Friday, August 30, 2019

வேண்டும்

தூரமும் காலமும் இல்லாதொரு
உலகம் வேண்டும்
உயிரென நினைக்கும் உறவினை 
ஒரு கணமும் பிரியாதிருக்கும் 
நிலை வேண்டும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணித்து
வேறு மானுடரில்லா அவ்வுலகைச்
சுற்றி வரவேண்டும்
ஆர்ப்பரிக்கும்
நீலப் பெருங்கடலின் நுனியில்
நுரைத்திட்ட அலைகள் முத்தமிட
கைகளைக் கோர்த்து
ஈர மணலில் தற்காலிகத்
தடங்களைப் புதைத்து
நடக்கவேண்டும்
புரவியின் பிடரிபோல் காற்றில்
அலையலையாய் விரியும்
அவள் கூந்தலில் முகம்
பொதித்துக் கொள்ளவேண்டும்
கடலின் எல்லையை முத்தமிட
விரையும் மாலைச் சூரியனின்
ரேகைகள் பட்டுத் தங்கமாய்
ஜொலிக்கும் முகத்தை ஏந்தி
ஆழ முத்தமிட்டுக்
கதிரவனைப் போட்டியில்
வெல்லவேண்டும்
கரும்பச்சைப் புல்வெளிப் படுக்கையைப்
பனித்துளிகள் நனைக்க
கைகளைத் தலையணையாக்கி
அவளுடன் இதமாய்க்
கருநீல வானின் நட்சத்திரங்களை
ரசிக்கவேண்டும்
தாமதமாய்க் கூடு திரும்பும்
நிழற் பறவைகளுக்குக்
கையசைக்க வேண்டும்
வெள்ளி நகம் போல் மின்னும்
பின்னிரவுப் பிறைநிலாவின்
விளிம்பின் கூர்மைபட்டுத்
தெறித்து விழும் நட்சத்திரத்தின்
ஒளித் தடத்தை விழிகள் விரியப்
பார்க்கவேண்டும்
அடர் வனத்தின் விசித்திர ஒலிகளும்
சில்வண்டுகளின் ரீங்காரமும்
ஓயாத அலைகளின் மூச்சும்
அசையாதிருக்கும் மரங்களும்
நிரம்பித் ததும்பும் அவ்விரவில்
ஆரத் தழுவியிருக்கும் இருவரையும்
அறியாததொரு பொழுதில் உறக்கம்
தழுவ வேண்டும்
இனிய கனவுகளில் இருவரும்
காற்றைக் கிழித்துப் பாயும்
வெண்புரவியொன்றின் மேல்
சீரான குளம்பொலியின்
தாளங்களுடன்
சிலுசிலுவென உராயும் காற்றுடன்
இதயங்களின் நடனத் துடிப்புடன்
தூரமும் காலமும் இல்லா
அவ்வுலகில்
ஒரு கணமும் பிரியாது
முடிவற்ற பாதையில்
இடைநில்லா பயணத்தைத்
தொடரவேண்டும்


Image may contain: one or more people, people standing, sky and outdoor

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...