
தேக்கின் பளபளப்பும் கம்பீரமும்
இன்னும் போகவில்லை
நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டு
ஓயாத பெண்டுல இயக்கத்துடனும்
சீராகச் சுற்றும் முட்களுடனும்
சுவரில் நிசப்தமாக வீற்றிருக்கிறது
அப்பெரிய கடிகாரம்
எத்தனை நிகழ்வுகள்!
சிறுவயதில் என்னுயரத்தையளக்க
அவ்வப்போது அதை நெருங்கி நின்று
கிழித்த கோடுகள் கால ரேகைகளாக
அப்படியே இருக்கின்றன
அது இருக்கும் பிரக்ஞையின்றி
மாச்சரியங்களுக்குள் உளைந்து
வளைய வந்து கொண்டிருந்தவர்களை
அமைதியாகக் கவனித்தது
இத்தனை காலமும்
முட்களையும் அவை காட்டிய
மணித்துளிகளையும் மட்டும்
உள்வாங்கிக்கொண்டு
அவசரமாகக் கடந்து செல்கையில்
ஒரு வினாடி நின்று - அதன்
பெண்டுலத்தில் தெரியும் என்
பிம்பத்தைப் பார்த்துவிட்டு
நகர்ந்திருக்கிறேன்
அசையும் பெண்டுலத்தில்
அசையாது தெரியும் பிம்பங்கள்
உறங்கும் உலகை இரவுகளிலும்
விழிப்புடன் கவனித்த
அக்கடிகாரம்
மன விகாரங்களையும்
உற்று நோக்குகிறதோவென்று
சந்தேகித்திருக்கிறேன்
நேற்றைய நள்ளிரவில்
வீணை நாதம் போன்று
அடிவயிற்றிலிருந்து
அது எழுப்பிய ஓசையை
இறுதியாக
நினைவிலிருந்து உறக்கத்தில் விழும்
அந்தக் கணங்களில் கேட்டேன்
காலையில் நான் விழிப்பது
அனிச்சையென நினைத்தாலும்
காற்றில் வந்து கண்ணிமைகளைத்
திறக்குமதன் மணிச்சத்தமும்
ஒரு காரணம் என்பதை
ஆழ்மனம் அறிந்தேயிருந்தது
களைத்த கரங்களைப் போல
ஆறரையில் முட்கள் துவள
பெண்டுலம் அமைதியாக நிற்கிறது
என் பிம்பத்தைப்
பிரதிபலித்துக் கொண்டு
கூடத்தில் கிடத்தியிருக்கும்
தாத்தாவின் சடலமும்
ஓரத்தில் தெரிகிறது
இரு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன
அக்கடிகாரம்
கவனியாததொரு கணத்தில்
***
2 comments:
http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html
இன்று தங்களின் பதிவு வலைச்சரத்தில் செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
நல்ல பதிவு !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
Post a Comment