நீயும் இருந்ததைப்
பார்க்க முடியவில்லை
ஒருநாள் இருநாளல்ல;
சில மாதங்களுக்கு.
தவழ்ந்த நாளில் பார்த்தாலும்
உன்னை உணரவில்லை நான்
எழுந்து நின்று பார்க்கையில்
சற்று பயமாக இருந்தது
பார்க்காதே என்று
அம்மா அதட்டினாள்!
உன்னை கவனிப்பதை
விட்டுவிட்டேன்
யாரும் உன்னை
கவனிக்கவில்லை-இருந்தாலும்
நீ வளர்ந்தாய் - என்னுடன்
சாலையில் தனித்து நடக்கையில்
என் காலடியில் விழுந்து கிடந்து
என்னை விட்டுச் செல்ல மறுப்பாய்.
குழந்தையாய் ஒட்டிக் கொள்வாய்
சிலசமயம் கோபமுற்று
விஸ்வரூபம் எடுப்பாய்
நான் கண்டுகொள்ளவில்லை
நாம் காதலர்களல்ல
சகோதரர்களல்ல
எவ்வுறவும்
நமக்குள் இல்லை
நானே நீயா என்ற
கேள்வி எழுந்தபோது
'சே.. நீ நல்லவன்' என்றார்கள்
என்னை.
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில்
நான் செய்யும் செயல்களுக்கு
உன் முகத்தைக்
கட்டிக் கொண்டேன்
வருடங்கள் உருண்டோடிவிட்டன
என்னில் பல மாற்றங்கள் - ஆனாலும்
நீ அப்படியேதான்
இருக்கிறாய்
நடக்கத் தடுமாறிக் கோல்
ஊன்றியபோது என்னில்
பரிதாபப்பட்டோ என்னவோ
நீயும் கோலூன்றிக் கொண்டாய்
எனக்குத் தெரியும்
உனக்கது தேவையில்லை
என்று.
நீ விழுந்துவிட மாட்டாய்.
உனக்கு யாரும் தேவையில்லை
என்னைத் தவிர.
அப்படி என்ன செய்துவிட்டேன்
உனக்கு?
ஏன் என்னைப்
பிடித்துக் கொண்டிருக்கிறாய்?
கேட்கமுடியவில்லை உன்னிடம்
ஏனென்றால்
நீ பதில் சொல்லமாட்டாய்.
இதோ படுக்கையில் நான்
இறுதி நாள்களை எண்ணிக்கொண்டு.
என்னைக் கொண்டு செல்கிறார்கள்
என்னுடன் வருகிறாய்
என்று அறிவேன்.
உன்னைப் பார்க்கத்தான் முடியவில்லை
ஜனித்த நாள்களைப் போல.
இவ்வுலகைவிட்டுச் செல்கிறேன்
சொர்க்கத்திற்கா நரகத்திற்கா?
எங்கேயென்று தெரியவில்லை.
எங்கு நான் சென்றாலும்,
அங்கும் என்னுடன் வருவாயா -
என் நிழலே?
***
நன்றி : மரத்தடி.காம்
No comments:
Post a Comment