அறியாமையில்
எனையறியாமல் இமைப்பதற்குள்
நடந்து முடிந்துவிடுகின்றன
சில தவறுகள்
அழைப்பொலி கேட்டுச் சட்டென
எழுந்து போகையில்
படுத்திருந்த தந்தையின்
காலில் இடறியதும்
எதன் மீதோ இருந்த கோபத்தை
கால்களையணைத்த
குழந்தையிடம் காட்டியதும்
தடுக்கி நகம் பெயர்ந்து அலற
பதறிப் போய்
பொறுத்துச் செல் என்ற
தாயிடம் சிடுசிடுத்துப் போனதும்
தெரியாமல் காலை மிதித்துவிட்ட
கன்றுக் குட்டியின்
முதுகில் அடித்ததும்
இரவில் அழுத்தி மூடிய
கதவிடுக்கில்
பல்லி நசுங்கிப் போனதும்
குறிபார்த்து எறிந்த கல்லில்
கிளையிலிருந்து
விழுந்து மரித்த ஓணானும்
நொண்டி ஓடிய நாயும்
வாலில் கட்டிய நூலைச் சுமந்து
ஊனமடைந்த தட்டானும்
நினைவில் வந்து கொல்கின்றன
அதோடு
சற்று முன் சுவருக்கு அடித்த
சுண்ணத்தில்
சிலையாய்ப் போன
எறும்பும் கூட.
***
4 comments:
Good one sundar!!!
..aadhi
//சிலையாய்ப் போன
எறும்பும் கூட.//
அறியாமல் செய்யும் பிழைகளை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள் ... பூவிலும் மெல்லியது கவிஞனின் இதயம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்
ஆதி, கோவி.கண்ணன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கீங்க. அருமை :)
Post a Comment