
களத்துமேட்டில் அறுவடை முடிய
குவித்த நெல் அம்பாரத்தின் விளிம்புகளில்
தங்கமாய் மின்னி விழுகிறான் கதிரவன்
ஒற்றை ஆலமரத்தடியின் கயிற்றுக் கட்டில்
முதுகுக்கு இதம்தர
லேசாய் வீசுகின்ற தென்றல்
கண்ணயர்த்துகிறது
காரிருள் போர்வை போர்த்த
கண்ணாடிச் சில்லுகளாய்
மின்னுகின்றன நட்சத்திரங்கள்
விரையும் மேகங்களிடையே
கண்சிமிட்டி எதிர்த்திசையில்
விரைகிறது நிலா
இரவுப் பறவைகளும் வௌவால்களும்
நிழல்களாய் கடக்க
ஊரடங்கி ஒலியடங்கி
இறுதியில் ஒளியடங்க
உடல்வலியடங்க இனிதாய் தூக்கம்
***
அசுரத்தனமாக விஞ்ஞான வேட்டையாடி
இயற்கையை வெல்லத்துடிக்கிறான் மனிதன்
இப்போதெல்லாம் இரவுகள் கண்கூசுகின்றன
மஞ்சள், வெள்ளை பல வண்ணங்களில்
ஊரெங்கும் ஒளிவெள்ளம் நிரம்பித் தளும்ப
களத்துமேடு வெறிச்சோடியிருக்கிறது
ஒளிர்கிறது ஊர்
ஆலமரமும் அதன் விழுதுகளும் என்றோ
வேரறுக்கப்பட்டு அவ்விடத்தில்
அமோக விளைச்சலாகக் கட்டிடங்கள்
மொட்டைமாடியில் இரவுப் படுக்கை
அண்ணாந்து பார்க்க ஆங்காங்கே
சோகையாய் சில நட்சத்திரங்கள்
***
பகலில் ஒலி மாசு இரவில் ஒளி மாசு
எப்போதும் காற்று மாசு என
மனம் முழுதும் மாசுடன்
வேட்டையைத் தொடருகிறான் மனிதன்
***
ஒளியிழந்த வானத்தில்
வழிதவறிவிடும் என பயந்து
மேகங்கள் இப்போதெல்லாம்
ஊர்ப்பக்கம் வருவேதேயில்லை
***
No comments:
Post a Comment