுப்பளவு இறங்கி நின்று
தூர்வாரிய கோடைக்காலங்கள்
நார்பிரிந்து கை சிவக்க
இறைத்துக் குளித்த நாள்கள்

கைநழுவி நீள்பாம்பாய்
கிணற்றுப் புற்றில் விழுந்த கயிறு
ஆரங்கள் தென்படாது
விரைந்து சுற்றிய இராட்டினம்
எப்போதும் ஈரமாயிருந்த
கிணற்றுக் கைப்பிடிச் சுவர்

எங்குபோயின இவையெல்லாம்?
எப்படித் தொலைந்தன சடுதியில்?

எட்டிப் பார்த்தால் சிலந்திவலை
காணாமல் போன பிம்பங்கள்
இருள் நிரம்பித் தளும்பும் கிணற்றில்
எடுக்கத் தவறிய மின்னும் காசுகள்
புலம்பெயர்ந்தன பறவைக் கூட்டம்
செவி அடைக்கும் நிசப்தம்
வறண்ட பூமியின் கடினம்
வெடித்தத் தோலுடன் பூமித்தாய்
தொலைவில் தெரிகிறது கானல் நீர்

வீட்டின் கதவுகளிலும் ஜன்னல்களிலும்
வேம்பு சிரிக்கிறது கசப்பில்லாமல்!

***

நன்றி : மரத்தடி.காம்

Tuesday, April 19, 2005

*** துயில் ***

Image hosted by TinyPic.com

உலர்ந்துதிர்ந்த இலைகள்
அசைந்தோடி விரைந்து
சரசரக்கும் சத்தம்.

ஊசியிலை மரவேலியை
ஊடுருவித் தாண்டும்
சில்காற்றின் சங்கீதம்.

கைகளைக் குறுக்காய்
கட்டியெனையணைத்தும்
விலாவைக் குத்தும் குளிர்.

பழகிய நாய்கள்
வாலாட்டிச் செல்ல
விரோதப் பார்வையுடன்
ஆந்தை
கரைந்து விரைகிறது
இரவுக் காகம்.

திறந்திருக்கும்
கம்பிக் கதவுகளில்
தொங்கும் பனித்துளிகள்.

மண்மேடுகளும் சின்னங்களும்
சலசலக்காதிருக்கின்றன
தேவதைக்காகக் காத்திருக்கும்
காவலர்களைப் போல.

தாவி முன் ஓடும்
தந்தை மனம்
தள்ளும் முதுமையை
வெறுக்கிறது
ஆடை உராயத் தடுமாறி
நடந்து மண்டியிட
நின்றாடுகிறது ஊதாப்பூ.
மெலிதாய் வருட
தலையாட்டி காற்றிலாடுகிறது
இச்சிறு ஊதாப்பூ.

அன்பின் வருடல்கள்
தினமும் கொடுத்து நான்
வளர்த்தது இந்தச் சிறுசெடி

பசுமை கேசம்
நிலத்தில் துருத்திப்
பிறந்த கணங்கள் தந்த
பிரசவ சந்தோஷம்

வெண்நீல மொட்டொன்று
உதித்தபோது
சட்டென்று சிந்தியது
கண்ணீர்த் துளிகள்

தனித்திருக்கும்
இவ்வொற்றை ஊதாப்பூ
மலர்ந்து நிற்கிறது
என் கண்முன்னே
நிலவினை மறைத்த
கார்மேகங்கள் நகர்கையில்
கண்சிமிட்டும் வெளிச்சத்தில்

ஈர நிலத்தில்
இப்போது பூத்தாற்போல்
தெரிகிறது அசைந்தாடும்
ஊதாப்பூ

சிறுவிதை
செடியானதைப் போலச்
சிறிய இம்மேடும்
பெரிதான பிரமை
மீளாத் துயிலை
நம்ப மறுக்கும்
மனம்

மண்போர்வையை
மெல்லியதாய் வருடுமென்
நடுங்கும் கைகள்
ஊற்றுப் பெருக்கெடுக்கும்
பாசம் ஈரமண்ணைத்
துளைத்திறங்கும்.

செல்ல மகளின்
முகத்தைத் தொடும்
உயிர் துடிக்கும் என்
ஸ்பரிசம்

தன் மெய்சிலிர்ப்பைக்
காட்டுகிறாள் லேசாய்த்
தலையாட்டும் இச்சிறு
ஊதாப்பூவில்...

***

நன்றி : மரத்தடி.காம்

*** என்னுடன் வருவாயா? ***

நான் பூமியில் ஜனித்த நேரம்
நீயும் இருந்ததைப்
பார்க்க முடியவில்லை

ஒருநாள் இருநாளல்ல;
சில மாதங்களுக்கு.

தவழ்ந்த நாளில் பார்த்தாலும்
உன்னை உணரவில்லை நான்

எழுந்து நின்று பார்க்கையில்
சற்று பயமாக இருந்தது
பார்க்காதே என்று
அம்மா அதட்டினாள்!

உன்னை கவனிப்பதை
விட்டுவிட்டேன்
யாரும் உன்னை
கவனிக்கவில்லை-இருந்தாலும்
நீ வளர்ந்தாய் - என்னுடன்

சாலையில் தனித்து நடக்கையில்
என் காலடியில் விழுந்து கிடந்து
என்னை விட்டுச் செல்ல மறுப்பாய்.

குழந்தையாய் ஒட்டிக் கொள்வாய்
சிலசமயம் கோபமுற்று
விஸ்வரூபம் எடுப்பாய்
நான் கண்டுகொள்ளவில்லை

நாம் காதலர்களல்ல
சகோதரர்களல்ல
எவ்வுறவும்
நமக்குள் இல்லை

நானே நீயா என்ற
கேள்வி எழுந்தபோது
'சே.. நீ நல்லவன்' என்றார்கள்
என்னை.

