Thursday, October 20, 2005

சலனமற்ற பயணம்



அரிதான சலனங்களுடன்
ஆங்காங்கே அமர்ந்திருக்கும்
மனிதர்கள்

மேகத்தின் மயிர்கற்றை போல்
மெல்லியதாயெழும்
புகைக் கோடு

வாய் மூடியிருக்கும் கைகளையும்
ஆடை நுனிகளையுமூடுருவி
அரைக் குரலில் பரிமாறும்
ஆதங்கங்கள்

கொதித்து வழியும் பாத்திரமாய்
சிவந்து தளும்புகின்ற கண்கள்
வெடித்திடத் துடிக்குமென் நெஞ்சம்
மனதுக்குள்ளே ஊழித்
தாண்டவமாடும் உன்னத
தருணங்கள்

கேட்டதையும் பார்ப்பதையும்
நம்ப மறுத்து
பிம்பங்களில் கரைந்து போகத்
துடிக்குமெந்தன் உள்ளம்

காலத்தைப் பின் தள்ளி அவனை
எழுப்பிட முடியாதாவென
ஏங்குமென் இதயம்

தரையில் அசைவின்றிக்
கண் மூடியவன் படுத்திருக்க
சுற்றிலும் புரியாத
அரவங்கள்

காற்றிலிருந்து உதித்ததைப்
போலவே அதில் திரும்பக்
கலந்து போகக் காத்திருக்கிறான்
என்னவன்

தூரத்தில் இருந்து நோக்கி
மகிழ்வுடன் தலையாட்டிக்
கொண்டிருக்கையில்
சட்டெனப் பறந்தோடியது
நூலறுந்த பட்டம்

ஆர்வத்துடன் அனைவரும்
விளையாடிக் கொண்டிருந்த
ஆட்டத்தை
முட்புதரில் தொலைந்து போய்
முடித்து வைத்தது அதுவரை
துள்ளிய பந்து

இயக்கங்கள் நின்ற அத்தருணங்கள்
இதுவரை என்னில்
ஏமாற்றத்தைத் தான்
தந்திருக்கின்றன - ஆனால்
இவனியக்கம் நின்ற நொடியிலிருந்து
என் இயக்கத்தை வெறுத்து
நின்று போகத் துடிக்கிறேன்

மனவுலகிலிருந்து என்னைப்
புறவுலகிற்கு இழுக்கின்றன
காலம் புண்ணாற்றுமெனும்
ஆறுதல் வார்த்தைகள்

நானிருக்கிறேன் என்றவன்
பேசாது கிடக்க
நாங்களிருக்கிறோம் எனச்
சுற்றிப் பரவும் வாக்குறுதிகள்

வெவ்வெறு திசைகளிலிருந்து
பயணத்தைத் தொடங்கிய
நாங்கள்
கை கோர்த்த புள்ளி
பார்வையிலிருந்து மறையுமுன்
சேர்ந்து வரையத் தொடங்கிய
கோலம் முற்றுப் பெறவில்லை
தன் கையை விலக்கிக் கொண்டு
நின்றுவிட்டான்

தாயான ஆயாசம் நீங்குமுன்னே
குழந்தைக்குத் தந்தையாகவும்
இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்

நாளைய கேள்விகளும்
நிச்சயமற்ற எதிர்காலமும்
நடுக்கத்தைத் தருகின்றன

அழியாத நினைவுகளையும்
அன்பான நிகழ்வுகளையும்
ஆரத் தழுவித் தந்த அன்பினையும்
அதில் பூத்த இப்பூக்குட்டி
மழலையையும் நினைத்துக் கொண்டு

பழுதாகி நின்ற என்னுயிரை
விட்டுவிட்டுச்
செல்லுமிடம் தெரியாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வாழ்க்கை ஊர்திக்குள்
அமர்ந்து தொடருகிறேன்

சலனமற்ற இப்பயணத்தை.

***

1 comment:

கானகம் said...

Sundar..

Really this is the most disturbed poem from you since it talks about my dearmost friend.. No friends in the world may had a good time like we did. Though we did not meet each other for years because we were busy in proving ourselves and to survive it never reduced our friendship's thickness. we used to meet like as if we met yesterday. He is lovely and lively friend I ever had..I never felt this much pain for any reason in my life except my beloved Sridhar's demise. God might have thought he lived to enough..As i mentioned earlier you mourned for him once again by this poem and Sridhar might have departed peacefully since he knew nothing will happen to his family since ever loving his brother is with his family..May God reast him in Peace.. Jeyakumar

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...