Friday, August 30, 2019

பேசா மொழி

அலகிலாக் காதலை
மடையிட்டுத் தடுத்து
இயல்பாய் இருப்பதுபோல்
இயல்பற்று இருக்கும்
தருணங்கள் தருகின்றன
அளவிலா வலியை
உன் என் நம் வலி தீர்க்க
இதமாய்ச் சொல்ல விழையும்
அறிந்த மொழியின்
தெரிந்த வார்த்தைகள்
எவையும் உதவாமல்
தோற்கும்போதெல்லாம்
இறுதியில்
இப்பேசா மொழியில்
என் உரையாடலைத்
தொடங்குவேன்
நூலிழைக்கும் இடம்தராத
என் அரவணைப்பும்
உன் மென் முகத்தில்
இளஞ்சூடு பரவ
என் உயிரைக் குவித்துத்
தரும் ஆழ் முத்தங்களும்
உன் வலிகளையும்
கண்ணீரையும் துடைத்தெடுத்துப்
புன்னகையைத் தீட்டும்
இன்னும் கண் மூடியிருப்பாய்
உன்னிதழ்களிலிருந்து
விரியும் புன்னகை
கன்னங்களைச்
சிவக்கச் செய்து
மயிற்பீலி இமைகளையும்
புருவங்களையும்
வளைத்து விரிக்கும்
லேசாய்ச் சுருங்கும்
உன் நெற்றியின் மெல்லிய
கோடுகளை மறுபடியும்
என் இதழ்களால்
சமனப் படுத்துவேன்
முடிவற்ற வலியற்ற
இவ்வுரையாடல்
தொடர்வதற்காவது
அறிந்த மொழியும்
தெரிந்த வார்த்தைகளும்
அடிக்கடித் தோற்கட்டும்

No comments:

அலகிலாக் காதல்

உன் என நினைக்குமுன்னே உள்ளில் நிகழும் நெகிழ்வையும் என் எனச் சொல்லுமுன்னே என்னில் நீ நிறைவதையும் எனக்கெல்லாம் நீயே என்பதை எவ்வார்த்...