ஆனாலும் சில சந்தர்ப்பங்களில்
நான் செய்யும் செயல்களுக்கு
உன் முகத்தைக்
கட்டிக் கொண்டேன்

வருடங்கள் உருண்டோடிவிட்டன
என்னில் பல மாற்றங்கள் - ஆனாலும்
நீ அப்படியேதான்
இருக்கிறாய்

நடக்கத் தடுமாறிக் கோல்
ஊன்றியபோது என்னில்
பரிதாபப்பட்டோ என்னவோ
நீயும் கோலூன்றிக் கொண்டாய்
எனக்குத் தெரியும்
உனக்கது தேவையில்லை
என்று.

நீ விழுந்துவிட மாட்டாய்.

உனக்கு யாரும் தேவையில்லை
என்னைத் தவிர.
அப்படி என்ன செய்துவிட்டேன்
உனக்கு?
ஏன் என்னைப்
பிடித்துக் கொண்டிருக்கிறாய்?
கேட்கமுடியவில்லை உன்னிடம்
ஏனென்றால்
நீ பதில் சொல்லமாட்டாய்.

இதோ படுக்கையில் நான்
இறுதி நாள்களை எண்ணிக்கொண்டு.
என்னைக் கொண்டு செல்கிறார்கள்
என்னுடன் வருகிறாய்
என்று அறிவேன்.
உன்னைப் பார்க்கத்தான் முடியவில்லை
ஜனித்த நாள்களைப் போல.

இவ்வுலகைவிட்டுச் செல்கிறேன்
சொர்க்கத்திற்கா நரகத்திற்கா?
எங்கேயென்று தெரியவில்லை.
எங்கு நான் சென்றாலும்,
அங்கும் என்னுடன் வருவாயா -

என் நிழலே?

Image hosted by TinyPic.com

***

நன்றி : மரத்தடி.காம்

*** ஸ்டிக்கர் பொட்டுகள்! ***

'பாட்டீ! காசு குடு!'
'எதுக்கடி காசு?'

'பொட்டு வாங்கணும்..
ஸ்டிக்கர் பொட்டு'

'இந்தா காசு..
வெரசா வந்துடு'

காற்றில் விரைந்து
கடைக்குச் சென்று
காசு கொடுத்ததும்
கையில் பொட்டுகள்

ஒன்றா இரண்டா!
ஒரே தாளில்
வரிசைக்கு நாலு!
மூணு வரிசை!

ஸ்டிக்கர் பொட்டுக்கள்!
வட்டப் பொட்டுக்கள்!

ஒன்றைப் பிய்த்து
ஒட்டிக்கொண்டு,
ஒய்யாரச் சிரிப்புடன்
திரும்ப வந்து,

'பாட்டீ' என்றழைத்தேன்!
'கொல்லையில்' என்றாள் அம்மா!

ஈரம் வழுக்காது
ஓடிச் சென்று
தொழுவம் கடந்ததும்
குட்டிச் சுவருக்கப்பால் பாட்டி..

குனிந்து நிமிர்ந்து
வறட்டி தட்டுகிறாள்!
வரிசைக்கு நாலு!
மூணு வரிசை!

ஸ்டிக்கர் பொட்டுகள்!
வட்டப் பொட்டுகள்!!

Image hosted by TinyPic.com

***

நன்றி : மரத்தடி.காம்

*** சங்கமம் ***

Image hosted by TinyPic.com

நதிகளின் சங்கமத்தில்
நீரது நிறமிழக்கும்
நம்மிந்தச் சங்கமத்தில்,
நம்மை இழந்தோம் - கரைந்தோம்.

நானும் நீயும் ஒன்றாய்
காதுகளடைக்க இப்பேரமைதியில்
உயிர்களின் பூகம்ப அதிர்வை
ஆவி முழுதும் உணர்ந்தோம்.

இச்சையா கிடக்கையா - இல்லை
இரண்டுமே ஒன்றாவென - நாம்
நினைக்கவே நேரமில்லை - நம்
நினைவுகளும் வசமில்லை.

முடிவற்ற இயக்கம் கருதி
உள்வெளி அலைபாயும் காற்று
ஊர் தூங்கும் நடுநிசியில்
உறங்காதிருக்கும் உள்ளங்கள்.

ஆகாயப் பொத்தல்களாய்ச்
சிதறிச் சிரிக்கும் நட்சத்திரங்கள்
கண்மூடிக் கிடந்தாலும் - அவற்றைக்
காண்கிறேன் உன்னுள்ளே

வியர்வை முத்து வருடி
விரல்களால் தலை கோதி
வெம்மூச்சினில் குளிர் விரட்டி
வீழ்த்தினோம் இக்கரி இரவை.

நடுங்கி நெகிழும் அடிவயிறு
நாசி துடிக்க ஸ்வாஸம்
நரம்பு தெறிக்கும் அழுத்தம்
வெடிக்க முயலும் இதயம்.

சில்லிட்டச் செவி மடல்கள்
கனிந்துச் சிவந்த இதழ்கள்
பனித்து உலரும் விழிகள்
பூமயிர் கன்னத்தின் மென்மை.

ஆவிசேர அணைத்து இங்கே
அகிலமும் மறந்திருப்போம் - நம்
உயிர்களின் சங்கமத்தில் - ஒரு
உயிரின் ஜனனம் இன்று.

***

நன்றி : மரத்தடி.காம்

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...