Monday, November 28, 2005

பட்டம்




சுட்டெரித்த வெயிலில்
பொருக்குத் தட்டிய
வேப்பமரப் பிசின்
இசைந்து வந்து
பட்டம் செய்திடப்
பசையாயிற்று

துப்புரவு முடித்து
மூலையில் உறங்கிய
துடைப்பத்தின் கூந்தலில்
இரண்டை
என்றோ படித்து மறந்த
தலைப்புச் செய்திக்
காகிதச் சதுரத்தில்
வில்லாக வளைத்து
நூல் நாணேற்றி
அம்பொன்று வைத்துக் கட்ட
உருப்பெற்றது பட்டம்
மாவட்டச் செய்திகள்
வாலாக நீண்டதும்
பறந்திடத் துடித்துப்
படபடத்தது பட்டம்

மூக்கணாங்கயிறிட்ட காளையாய்
நூற்கண்டில் அடக்கிக் கட்டி
மொட்டைமாடித் தரைச் சூட்டில்
புகைப்போக்கியருகே நின்று
கட்டுப்பாடுள்ள சுதந்திரத்துடன்
ஆகாயவெளியில் நடனமாட
நூல் விடுவித்து அனுமதித்ததும்
சந்தோஷமாகத் தலையாட்டிப்
பறந்தது பட்டம்

சற்றுமுன்புவரை அடங்காது
திரிந்த காற்று
நளினமாக எழுந்த
தேவதைகளைப் பார்த்ததும்
சீராக வீசி இன்னும்
உயர்த்துகிறது

இரட்டை வால்களுடன்
படமெடுத்த பாம்புகளாய்
சில பட்டங்கள் ஆங்காங்கே
ஆவேசமாய் தலையாட்டுகின்றன

இடிக்க வரும்
அவ்விடலைப் பட்டங்களிடமிருந்து
நாசூக்காய் விலகித்
தற்காத்துக் கொள்கிறது
என் பட்டம்

அந்தி சூழ பின்புலத்தில்
மறைகிறது செஞ்சூரியன்

தூரத்தில் வரிசையாக
ஒற்றையாக இரட்டையாக
கீதமிசைத்துக்கொண்டு
பறந்து செல்கின்றன
நூற்கண்டுகளில்லா
சுதந்திரப் பறவைகள்

பனிப்போர்வை கவியுமுன்
போதும் விளையாடியதென
நூலிழுத்துச் சுருட்டிக்
கைகளில் தாங்கிப் பார்க்கையில்
களைப்பற்ற கன்னங்களில்
பனியின் ஈரம் கண்ணீராய்

சிந்தனை மேலேற
படியிறங்கிப் போகையில்
விழியோரம் நிழலாக
வேப்ப மரக்கிளையில்
ஊசலாடியது அந்த
இரட்டைவால் பட்டம்



***

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...