
பின்னிரவில் கண்விழித்தெழுந்தேன்
முற்றத்து வெளிச்சம் தாண்டிச் செல்ல
கொல்லையில் உரல் நீரில்
நெளிகின்றது வெண்ணிலவு
ஓசையற்ற வான்வெளியில்
கண்சிமிட்டுகின்றன நட்சத்திரங்கள்
தொடுவானின் சோகை வெளிச்சத்தின்கீழ்
இருள் சூழ்ந்து உறங்குகிறது உலகம்
மனதுக்குள் சதா நிரம்பியிருந்து
புன்னகையுடனும் சிரிக்கும் கண்களுமாக
என்னைப் பார்க்கிறது அவள் முகம்
போர்த்தியிருந்த குளிர் இன்னும்
இறுக்கியணைக்க கதகதப்பூட்டுகிறது
அவளின் இனிய நினைவுகள்
எப்படி அவளிடம் காதல்வயப்பட்டேன்
என்று என்னிடம் நேற்று கேட்டாள்
மௌனத்தை விடையாகத் தந்துவிட்டு
இப்போது நிலவில் அவளைக்
காட்சியாக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவளைப் பார்த்த தருணத்திலிருந்து
என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கும்
கேள்வி அதுவென்று அவளறிவாளா?
யாரும் பார்த்தறியா உள்ளத்தில்
உலகளவு நிரம்பியிருக்கும் காதலுக்குக்
காரணம் கேட்டால் எப்படி பதிலிறுப்பது?
இருப்பவை நிகழ்பவை அனைத்துக்கும்
காரணங்கள் சொல்ல முடியுமென்றால்
மனிதன் கடவுளாகிவிடுவானே
நான் கடவுள் அல்ல!
கடல் போன்ற மனதில் கிளர்ந்து தோன்றும்
பிரபஞ்ச அளவு உணர்வுகளைச்
சில ஆயிரம் வார்த்தைகளே இருக்கும்
மொழிகளில் விவரிக்க இயலுமா?
முழுமையற்றது என் பதில்
என்பதை நானறிவேன்
நானறிந்த மொழிகளில்
இவ்வளவே சொல்ல முடிகிறது
நிலா! நில்! கேலிப் புன்னகை போதும்.
என்னால் ஓராயிரம் வார்த்தைகளில்
சொல்ல முடியாததை ஓரணைப்பில்
அவளுக்கு உணர்த்த முடியும் என்பதை
இப்போதும் உறங்காமல் தவித்திருக்கும்
அவளிடம் சென்று சொல்லேன்!
***
4 comments:
//இருப்பவை நிகழ்பவை அனைத்துக்கும்
காரணங்கள் சொல்ல முடியுமென்றால்
மனிதன் கடவுளாகிவிடுவானே
நான் கடவுள் அல்ல!//
நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை. இயல்பாக இருந்தது கவிதை. உரல் = கிணறுதானே? நன்று!
அன்புமணி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//உரல் = கிணறுதானே? //
இல்லீங்க. மேன்யுவல் மிக்ஸி!!! வறுத்த சிவப்பு மிளகாய் வற்றலை உரலில் குவித்து உலக்கை கொண்டு மிளகாய்ப்பொடி தயாரித்த அனுபவமுண்டா? :-) அது இல்லாவிட்டாலும் “அரிசி குத்தும் அக்கா மகளே” பாட்டைக் கட்டாயம் கேட்ருப்பீங்க. இந்த உரல் அதுதான்!
நன்றாய் இருந்தது கவிதை. அதிலும் கடைசி வரிகள்தன் எவ்வளவு உண்மை மற்றும் அருமை???
//உலகளவு நிரம்பியிருக்கும் காதலுக்குக்
காரணம் கேட்டால் எப்படி பதிலிறுப்பது?//
அழகான உணர்வுப் பதிவு. அருமை.
உரலிலிருந்து செல்லும் நிலா
உறங்காமல் தவிக்கும்
அவரிடம் சொல்லும்
உங்கள் காதலை.
Post a Comment