மடிந்த ஈசல்களின் சிறகுக் குவியல்கள்
தெருநீரில் கவிழ்ந்த காகிதக் கப்பல்
குதூகலித்து நனையும் பையன்கள்
சந்தேகத்துடன் அலையும் ஒற்றைத் தட்டான்
கோபுரச் சிற்பஙகளிடையில் ஒடுங்கிய புறாக்கள்
லேசாய் சேலை தூக்கி
நீர் சிதறாது நடக்கும் பெண்கள்
மழையின் விசைக்கு மயங்கி
நாணத்துடன் தலைகவிழும் மலர்கள்
மரக்கிளையில் கிழிந்திருக்கும் பட்டம்
உடலைச் சிலிர்த்துதறும் நாய்
மினுக்கிக் கொண்டிருக்கும் தெருவிளக்கு
பறக்க யோசிக்கும் மின்கம்பிக் காகம்
தரைச்சக்கரமாய்ச் சுருண்ட ரயில்பூச்சி
கூரையிலிருந்து சோகையாய் நீர்க்கோடுகள்
வாசலில் மண்ணொட்டிய காலணிகள்
காற்றில் மல்லாந்திருக்கும் குடை
வீட்டினுள் சிக்காது பறக்கும் வெளவால்
கொல்லைப்புற உரலில் தேங்கிய நீர்
கொடியில் தொங்கும் ஈர ஆடைகள்
உள்ளங்கால்களில் புல்தரைச் சில்லிப்பு
நரைக்கத் தொடங்கிய கருமேகங்கள்
ஒரு வழியாய் மழை விட்டிருக்கிறது.
***




3 comments:
நல்லா இருக்கு. இன்னும் எழுதுங்கள்.
நன்றி முத்து.
எழுதுகிறேன்.
இந்தக் கவிதையைப் படிக்கும் போது கண்முன் உண்மையிலேயே அத்தனை காட்சிகளும் விரிகிறது. எவ்வளவு அழகான காட்சிப் படைப்பு. எனக்கு மிகவும் பிடித்த 'அகவிதை'
Post a Comment