அடர் மழையில்
உறைந்திருக்கிறது
பகல் தெரு
ஆட்கள் திண்ணையில்
மழைமேல் நிலைகுத்திய
பார்வையுடன்
அசையாதிருக்கிறார்கள்
தெருமுனையில்
கோவில் தேரும் அதனடியில்
தெருநாய்களிரண்டும்
கற்சிற்பங்கள் போல்
அசையாதிருக்கின்றன
வெண்ணிற எருதொன்றின்
முதுகில் கருங்கோடுகளாய்
இறங்குகிறது மழை
கோபுரச் சிற்பங்களிடையே
உப்பி ஒடுங்கியிருக்கின்றன
புறாக்கள்
சீராகக் கூரையிலிருந்து
கொட்டும் தாரைகள்
மண்தரையில் குழியிட்டுக்
கண்ணாடித் துகள்போலச்
சிதறுகின்றன
கரிசலும் செம்மண்ணும்
கலந்தடித்துக்
காகிதக் கப்பல்களைக்
கவிழ்த்தோடுகின்றன
தகரக் கூரையொன்றின்மேல்
தாளமிடுகிறது மழை
ஓவென ஓயாத இரைச்சலுடன்
பெய்கிறது மழை
மழைச் சுவரின் உச்சியில்
காருஞ்சாம்பல் மேகங்கள்
விரிந்திருக்க
அந்திப்பொழுது போல்
இருள்கிறது நண்பகல்
அருவமென்று நினைத்த
காற்றும் நீரும்
உருவமெடுத்து மழையில்
நடனமாடுகின்றன
அடர் மழையில்
உறைந்திருக்கிறது
பகல் தெரு

No comments:
Post a Comment