உலர்ந்துதிர்ந்த இலைகள்
அசைந்தோடி விரைந்து
சரசரக்கும் சத்தம்.
ஊசியிலை மரவேலியை
ஊடுருவித் தாண்டும்
சில்காற்றின் சங்கீதம்.
கைகளைக் குறுக்காய்
கட்டியெனையணைத்தும்
விலாவைக் குத்தும் குளிர்.
பழகிய நாய்கள்
வாலாட்டிச் செல்ல
விரோதப் பார்வையுடன்
ஆந்தை
கரைந்து விரைகிறது
இரவுக் காகம்.
திறந்திருக்கும்
கம்பிக் கதவுகளில்
தொங்கும் பனித்துளிகள்.
மண்மேடுகளும் சின்னங்களும்
சலசலக்காதிருக்கின்றன
தேவதைக்காகக் காத்திருக்கும்
காவலர்களைப் போல.
தாவி முன் ஓடும்
தந்தை மனம்
தள்ளும் முதுமையை
வெறுக்கிறது
ஆடை உராயத் தடுமாறி
நடந்து மண்டியிட
நின்றாடுகிறது ஊதாப்பூ.
மெலிதாய் வருட
தலையாட்டி காற்றிலாடுகிறது
இச்சிறு ஊதாப்பூ.
அன்பின் வருடல்கள்
தினமும் கொடுத்து நான்
வளர்த்தது இந்தச் சிறுசெடி
பசுமை கேசம்
நிலத்தில் துருத்திப்
பிறந்த கணங்கள் தந்த
பிரசவ சந்தோஷம்
வெண்நீல மொட்டொன்று
உதித்தபோது
சட்டென்று சிந்தியது
கண்ணீர்த் துளிகள்
தனித்திருக்கும்
இவ்வொற்றை ஊதாப்பூ
மலர்ந்து நிற்கிறது
என் கண்முன்னே
நிலவினை மறைத்த
கார்மேகங்கள் நகர்கையில்
கண்சிமிட்டும் வெளிச்சத்தில்
ஈர நிலத்தில்
இப்போது பூத்தாற்போல்
தெரிகிறது அசைந்தாடும்
ஊதாப்பூ
சிறுவிதை
செடியானதைப் போலச்
சிறிய இம்மேடும்
பெரிதான பிரமை
மீளாத் துயிலை
நம்ப மறுக்கும்
மனம்
மண்போர்வையை
மெல்லியதாய் வருடுமென்
நடுங்கும் கைகள்
ஊற்றுப் பெருக்கெடுக்கும்
பாசம் ஈரமண்ணைத்
துளைத்திறங்கும்.
செல்ல மகளின்
முகத்தைத் தொடும்
உயிர் துடிக்கும் என்
ஸ்பரிசம்
தன் மெய்சிலிர்ப்பைக்
காட்டுகிறாள் லேசாய்த்
தலையாட்டும் இச்சிறு
ஊதாப்பூவில்...
***
நன்றி : மரத்தடி.காம்
No comments:
Post a Comment